Editor's Choice

இளம் வயது ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சீனாவின் கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து வந்த ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது ஒரு ஆணாதிக்க அல்லது பாலினவாத அறிவிப்பு என இணையத்தில் இதுகுறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் பெரும்பாலான ஆண் முன் மாதிரிகள், வலுவானவர்களாக, ராணுவ ஹீரோக்களைப் போல இல்லை என, சீன அரசு கடந்த சில காலமாகவே தன் எண்ணத்தை வெளிக்காட்டி வந்தது.

கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய அபிமானியான சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் கூட, சீனாவில் நல்ல விளையாட்டு உச்ச நட்சத்திரங்களையும் ஆளுமைகளையும் உருவாக்க நீண்ட காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் வெளிப்பாடாக கடந்த வாரம், சீனாவின் கல்வி அமைச்சகத்திலிருந்து ஒர் அறிக்கை வந்தது. அதன் தலைப்பே சீனாவின் இலக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது.

The Proposal to Prevent the Feminisation of Male Adolescents என்கிற தலைப்புடன் வெளியான அவ்வறிக்கை, சீன பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் உடற்கல்விப் பாடத் திட்டங்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதைப் பள்ளிக் கூடங்கள் வலுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் பின்புலம் கொண்டவர்களை தேர்வு செய்யும் படியும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சீன மாணவர்களிடம் ஆண் தன்மையை அதிகப்படுத்தும் நோக்குடன் கால்பந்து போன்ற விளையாட்டுகளை அதிவேகமாக மேம்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இப்படி ஒர் அறிக்கை சீனாவிடம் இருந்து வரலாம் என்பதற்கான சில சமிக்ஞைகள் சமீப காலங்களில் பார்க்க முடிந்தது. பல சீன இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும், மென்மையானவர்களாகவும் இருப்பதாக, கடந்த மே மாதம் சீனாவின் முக்கிய ஆலோசனைக் குழுவை சேர்ந்த ஷி சிஃபு தெரிவித்திருந்தார்.

சீன இளைஞர்கள் இப்படி வளர்வதற்கு அவர்களின் வீட்டுச் சூழலும் ஒரு காரணம். வீட்டில் அம்மா அல்லது பாட்டி தான் அவர்களை வளர்க்கிறார்கள் எனவும் அவர் குறை கூறியிருந்தார்.

பல ஆண் நட்சத்திரங்கள், இளைஞர்கள் அதிக ஆண் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகமாக வைப்பதன் அர்த்தம் "பலர் ராணுவத்தில் சேர விரும்பவில்லை என்பதை காட்டுகிறது"

சீன கல்வி அமைச்சகத்திடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்த பின், சீன சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக தங்கள் விமர்சனங்களையும், தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

" 'Feminisation' என்பது அத்தனை மோசமான சொல்லா என்ன?" என வைபோ (Weibo) பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 2,00,000-க்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருக்கின்றன.

"ஆண்களும் மனிதர்கள் தான்.... உணர்வுப் பூர்வமாக இருப்பது, மென்மையாக நடந்து கொள்வது எல்லாமே மனிதர்களின் குணநலன்கள் தான்" என மற்றொரு வைபோ பயனர் பதிவிட்டிருந்தார்.

"சீனாவில் பெண்களை விட ஏழு கோடி ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு பாலின விகிதம் மோசமாக இல்லை. இந்த ஆண் தன்மை போதாதா?" என மற்றொருவர் பதிவு செய்திருந்தார்.

இப்படி சீனாவின் கல்வி அமைச்சகத்தின் அறிக்கைக்கு சீனர்கள் சமூக வலைதளம் மூலம் தங்கள் கோபத்தையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Editor's Choice

அமெரிக்க சிப்பாயால் கொள்ளையடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் கழிப்பறை இருக்கை ஏலத்தில் விடப்படுகிறது.

நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் தனிப்பட்ட குளியலறையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கழிப்பறை இருக்கை தற்போது ஒரு அமெரிக்க சிப்பாயின் குடும்பத்தால் ஏலம் விடப்படுகிறது, அவர் அதை ஹிட்லரின் தோல்வியுற்ற திட்டங்களின் நையாண்டி கலந்த நினைவூட்டலாக  எடுத்துக்க் கொள்ளப்படுகிறது. 

பெர்ச்டெஸ்கடன் (Berchtesgaden) நகரில் உள்ள ஹிட்லரின் பெர்கோஃப் (Berghof) இல்லத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கழிப்பறை இருக்கை சுமார் $ 15,000 அதாவது கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏலத்தின் தொடக்கவில்லை $ 5,000 அதாவது சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு படையின் 2 வது கவசப் பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்த ராக்ன்வால்ட் சி போர்ச் (Ragnvald C Borch) என்ற அமெரிக்க சிப்பாயின் குடும்பத்தினரால் இந்த கழிப்பறை இருக்கை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1945ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹிட்லர் இருந்த வீட்டிற்கு சென்ற நேச நாட்டு துருப்புக்களில் ஒருவராக பணிபுரிந்தவர் ராக்ன்வால்ட் சி போர்ச் (Ragnvald C Borch) என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கழிப்பறை இருக்கை மற்றும் இரண்டு ஓவியங்கள் (oil paintings) மற்றும் முதலாம் உலகப் போரின் கவச உடையையும் ஹிட்லரின் வீட்டில் இருந்து தனது பங்காக எடுத்துக் கொண்டார் போர்ச். ஹிட்லர் இறந்த பின்னர் அவரது படைகள் சரணடைந்தபோது, நேசப் படைகளை சேர்ந்த சிப்பாய்கள் சர்வாதிகாரியின் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து பங்கிட்டுக் கொண்டனர்.

நாஜி தலைவரின் குடியிருப்பு குண்டுவெடிப்பால் பெரிதும் சேதமடைந்தது மற்றும் தீப்பிடித்தது என்றாலும், சில பொருட்கள் அந்த நிலையிலும் சூறையாடப்பட்டன.

இதுபோன்ற வித்தியாசமான நினைவுச்சின்னங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போர்ச்சின் வாரிசுகள் கூறுகின்றனர்.

Editor's Choice

மியான்மரில் பேஸ்புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில், கடந்த நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் நடந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றி, ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி, அமோக வெற்றி பெற்றது. இது, 2015 பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து, தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வத்து வந்தனர். எனினும், அதற்கான ஆதாரங்களை, அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் போனது. ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையமும், கடந்த வாரம் நிராகரித்தது.பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.

இந்நிலையில், மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம், 'பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுகிறது. இதனால், நாட்டின் பாதுகாப்பை பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளது.

Editor's Choice

2020 இந்தியா வல்லரசு ஆகும் என்று அப்துல் கலாம் கனவு கண்ட ஆண்டு. ஆனால் ஒட்டுமொத்த உலகமே கொரோனாவாலும் பொது முடக்கத்தாலும் முடங்கிப்போனது. அது தமிழ் சினிமாவையும் பாதித்தது.

ரஜினிகாந்தின் `தர்பார்’, தனுஷின் `பட்டாஸ்’ என அதிரடியாகத்தான் அந்த ஆண்டை ஆரம்பித்தது தமிழ் சினிமா. அறிமுக இயக்குநர்களின் படங்களும் மார்ச் மாதம் வரை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி கோடை விடுமுறைக்காக `மாஸ்டர்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருந்த போதுதான், மார்ச் மாதத்தில் பொதுமுடக்கம் இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன.

கடந்த சில மாதங்களாகத்தான் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறது. திரையரங்குகளும் நவம்பர் மாதம் முதல் 50 சதவிகித இருக்கை வசதியோடு திறக்கப்பட்டன. மக்கள் அச்சமின்றி திரையரங்குகளுக்கு வருவார்களா என்கிற பயத்தோடு சில படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன. தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களை என்ன செய்வதென்று அறியாமல், சில படங்களை தியேட்டரில் ரிலீஸும் செய்தனர். பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் ரிலீஸான படங்களையும், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பழைய படங்களையும் வெகு சில மக்களே பார்த்தனர்; அதில் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு மட்டும் பரவலாகக் கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் சினிமா தனது பழைய இயல்புக்குத் திரும்ப இவை போதுமானதாக இல்லை. தற்போது அதையெல்லாம் மாற்றி, தனது மாஸ் ஓப்பனிங் மூலம் பலருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார், விஜய்யின் ’மாஸ்டர்.’

100 சதவிகித இருக்கைகள் என்கிற ஆவலோடு பட ரிலீஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்த படக்குழுவுக்கு, 50 சதவிகித மாற்றம் ஒரு பின்னடைவாக இருந்த அதே வேளையில்தான், `மாஸ்டர்’ படத்தின் சில காட்சிகளும் இணையத்தில் லீக் ஆகி, அது சமூக வலைதளங்களில் அதிகமாகவும் பகிரப்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்த படக்குழுவுக்கு, `மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி மருந்தாக இருந்திருக்கும்.

ஏனென்றால், எந்த மாற்றமும் இல்லாமல் தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கு `மாஸ்டர்’ படம் வெளியானது. முதல் இரண்டு காட்சிகளுக்குப் பல திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை அளவைக் கடைப்பிடிக்காமல், 100 சதகிவித இருக்கைகளோடு இயக்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்ததைப் போலவே, கேரளாவிலும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ஆந்திராவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல்முறையாக விஜய்யின் படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, மும்பைத் திரையரங்குகளிலும் வெளியானது. இந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களே ஓ.டி.டியில் ரிலீஸாக, இந்தியில் டப் செய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படம், மும்பையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட ஓ.டி.டி வெளியீட்டுக்குத் தயாராக இருந்த தனது `ராதே’ படத்தைத் திரையரங்குகளிலேயே வெளியிட முடிவெடுத்திருக்கிறார் சல்மான் கான்.

இதுகுறித்து ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமாரிடம் பேசியபோது, “அனுமதிக்கப் பட்ட 50 சதவிகித இருக்கைகள்தான் என்ற நிலையிலும் படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். எங்களைப் போன்றே படத்தின் மீது திரையரங்க உரிமை யாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நம்பிக்கை அதிகமாக இருந்ததுதான் படம் ரிலீஸாகக் காரணம்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், `` ‘மாஸ்டர்’ படம் தியேட்டரில் வெளிவரணும்னு நான் சொன்னபோது, என்னை எல்லோரும் கிண்டல் பண்ணுனாங்க. ஆனால், இந்தப் படம் வெளியான எல்லா இடங்களிலும் இப்போ நல்லா ஓடிட்டு இருக்கு. அதையும் தாண்டி கேரளா மற்றும் வடமாநிலங்கள், சில நாடுகளில் கொரோனாவுக்குப் பிறகு வெளியாகிற முதல் படமே ‘மாஸ்டர்’தான். ‘மாஸ்டர்’ படத்தின் வசூல், சினிமாத்துறையின் உயிர்ப்புக்குப் பேருதவி செய்திருக்கு” என்கிறார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு “திரையரங்குக்கு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் `மாஸ்டர்’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் எங்கும் இதனால் கொரோனாப் பரவல் அதிகரித்ததாகத் தெரியவில்லை. இது மக்களிடம் இருக்கும் பயத்தைக் குறைத்திருக்கிறது. `மாஸ்டர்’ படத்தின் இந்த வசூல் எங்களைப்போன்ற தயாரிப் பாளர்களுக்கு மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களுக்கும் சினிமாவில் முதலீடு செய்யும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. ஓ.டி.டிக்காக படத்தை விற்க நினைத்த பலரும் இன்று தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்க்கும் நிலை வந்துள்ளது.

`மாஸ்டர்’ படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் இந்தியத் திரையுலகுக்குப் பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு துறையை மீட்டெடுக்கப் பாடுபட்ட பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டும் அதே வேளையில், கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் அதன் விளைவுகளை மனதில் வைத்து திரையரங்குகளும் பார்வையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதும் அவசியம்.

Editor's Choice

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கருத்து தெரிவித்த சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த போராட்டத்துக்கு சில அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு டுவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார், 153ஏ, 120 பி ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் பின்னர் கிரேட்டா தம்பர்க் டுவிட்டரில் மீண்டும் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நான் இன்னும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளேன். அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எந்த வெறுப்பு, அச்சுறுத்தல், மனித உரிமை மீறல் ஆகியவை அதனை மாற்றாது என தெரிவித்துள்ளார்.

Editor's Choice

ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதை எதிர்த்து, கடந்த 25-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் சிங்கப்பூர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தவிர, விதிமுறைகளை மீறியதற்காக ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியோனி உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறது.

ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப் பட்டதால் நிறுவனத்தைக் காப்பாற்றவும் கடனை அடைக்கவும், பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் ஃபியூச்சர் குழுமத்தை விற்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காக ரிலையன்ஸ் குழுமத்துக்கு ரூ.24,713 கோடிக்கு விற்க கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், ஃபியூச்சர் குழும நிறுவனங்களில் மறைமுகமாக 5% அளவு பங்கை அமேசான் வைத்திருக்கிறது. அதனால் அமேசானின் அனுமதியைப் பெறாமல் ஃபியூச்சர் குழுமம், ரிலையன்ஸுக்கு விற்க முடியாது என்பதுதான் அதன் வாதம்.

ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு செபி அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்த பிறகு, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது. இதனிடையே இரு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது எனப் பலமுறை செபிக்கு அமேசான் விண்ணப்பித்தது. மேலும், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என செபிக்கு அமேசான் கோரிக்கை விடுத்தது. ஆனால், செபி, பி.எஸ்.இ, சி.சி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஜனவரி மாத தொடக்கத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ‘‘ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி சிக்கலில் இருக்கிறது. இது தொடர் பாகப் பல திட்டங்களுடன் எட்டு முறைக்கு மேல் அமேசான் நிறுவனத்துடன் தொடர்புகொண்டோம். அப்போதெல்லாம் உதவிக்கு வராத அமேசான், தற்போது ரிலையன்ஸ் உடன் இணையும்போது அதைத் தடுப்பதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

அமேசான், சமரா கேப்பிடல் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை எந்தவிதமான பலனையும் தரவில்லை. இந்த நிலையில்தான், ரிலையன்ஸ், ஃபியூச்சர் குழுமத்தை மீட்க வந்திருக்கிறது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பலனும் இல்லை. 30 ஆண்டுக் காலமாக உருவாக்கிய ரீடெயில் பிசினஸை நான் இழக்க வேண்டியிருக்கும்’’ என பியானி சொல்லியிருந்தார்.

அமேசான் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து வெளியேறியது. சீன நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தோல்வி அடைந்தது. சீனாவுக்கு அடுத்து மிகப் பெரிய சந்தை இந்தியாதான். தற்போது ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றால், இந்திய ரீடெயில் பிரிவில் ரிலையன்ஸின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதனால் ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்க முடியாத அளவுக்குத் தடைகளைத் தொடர்ந்து அமேசான் உருவாக்கி வருகிறது.

பக்கம் 61 / 90