Editor's Choice

அமெரிக்க இராணுவத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது.

ராணுவத்தில் உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை போனிடெயிலாக போட்டுக்கொள்ளலாம் என்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம் என்றும் ஆண்கள் நக பாலிஷ்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்காகவும் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது உள்சட்டை ஒன்றை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றங்கள் பிப்ரவரி 24 முதல் நடைமுறைக்கு வரும்.

இது பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்கை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறிய அமெரிக்க இராணுவம், பெண் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மாறுபட்ட தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக அதன் சீர்ப்படுத்தும் தரத்தை புதுப்பித்துள்ளது.

கடந்த காலங்களில் நீண்ட தலைமுடி கொண்ட பெண்கள் அதை கொண்டையாக போட வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தை அளித்ததோடு, தலைக்கவசம் அணியும் போதும் அதிக பிரச்சனைகளைக் கொடுத்தது.

இராணுவத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் கலவையான பின்னூட்டங்களைப் பெற்றது. பலர் இந்த நடவடிகையை பாராட்டினர். சிலர் இதை கிண்டலும் செய்தனர்.

சேவையில் உள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் கூந்தலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அமெரிக்க விமானப்படை தனது விதிகளை மாற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) திங்களன்று ஒரு உயர்நிலை ஆணையில் கையெழுத்திட்டார்.  இது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான, அவருக்கு முந்தைய அதிபரால் விதிக்கபட்ட, சர்ச்சைக்குரிய தடையை ரத்து செய்தது. இது எல்.ஜி.பீ.டி.கியூ ஆதரவாளர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றையும் ஜோ பைடன் பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் உடனிருக்கையில் பைடன் ஓவல் அலுவலகத்தில் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

 

Editor's Choice

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழை கிண்டலடித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “தமிழ் மொழியை ஆதாம், ஏவாள் பேசினார்கள், செவ்வாய் கிரகத்தில் இருப்பவர்கள் கூட தமிழ் பேசுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவ்வப்பபோது செய்திகளில் அடிபடுவது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜுவின் வழக்கம். அவ்வப்போது தமிழ் குறித்தும், தமிழர் குறித்தும் சீண்டல் கருத்துக்களை வெளியிடுவார்.  அந்த வகையில் சமீபத்தில் சில இந்தி பாடல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தவர், அந்த பாடல்களை தமிழர்கள் மனப்பாடம் செய்து பாடினால், இந்தி மீதான விரோதப் போக்கு மறையும் என்று குறிப்பிட்டார்.

கிண்டலான அந்த பதிவுக்கு பலரும் சீரியஸாக அவரை விமர்சித்தனர். இதனால் கடுப்பான கட்ஜு, ஜோக்கை கூட புரிந்துகொள்ளாத அளவிற்கு தமிழர்கள் உள்ளார்கள். வளர வேண்டும் என்றார். அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், மீண்டும் ஒரு கிண்டல் பதிவை போட்டுள்ளார். அதில், “இந்த பூமியில் பழமையான மொழி தமிழ். ஆதாம் - ஏவாளால் கூட பேசப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்களால் கூட பேசப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் கேரள மக்களை நேசிக்கிறேன். அவர்களுடனான ஒரே பிரச்சனை என்னவென்றால், உடனுக்குடன் தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பு கொண்டவர்கள். ஒருமுறை நான் திருவனந்திபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்றபோது, அங்குள்ள பணியாளர்களுக்கு அரை டஜன் தொழிற்சங்கங்கள் இருப்பதைக் கண்டேன்.” என பதிவிட்டுள்ளார். தமிழர்களும், கேரளத்தவர்களும் அவருக்கு பதிலடி தந்து வருகின்றனர்.

Editor's Choice
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியிட்டனர். ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டர்களில் வந்து மாஸ்டர் படத்தை பார்த்தனர். 
 
நல்ல வசூலும் ஈட்டியது. அடுத்து மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கபட்டது.  இதன்படி, மாஸ்டர் திரைப்படம்  ஒடிடியில் வெளியானது.  தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வரும். ஆனால் மாஸ்டர் 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியாவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனாவால் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice
சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
 
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசினார்.
 
தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். 
 
அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
2021-ம் ஆண்டில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். 2 முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், வருகிற தேர்தலில் முழுமையாக ஈடுபட உள்ளேன். 
 
அதற்காக சின்னத்திரையில் நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா கூறினார்.
Editor's Choice

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, 90 வயது மூதாட்டி கார் ஓட்டும், 'வீடியோ' சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மஹாராஷ்டிராவின், தானே மாவட்டதின் பாதல்பூரை சேர்ந்தவர், கங்காபாய் மிர்குடேவுக்கு வயது 90. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர், இவரது பேரனிடம் இருந்து, மூதாட்டி கங்காபாய், தற்செயலாக கார் ஓட்ட கற்றார். இவரது பேரன் சமீபத்தில் வாங்கியுள்ள புதிய காரை பாட்டியிடம் காட்டி, ஆசி வாங்க வந்தார். அப்போது, அந்த காரை, மூதாட்டி கங்காபாய் மிக திறமையாக ஓட்டியதை கண்டு ஆச்சரியமடைந்தார்.

அதை தன், 'மொபைல் போனில்' படம் பிடித்த பேரன், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலர், மூதாட்டி கங்காபாயின் மன உறுதியை பாராட்டி வருகின்றனர். மூதாட்டி கங்காபாய்க்கு, ஓட்டுனர் உரிமம் இல்லை. 'விரைவில் பிறந்த நாள் கொண்டாடும் பாட்டிக்கு, ஓட்டுனர் உரிமத்தை பரிசாக அளிக்க உள்ளோம்' என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை அந்த மூதாட்டி நிரூபித்துள்ளார்.

Editor's Choice

பாகிஸ்தானில் விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏர்பஸ் ஏ-320 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.  அந்த விமானம் ரகீம் யார் கான் என்ற பகுதியருகே வந்தபொழுது, வானில் திடீரென அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு ஒன்று தோன்றியுள்ளது.
 
இதனை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி கண்டு அதிர்ந்துள்ளார்.  பின்னர் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.  இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.
 
இதுபற்றி விமானி கூறும்பொழுது, சூரியஒளி இருக்கும்பொழுது அதனை விட மிக பிரகாசமுடன் அந்த பறக்கும் தட்டு காணப்பட்டது.  பகற்பொழுதில், விமான பயணத்தில் இதுபோன்ற அதிக பிரகாசம் கொண்ட பொருள் ஒன்றை காண்பது மிக அரிது.
 
வானில் தென்பட்ட அந்த பொருள் கிரகம் இல்லை.  ஆனால், பூமிக்கு அருகே காணப்படும் விண்வெளி நிலையம் அல்லது ஒரு செயற்கை கிரகம் ஆக கூட அது இருக்கலாம் என கூறினார்.
 
அந்த விமானி வீடியோ எடுத்தது போக, ரகீம் யார் கான் பகுதியில் வசிக்க கூடிய குடியிருப்புவாசிகள் கூட பறக்கும் தட்டை கண்டுள்ளனர்.  அவர்களும் வீடியோ எடுத்துள்ளனர்.
 
இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அது பறக்கும் தட்டா அல்லது வேறு எதுவும் இருக்கிறதா? என உறுதியாக கூற முடியாது.
 
அந்த பொருள் என்ன என்பது பற்றி உடனடியாக எதுவும் கூறிவிட முடியாது.  உண்மையில், அந்த பொருள் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை.  எனினும் வானில் ஏதோவொன்று தென்பட்டு உள்ளது.  அதுபற்றி விதிமுறைகளின்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
 
விமானி எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

பக்கம் 65 / 90