Editor's Choice

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்துள்ள உத்தரவினை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 2016ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜன.,19 அன்று, ஒரு தீர்ப்பு அளித்தது.'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, அந்த நபரை விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கொண்டு சென்றார். உயர்நீதிமன்ற கிளையில் இந்த தீர்ப்பானது, இடையூறு ஏற்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற கிளையானது, பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது எனக்கூறி குற்றவாளி விடுவிக்கப்பட்டதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தெரிவித்தார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், உயரநீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தனர்.

இதற்கிடையே, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், மஹாராஷ்டிர அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. நாக்பூர் கிளையின் தீர்ப்பை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor's Choice

'President of India' இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திர போஸை பெருமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் அவரது உருவப்படத்தைத் திறந்துவைத்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்தப் படங்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், அது உண்மையில் சுபாஷ் சந்திர போஸின் படமல்ல, அது அவர் வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் படம் என திரிணமுல் காங். உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். 2019-ல் ஆண்டு ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மரணம் பற்றி 'கும்னாமி' என்னும் பெங்காலி திரைப்படம் வெளியானது. இதில் சுபாஷ் சந்திர போஸாக நடித்தார் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி. இவரது படத்தைத்தான் ராஷ்டிரபதி பவனில் திறந்து வைத்திருப்பதாகச் சிலர் குறிப்பிட இது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'President of India' இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 'இந்த அளவுக்கா அலட்சியமாக இருப்பது?' என சிலர் விமர்சித்து வருகின்றனர். சிலர் அது நேதாஜி ஓவியம்தான் என்கின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடம் இருந்து அவரது புகைப்படத்தை பெற்று பத்மஸ்ரீ விருது வென்ற ஓவியர் பரேஷ் மைதி வரைந்த ஓவியத்தை தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அந்த ஓவியம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் குறிப்பிடும் கருத்து தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

பலா மரத்தின் இலையில் இருந்து மரப்பட்டை, பழம், விதை, பிசின் எல்லாமே மருந்துக்கு பயன்படுகிறது. பலாவின் பலம் என்ன என்று பார்த்தால் ஒரு பலாப்பழத்தில் குறைந்தபட்சம் 100 சுளை, 100 விதைகள் என்று இருக்கும். ஆண்களுக்கு  உயிரணுக்கள் குறைவாக இருக்கிறது என்றால், மிகப்பெரிய அளவில் உயிரணுக்களைப் பெருக்கும் முக்கிய சக்தியாக பலா மரத்தின் பட்டை, கொட்டை, பிசின் இருக்கிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் அதிகமாக இருக்கும்போது, பலாமரத்தின் மரப்பட்டை, இலை கஷாயம் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. பலாமரம் எப்போதும் மிகப் பொறுமையாக வளரும் மரம். ஆனால், இந்த மரத்தின் பலன்களோ மிகப்பெரியது. பலாமரத்தின் பட்டை,  இலை கஷாயம்- மூலம், பவுத்திரம் என்று உபத்திரவம் கொடுக்கும் வலிகள் நிறைந்த  பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.
 
உடல்  வலி என்றால், பலா மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் பழுத்த இலைகளை எடுத்து வந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளித்தால் உடல் வலி பறந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாறு இலைகளை கொதிக்க வைத்த தண்ணீரில் குளித்தால் உடல் அசதி இருக்காது. வாதம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு வாதம் குறையும்.
 
தோல் மினுமினுப்பாக, பளபளப்பாக வேண்டும் என்று நினைத்து கடையில் விற்கும் வெளிப்பூச்சுக்களை வாங்கி  பயன்படுத்தி வருபவர்கள் தினமும் இரண்டு பலாச்சுளைகளை சாப்பிட்டு வந்தால்  நிச்சயம் பலன் கிடைக்கும். 100 நாட்கள் இப்படி சாப்பிட்டு பாருங்கள், உங்களது தோல் மினுமினுப்பாக பளபளப்பாக ஜொலிக்கும்.

பலாப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதிக்கு கெடுதல் இல்லை. பலாப்பழத்தில் குளுக்கோஸ் இல்லை, சுக்ரோஸ் மட்டுமே இருப்பதால், இது வயிற்றில் சென்று எந்த பக்கவிளைவையும் உண்டாக்காமல் அப்படியே  வெளியில் வந்துவிடும்.
 
உடல் எடை குறைய வேண்டுமானால், காலை மதியம் இரவு என்று சாப்பிடுவதற்கு முன்னர் இரண்டு பலாச்சுளையை சாப்பிட்டு வர வேண்டும். பலாப்பழத்தில் புரோட்டீன் மட்டுமே நிறைந்து உள்ளதால், உடல் எடை கூடாது. ஆனால், சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும். சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கும். பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பலாப்பழத்தை உணவாக சாப்பிடலாம். ஆனால், மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது நிச்சயம் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது.

Editor's Choice

ஐநா.,வின் ஒரு பகுதியான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தொழில்கள் பல முடங்கின. இதனால் 8.8 சதவீத வேலை நேரம் உலக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ரெஸ்டாரன்ட்கள், பார்கள், அங்காடிகள், விடுதிகள் இதர சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர்கள் வேலை இழந்த பின்னர் மீண்டும் மற்றொரு வேலைக்கு முயற்சிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அப்போது பலர் வேலை இழந்தனர். ஆனால் 2020ஆம் ஆண்டு அதேபோல நான்கு மடங்கு ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக தொழிலாளர் அமைப்பு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் கை ரைடர் கூறுகையில் 1930-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தொழில் முடக்கத்தை அடுத்து 2020 இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.. இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Editor's Choice

`மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் அளிக்கப்படும்' என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசி தரூர் பாராட்டியிருந்தார். `இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால் சமூகத்தில் இல்லத்தரசிகளின் மதிப்பும் அதிகாரமும் உயரும்” என்று சசி தரூர் குறிப்பிட்டிருந்தார்.

சசி தரூரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி கமல்ஹாசனின் திட்டத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது அன்புக்குரியவர்களிடம் நாங்கள் கொள்ளும் உறவுக்கு விலை அட்டையை ஒட்ட வேண்டாம். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்கு எங்களுக்கு ஊதியம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாகப் பார்க்காதீர்கள். எங்கள் வீட்டில் நாங்கள் ராணியாக இருப்பதற்கு விலை நிர்ணயம் எதற்கு? இதற்குப் பதிலாக உங்களை நேசிக்கும் பெண்ணை அன்பு, காதல் மற்றும் மதிப்புடன் நடத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலிக்க, இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு ஊதியம் வழங்குவது சாத்தியமா? இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது...

“பொதுவாக, வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகள் மதிப்பீடு செய்யப்படுவதே இல்லை. மாறாக அவர்களின் உழைப்பு அலட்சியப்படுத்தப் படுகிறது. அவர்கள் செய்யும் வேலைகளால் தான், வீட்டு ஆண்களும் பிள்ளைகளும் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிகிறது என சில பெண்கள் தெரிவித்தனர்.

“இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்கும் திட்டம் குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாறாக, பெண்களின் திறமையும், அவர்களின் உழைப்பும்தான் மட்டுப்படுத்தப்படும். ‘அரசாங்கம்தான் இல்லத்தரசிகளின் வேலைக்கு சம்பளத்தை தீர்மானித்திருக்கிறதே, எதற்காக வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்று படித்த பெண்கள்கூட நினைக்கலாம். அல்லது ஆண்களும், அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன் மனைவியை வேலைக்கு அனுப்ப மறுக்கலாம்.

இப்படியான சூழல் உருவாகும்போது, பெண்கள் மீண்டும் சமையலறைகளில் முடங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பதிலாக அவர்களின் திறனை வளர்க்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சிகள் வழங்குவது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிதியுதவி செய்து அவர்களின் தொழில்முனையும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்” என வங்கி ஆலோசகர் தெரிவிக்கிறார்.

ஹாங்காங்கில் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு தனியாக ஊதியம் கிடையாது. அங்கே பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறவர்கள். கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால், வீட்டு வேலைகளைப் பார்க்க பணிப்பெண்களை அமர்த்திக்கொள்ளலாம். பணிப்பெண்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், இந்தோ னேசியா நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது குறைந்த பட்ச ஊதியம் மற்றும் பணிக்கால விதிகளுடன்கூடிய ஒப்பந்தம், விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பணிப்பெண்களை வேலைக்கு வைக்காதவர்கள், பேறுகால விடுப்பு முடிந்து பணிக்குப் போகும்போது குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டுச் செல்லலாம். அரசு காப்பகங்களில் கட்டணம் இல்லை. சில வீடுகளில் தாத்தா பாட்டிகள் பிள்ளைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் செலவழிக்கிற நேரத்துக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது விதியில்லை. சீன கலாசாரத்திலேயே உள்ளது.

ஹாங்காங்கில் கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில், அங்கே கணவர்களைத் தேர்ந்தெடுப்பது பெண்கள்தாம். கணவருக்கும் இரண்டு மாதங்கள் வரை பேறு கால விடுப்பு கிடைக்கும். மனைவி விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தால், கணவனின் விடுப்பை நிறுவனங்கள் அங்கே நீட்டித்துத் தருகிறார்கள்.

‘’இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் முறை ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இங்கு பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதால், பெண்களுக்குத் தேவையான மற்ற எல்லா உதவிகளையும் அரசாங்கம் செய்துவருகிறது. உதாரணத்துக்கு, கருத்தரித்த பெண் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். கணவர் வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசாங்கத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  

குழந்தையைக் காப்பகத்தில் விடுவதற்கான பண உதவியையும் அரசாங்கம் வழங்குகிறது. ஒருவேளை குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்து, அம்மா எந்நேரமும் அக்குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்தப் பெண்ணால் வேலைக்குச் செல்ல முடியாது. இதற்கும் அரசாங்கம் உதவி செய்யும். வேலையில்லாமல் அடுத்த வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் சில மாதங்களுக்கும் அரசாங்கத்திடம் இருந்து  பெண்கள் நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம். 

இப்படி,  தேவைப்படுகிற கால கட்டத்தில்தான் அரசாங்கம் உதவிகளைச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் அன்றாட வீட்டு வேலைகளைக் கணக்கிட்டு, அதற்கு ஊதியம் வழங்குவது பெண்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிடும்.  இல்லத்தரசிகளுக்கு அரசாங்கமே ஊதியம் கொடுக்க ஆரம்பித்தால் ‘நீ வீட்டுவேலை மட்டும் செஞ்சா போதும்’ என்று கணவரும், கணவரின் குடும்பத்தாரும் பெண்களை வீட்டுக்குள் உட்கார வைத்துவிடலாம் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

 

Editor's Choice

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, ஒரு நாளுக்கு  முதல்வராக செயல்பட்டார்.

உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் இவர் தான். இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார்.

ஜனவரி 24ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

பெண்களின் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் கெர்சாய்ன் என்கிற கோடை கால மாநில தலைநகரிலிருந்து, உத்தராகண்ட் மாநில முதல்வராக செயல்பட்ட சிருஷ்டி, பல்வேறு மாநில அரசின் திட்டங்களை பரிசீலித்தார் என்றும் தெரிகிறது.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை ஆய்வு செய்தார்.

சிருஷ்டி உத்தரகன்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.

முன்னதாக, சிருஷ்டியை ஒரு நாள் முதல்வராக பதவியேற்கச் செய்வது குறித்து உத்தராகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், அம்மாநிலத்தின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

"இது உண்மை தானா என்பதை என்னால் நம்ப முடியவில்லை, நான் மிகவும் மகிழ்கிறேன். அதே நேரத்தில், இளைஞர்கள் மக்களின் நலன் சார்ந்து வேலை பார்க்கும் போது, நிர்வாகத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்படுவேன்" என்று தெரிவித்துள்ளார் சிருஷ்டி கோஸ்வாமி.

உத்தரகாண்ட் மாநில அரசின் இந்த புதுமையான நடவடிக்கையை பலரும் வரவேற்று கருத்துத் தெரிவித்து வந்தாலும், மறுபுறம் இதனால் உண்மையில் ஏற்படும் தாக்கம் என்னவென்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பக்கம் 67 / 90