Editor's Choice

வரலாற்று ரீதியாகச் சொல்லப் போனால் துணை அதிபர்களுக்கு ஒன்றும் பெரிதாக வேலையில்லை. அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது மிகவும் குறைவாக புரிந்து கொள்ளப்பட்ட, எள்ளி நகையாடப்பட்ட ஒரு பதவி. பெரும்பாலும் அமெரிக்கக் கூட்டாட்சியில் அரசமைப்புச் சட்ட ரீதியாக பெரிய பங்களிப்பு இல்லாத பதவிதான் இது. நீண்ட காலமாக இந்த பதவி இப்படித் தான் இருந்தது.

"வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது, அதிபர் இல்லாமல் போனால் அந்த இடத்தை நிறைவு செய்வதற்கான பதவி" என்கிறார் விர்ஜீனியா பல்கலைக்கழக மில்லர் மையத்தின் அமெரிக்க அதிபர் தொடர்பான ஆராய்ச்சித் துறை இயக்குநர் பார்பரா பெர்ரி.

அதிபருக்கு உயிரிழப்போ, செயல்பட முடியாத அளவுக்கு உடல் நலக்கேடோ ஏற்படாவிட்டால், வெறுமனே காத்திருப்பதுதான் அதிபரின் பணியாக இருக்கும்.

"நான் தினமும் அதிபர் பதிலளிப்பார் என்கிற நம்பிக்கையில் வெள்ளை மாளிகையின் கதவைத் தட்டுவேன்" என கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க துணை அதிபராக இருந்த ஒருவர் கூறினார் எனச் சுட்டிக்காட்டுகிறார் பெர்ரி.

அதே நேரத்தில் இந்தப் பதவியை குறைத்து மதிப்பிடவும் முடியாது. அமெரிக்காவின் 45 அதிபர்களில் 8 பேர் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கிறார்கள். அதாவது சுமார் 20 சதவீத அதிபர்கள், தங்களின் துணை அதிபர்களுக்கு திடீரென பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக 78 வயதில் அதிபராக பதவியேற்பவர் ஜோ பைடன் தான். இது அமெரிக்க துணை அதிபர் பதவியின் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறது.

1970-கள் வரை அமெரிக்காவில் துணை அதிபர்கள் அதிகம் பங்களித்ததில்லை. அதற்குப் பிறகு அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலத்தில் தான், துணை அதிபர்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஜோர்ஜா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஜிம்மி கார்ட்டர், அதிக அரசியல் தொடர்பு இல்லாதவராகத்தான் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவந்தார். "தனக்கு வாஷிங்டன் டிசியில் நிலவும் அரசியல் சூழல்கள் அத்தனை தெளிவாகத் தெரியாது என்பதை அவர் அறிந்திருந்தார்" என்கிறார் பெர்ரி.

எனவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட பின், வால்டர் மாண்டேல் என்கிற நீண்ட கால அமெரிக்க செனட் அவை உறுப்பினரை, வாஷிங்டன் டிசியின் அரசியல் சூழலைக் விளக்குவதற்காக, துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்தார் ஜிம்மி கார்டர்.

அந்தக் கூட்டணி அமெரிக்காவுக்குப் புதிதாக இருந்தது. அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் பதவிகளில் புவியியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த ரீதியாகவோ ஒரு சம நிலையைக் கொடுப்பதாக இருந்தது அது. அவர்களின் சாதூர்யமான இந்த திட்டம் பல முறைப் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் சமீப காலங்களில் தொடர்ந்தது. பராக் ஒபாமா பெரிய அளவில் அரசியலில் அறிமுகமில்லாத புது முகமாகத் தான் களமிறங்கினார். அமெரிக்க செனட் அவையில் 35 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட ஜோ பைடனுடன் கை கோர்த்தார்.

டொனால்ட் டிரம்ப், மைக் பென்ஸ் உடன் கை கோர்த்தார். மத விவகாரத்தில் பென்ஸுக்கு இருக்கும் பெயர் டிரம்பின் பிம்பத்தை பாதுகாக்கும் என நம்பப்பட்டது. அதே போல தற்போது கமலா ஹாரிஸ், ஜோ பைடனின் வயது, பாலினம், இனம் போன்றவைகளுக்கு ஒரு சமநிலையைக் கொடுக்கிறது.

அமெரிக்க துணை அதிபர், அமெரிக்க செனட் சபையின் தலைவராகவும் செயல்படுவார். எனவே இந்த முறை துணையதிபர் பதவி, ஜனநாயகக் கட்சிக்கு எத்தனை முக்கியமானது என்பதை இது உணர்த்தும்.

தற்போது செனட் அவையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி 50 - 50 இடங்களைப் பெற்றுள்ளன. ஏதோ ஒரு பிரச்சனையில் இரு தரப்பும் 50-50 வாக்குகளை இட நேர்ந்தால், இறுதியாக அவைத் தலைவர் கமலா ஹாரிஸ் தன் வாக்கை அளிப்பார். அது செனட் மேலவையில் தீர்மானிக்கும் வாக்காக இருக்கும்.

ஒபாமா மற்றும் பைடன், அதிபர் மற்றும் துணையதிபராக வெள்ளை மாளிகையில் இருந்த போது, தங்கள் நட்பை பல முறை வெளிப்படுத்தினார்கள். அதிபர் மற்றும் துணை அதிபருக்கிடையில் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருக்க வேண்டும் என்பது தேவையான ஒன்றாகக் கருதப்படவில்லை என்கிறார் பெர்ரி.
 
ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே, அதிபர் வேட்பாளருக்காக பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டி போட்டுக் கொண்ட போது, மேடை விவாத்தில் கமலா ஹாரிஸ், பைடனை தாக்கியதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கும். "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்" என பைடன் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார் பெர்ரி,

பைடன் துணையதிபராக இருந்த போது எப்படி இருந்தாரோ அப்படி, கமலா ஹாரிஸின் பங்களிப்பை பைடன் கோரலாம்.

2020 ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், தனது துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிமுகப்படுத்திய போது, 2008-ல் பராக் ஒபாமாவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பைடன்.

துணை அதிபர் பதவியிலிருந்து பைடன் என்ன விரும்புகிறார் என ஒபாமா கேட்டார்.

"முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அறையில் கடைசி நபராக இருக்க விரும்புகிறேன்" என நான் ஒபாமாவிடம் கூறினேன் என்றார் பைடன்.

"அதைத்தான் நான் கமலாவிடம் கேட்டேன். எப்போதும் என்னிடம் உண்மையைச் சொல்ல, அறையில் கடைசி குரலாக கமலா இருக்க வேண்டும் எனக் கேட்டேன்" என்றார் பைடன்.

ஜனநாயகக் கட்சியில் இருக்கும் இடது சாரிகளின் தொடர் விமர்சனத்துக்குப் பிறகும், கமலா ஹாரிஸ் செனட் அவையில் மிகவும் சுதந்திரமாகவே வாக்களித்தார். இப்படி செனட் அவையில் சுதந்திரமாக கட்சி சார்பின்றி வாக்களித்த செனட்டர்களில் கமலா ஹாரிஸும் ஒருவர்.

ஒருபாலின உறவுக்காரர்கள் உரிமைகள், குடியேற்றம், மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவது, துப்பாக்கி கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில் முற்போக்காகச் சிந்தித்து வாக்களித்தார்.

அவர் செனட் அவைக்கு வருவதற்கு முன் கலிபோர்னியாவின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவராக பணியாற்றினார்.

ஆனால் பல விஷயங்களில் முதல் துணையதிபராக பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. "நான் அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபராக இருக்கலாம், ஆனால் நான் நிச்சயம் கடைசி பெண் துணையதிபராக இருக்கமாட்டேன்" என்கிறார் கமலா.

பைடன் அடுத்த முறை அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்பது ஹாரிஸுக்கு ஒரு சமநிலைப்படுத்துவதாக இருக்கும். இப்போது பைடனுக்கு எப்படி ஒரு விசுவாசமான கூட்டாளியாக இருப்பது, அதே நேரத்தில் தனது அதிபர் பதவிக்கான தயாரிப்புகளை எப்படி முன்னெடுப்பது என்பது தான் கமலா ஹாரிஸ் முன் இருக்கும் கேள்விகள் என்கிறன சில செய்திகள்.

Editor's Choice

ஜனவரி 26, 2021 அன்று இந்தியாவின் 72வது குடியரசு நாள் அனுசரிக்கப்படுகிறது.

மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு 'ஜனநாயகம்' (Democracy) என்று அழைக்கப்படுகிறது.

சுதந்திரம் அடைந்த பின்னரும் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு நிர்வாகத்துக்கும் அச்சட்டமே அடிப்படையாக இருந்தது.

அந்த சட்டம் நீக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் (Constituent Assembly) ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் அமலான நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.

அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவால் (Drafting Committee) உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக 1950, ஜனவரி 26 அன்றுதான் அமலுக்கு வந்தது என்றாலும், குடியுரிமை, தேர்தல், இடைக்கால அரசு, இடைக்கால நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்த சரத்துகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர தீர்மானம் நிறைவேறியது.

1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்தத் தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் குடியரசு நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் குடிரசு நாள் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும்.

1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது.

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷனல் ஸ்டேடியும் வரை மட்டுமே இந்த அணிவகுப்பு நடக்கும்.

இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief ) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

வேறு நாட்டு அரசின் தலைவர் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார். இந்த ஆண்டு தலைமை விருந்தினராகப் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காரணமாக தமது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

1973 வரை மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்தான் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய இரு கொண்டாட்டங்களின்போதும் தேசியக் கோடியை ஏற்றினார்கள்.

அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல மாநில முதல்வர்களும் விடுதலை நாள் கொண்டாத்தின்போது கொடியேற்ற வேண்டும் என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார் .

அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் 1974 முதல் ஆளுநர்களும், விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர்.

குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு 'பாசறை திரும்புதல்' எனப்படும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.

1916இல் தமது 'இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி' (A National Flag for India) எனும் நூலை வெளியிட்டார் பிங்கலி வெங்கய்யா. அதில் 13 வெவ்வேறு வடிவமைப்புகள் இருந்தன.

1921இல் விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது மாகாத்மா காந்தியைச் சந்தித்த இவர் தேசியக் கொடியின் தேவை குறித்துக் கூறினார்.

காந்தியும் ஒரு புதிய கொடி வடிவமைப்பு வேண்டும் என்று கூறவே மூவர்ணக் கொடியின் நடுவே, ராட்டை இருக்கும் கொடியை உருவாக்கினார் பிங்கலி வெங்கய்யா.

சுதந்திரத்துக்கு முன் கொடியின் நடுவே இருந்த ராட்டை அசோகச் சக்கரமாக மாற்றப்பட்டது.

போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய சமயங்களில் வழங்கப்படும்,

ஜனவரி 24, 1950 அன்று அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்கள், அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அதன் இந்தி மற்றும் ஆங்கில பிரதிகளில் கையெழுத்திட்டனர்.

அன்று முதல் அந்த மன்றத்தின் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசின் முதல் தலைவரானார்.

அரசியல் நிர்ணய மன்றம் இடைக்கால நாடாளுமன்றம் ஆனது.

டிசம்பர் 9, 1946 அன்று இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கழித்து நவம்பர் 26, 1949 அன்று புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Editor's Choice

இரானின் புரட்சிகர ராணுவப்படையின் தலைவர் காசெம் சுலேமானீயைக் கொன்றதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனேயி வெளிப்படையாக இணையத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அலி காமனேயியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், ஒரு பெரிய போர் விமானம் அல்லது டிரோனின் நிழலில், டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு படம் பகிரப்பட்டிருக்கிறது.

'பழிவாங்கப்படுவது நிச்சயம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் ட்விட் செய்த மற்றொரு ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

@khamenei_site என்கிற ட்விட்டர் கணக்கு போலியானது எனவும், இந்தக் கணக்கு ட்விட்டர் தளத்தின் கொள்கைகளை மீறிவிட்டதாகவும், ட்விட்டர் தரப்பில் இருந்து ராய்டர்ஸ் முகமைக்கு கூறப்பட்டது.

இந்தப் பதிவை, சுமாராக மூன்று லட்சம் பேர் பின் தொடர்பவர்களைக் கொண்ட அயதுல்லா காமனேயியின் ஃபர்ஸி ட்விட்டர் கணக்கிலும் பகிரப்பட்டது. பின்னர் அக்கணக்கில் இருந்தும் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

அந்த ட்விட்டில், ஃபர்ஸி மொழியில் பழிவாங்கல் எனும் சொல் சிவப்பு நிறத்தில் இருந்தது. "சுலேமானீயைக் கொன்றவர். இவர் தான் சுலேமானீயை தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்" என அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

அயதுல்லா காமனேயியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 'எப்போது வேண்டுமானாலும் பழிவாங்கப்படும்' என்று கடந்த டிசம்பர் 16ஆம் தேதி காமனேயி கூறியிருந்த கருத்துடன் இந்தப் படம் பகிரப்பட்டிருந்தது.

டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, இரானிய தலைவருக்கு தடை விதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழவே ட்விட்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

ஓராண்டு காலத்துக்கு முன், இரானின் தலைநகரான பாக்தாத்தில், அந்த நாட்டின் புரட்சிகர ராணுவப்படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.

இவர் தலைமையில்தான், இரானுக்கு ஆதரவான ராணுவக் குழுக்கள் வளர்ந்தன. இதை முதலாக கொண்டே இராக் மற்றும் சிரியாவில் தன் ராணுவ இருப்பை இரான் அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

"இவர் (காசெம் சுலேமானீ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல லட்சக் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணம்" என அப்போது டிரம்ப் கூறியது நினைவுகூரத்தக்கது

Editor's Choice

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடும் வகையில், வொண்டர்லா தீம் பார்க், கமலா என பெயர் உள்ளவர்கள் இலவசமாக பூங்காவை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் (56) சமீபத்தில் பதவியேற்றார். துணை அதிபராக பதவி ஏற்ற முதல் கருப்பின ஆசிய - அமெரிக்க பெண் என்ற பெருமையை கமலா பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் வகையில், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் செயல்படும் வொண்டர்லா தீம் பார்க்கனாது, தனது பேஸ்புக் பக்கத்தில், இந்த ஞாயிறு, கமலாக்களின் வெற்றி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஜனவரி 24 அன்று, பூங்காவிற்கு வருபவர்களில் கமலா என பெயர் வைத்தால் அவர்களுக்கு இலவசமாக நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனவும், முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கமல், கமலா, கமலம் என்ற பெயர்களில் வருபவர்களுக்கும் இலவச நுழைவு சீட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ள பூங்கா, இதற்கு அடையாள அட்டை அவசியம் எனவும், மற்ற பெயர் உள்ளவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என தெரிவித்துள்ளது.

Editor's Choice

துருக்கியின் டிராப்ஸன் பகுதியை சேர்ந்த செமல் செண்டுர்க் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது வளர்ப்பு நாயான போன்குக், ஆம்புலன்சின் பின்னாலேயே ஓடி வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காண மருத்துவமனையின் வாசலிலேயே செல்ல நாய் காத்திருந்துள்ளது. தன் எஜமானர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை தினமும், வாசலில் செமல் வருகைக்காக காத்திருந்தது. மருத்துவமனை ஊழியர்களும் அந்த நாயை விரட்டாமல், அரவணைத்தனர். சிலர் உணவும் வழங்கினர்.

ஒவ்வொரு முறையும் மருத்துவமனையின் வாசல் கதவு திறக்கும்போதும் உள்ளே ஏக்கத்துடன் எட்டிப்பார்த்து ஏமாற்றமாக வாசலில் உட்கார்ந்துவிடுமாம். கடந்த 20ம் தேதி செமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகே போன்குக் என்ற செல்ல நாய் அங்கிருந்து சென்றுள்ளது. இது குறித்து செமல்லின் மகள் அய்னூர் எகெலி கூறுகையில், ‛என் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வாசலில் தினமும் காலை 9 மணியளவில் போன்குக் சென்றுவிடும். ஒவ்வொரு நாளும் இரவு எங்களது செல்ல நாயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அடுத்தநாள் காலையில் மீண்டும் அங்கு சென்று என் அப்பாவிற்காக காத்திருக்கும்,' எப்போது போகும் என்றே எங்களால் அறிய முடியாது என்றார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தன் எஜமானரை மனிதநேயத்துடன் மருத்துவமனை வாசலில் ஏங்கி காத்திருந்த செல்ல நாயின் பாசப்போராட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவியது.

Editor's Choice

ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.

வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார்.

அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் "இந்தியாவின் துயரம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார்.

போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை.

எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார்.

1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.

சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், 'அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் - சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார்.

சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.

1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, "என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."

"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தின் கடைசியில், "நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், "சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது." போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.

அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.

இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது.

அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும்.

ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார்.

இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 69 / 90