Editor's Choice

சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.

ஆடைகள் இல்லாமல் குழந்தைகள் மார்பகத்தை தொடுவது, அதாவது நேரடியாக உடலில் கை வைக்காமல் இருந்தால் வெறும் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354 - Outraging a woman's modesty. அதாவது, ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) கீழ்தான் வரும் என்றும் கடும் தண்டனை விதிக்கப்படும் போக்ஸோவுக்கு கீழ் வராது என்றும் அந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது.

இத்தீர்ப்பு குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. இதில் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அபராதமும் உண்டு.

ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்

2016ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செல்வி கொய்யாப்பழம் வாங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் செல்வி திரும்பி வராததால் அவரது தாய்  தேடிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டருகே வசிக்கும் நபர் ஒருவர் செல்வியை சதீஷ் அழைத்து சென்றதாகக் கூறி அவரது வீட்டையும் காண்பித்துள்ளார். வீட்டிற்குள் செல்வியின் தாய் சென்ற போது சதீஷ் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதை பார்த்துள்ளார். தனது மகள் குறித்து கேட்டதற்கு இங்கு அப்படி யாரும் இல்லை என்று கூறியுள்ளார் சதீஷ்.

கீழ்தளத்தில் தனது மகளை தேடிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றார் செல்வியின் தாய். அங்கு வெளியே தாழிடப்பட்டிருந்த அறையை திறந்த போது அங்கு செல்வி அழுது கொண்டிருந்ததை தாய் பார்த்துள்ளார். அறையில் இருந்து வெளியே அழைத்து வந்து, என்ன நடந்தது என்று குழந்தையிடம் விசாரித்தபோது, "கொய்யாப்பழம் தருவதாக கூறி தன்னை அவரது வீட்டிற்கு சதீஷ் அழைத்து வந்ததாகவும், அங்கு தன் மார்பகங்களை அழுத்தி, ஆடைகளை கழற்ற முயன்றதாகவும்" செல்வி விவரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செல்வியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளார் அவரது தாய். பின்னர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை.

தன் கையை பிடித்து கொய்யாப்பழம் தருவதாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற சதீஷ் தன் ஆடையை கழற்ற முயன்று, மார்பகங்களை தொட்டதாகவும், தான் கத்திய போது, வாயை கையால் அடைத்ததாகவும் செல்வி அன்றே சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கில் கடந்தாண்டு தீர்ப்பளித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டம் 354,363 மற்றும் 342, அதோடு போக்ஸோ சட்டம் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் சதீஷுக்கு தண்டனை வழங்கியது.

போக்ஸோ சட்டம் பிரிவு 8 படி, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 342ன் படி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 363 படி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் சதீஷ்.

இதில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி புஷ்பா, "வழக்கு மற்றும் வாதங்களை வைத்து பார்க்கும் போது சதீஷ் சிறுமியின் ஆடைகளை கழற்றி மார்பகங்களை தொட்டார் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை. 12 வயது சிறுமியின் ஆடைக்குள் கை விடப்பட்டு, மார்பகங்களை அழுத்தியதாக தெரியவில்லை. குற்றவாளி நேரடியாக சிறுமியின் உடலை தொடவில்லை என்பதால், இது 'பாலியல் வன்முறை' என்ற வார்த்தைக்குள் வராது. ஆகவே இது போக்ஸோ சட்டத்திற்குள் வராது. இது இந்திய தண்டனை சட்டம் 354ன் கீழ் நிச்சயம் வரும். இது ஒரு பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமே தவிர பாலியல் வன்முறை குற்றம் கிடையாது."

Editor's Choice

ஆந்திரா மாநிலம், சித்தூர் அருகே மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக படித்த பெற்றோர் தனது மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள்  புருஷோத்தம்  நாயுடு - பத்மஜா.   புருஷோத்தம்   அரசு  கல்லூரியில் வேதியியல் இணை பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவர்களது மகள்கள் அலெக்யா (27), சாய் திவ்யா (22).
 
கடந்த சில மாதங்களாக இவர்களது வீட்டில்  பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
 
 அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 
எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது  என்பது பற்றிய முழு விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பதிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்றும்  அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 
 
Editor's Choice

விவசாயிகளுக்கான உர மானியத்திற்காக 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உரத்துறை நிதியமைச்சகத்திடம் கோரியுள்ளது.

உரத்திற்கான மானியத்தை விவசாயிகளுக்கே நேரடியாகச் செலுத்தும் மிக முக்கியமான திட்டத்தையும் மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இந்தியாவில் இருக்கும் 14 கோடி விவசாயிகள் நேரடியாகப் பலனைப் பெற முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தில் விவசாய உரத்திற்கான மானியமாக மத்திய அரசு சுமார் 65,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது உர உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைக்கும், வரும் நிதியாண்டுக்கான மானியத்திற்கும் கூடுதலான நிதியைக் கோரியுள்ளது விவசாய உரத் துறை.

1.36 லட்சம் கோடி ரூபாய் இதன் அடிப்படையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான விவசாய உரம் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய மானிய நிலுவைத் தொகையை அளிக்கவும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. மேலும் இவ்விரண்டுக்கும் தேவையான மொத்த நிதி 1.36 லட்சம் கோடி ரூபாய்.
 
விவசாய உரத்திற்கான மானியத்தை நிறுவனங்களுக்கு அளிக்காமல் நேரடியாக விவசாயிகளுக்கே அளிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்பட்டால் விவசாய உரங்களுக்கான மானியத்தை விவசாயிகள் நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்கிற்கே பெறுவார்கள். இதனால் சுமார் 14 கோடி விவசாயிகள் நேரடியாக நன்மை அடைய உள்ளனர் என இத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விவசாய உரத்திற்கான மானியமாக 2019 நிதியாண்டில் 70,605 கோடி ரூபாயும், 2020ஆம் நிதியாண்டில் 79,998 கோடி ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது மத்திய அரசின் மொத்த செலவின திட்டத்தில் சுமார் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாய உரத் துறை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைக் கேட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசின் direct benefit transfer (DBT) திட்டத்தின் மூலம் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் சேமித்துள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய திட்டத்தின் மூலம் கூடுதலாகச் சேமிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்து வரும் நிலையில் இந்த உர மானிய திட்டம் விவசாயிகளுக்கு நேரடியாக நன்மை பெற உதவும்.
 
Editor's Choice
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிட்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஷெர்னி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார்.
 
தமிழ்ப் படங்களில் நடிக்காமல் நிராகரித்து வந்த அவர், மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில், என்.டி.ஆர்.பயோபிக்கில், பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இவர், இப்போது ஒடிடி-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
கொரோனா காரணமாக, மார்ச் மாதம் முதல் சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த தயாரிப்பாளர்கள், ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்தனர். பெரிய ஹீரோ படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் ஒடிடி-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 'ஓடிடியில் சீரிஸ்கள் பண்ணலாம் என நினைக்கிறேன். ஓடிடி மீது எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. சரியான நேரத்தில் அதை பயன்படுத்துவேன். நடிகர்கள் மட்டுமின்றி பலருடைய வாழ்க்கையை ஓடிடி காப்பாற்றும் என்று நினைக்கிறேன்.
 
படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காதவர்களுக்கும் ஓடிடி தளங்கள் கைகொடுக்கும் என்று கூறியுள்ளார் வித்யா பாலன். இவர் நடித்திருந்த பயோபிக் படமான, சகுந்தலாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Editor's Choice

2020ல் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவில் ஒருபக்கம் மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது, இதேவேளையில் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அதிகளவில் செலவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

இந்த நேரத்தில் புதிதாக வரி விதிக்கப்படும் என்றும், வருமான வரி உயர்த்தப்படும் என்றும், அதிக வருமானம் பெறுபவர்கள் மீது மட்டும் கூடுதலான வரி வசூலிக்கப்படும் என்றும் எனப் பல செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் 1971ல் தனிநபர் வரி பிரிவின் கீழ் 12 வரிப் பலகை அடிப்படையில் 0 முதல் 85 சதவீதம் வரையில் வருமான வரி விதிக்கப்பட்டு இருந்தது. இதில் கூடுதல் வரி உடன் அதிகப்படியாக 93.5 சதவீதம் என்ற உச்ச தனிநபர் வருமான வரி விதிப்பு முறை இருந்தது முக்கியமான வரலாறு.

இதன் பின் வருமான வரிப் படிப்படியாகக் குறைந்து 1992-93ல் அதிகப்படியாக 40 சதவீதமும், 1997-98 பட்ஜெட்-ல் ப.சிதம்பரம் தலைமையிலான நிதியமைச்சகம் தனிநபர் வருமான வரியை 30 சதவீதமாகக் குறைத்தது, இதேவேளையில் கார்பரேட் வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
 
சிதம்பரத்தின் இந்த ட்ரீம் பட்ஜெட் தான் இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இன்று அதிகப்படியாக 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டாலும், Surcharge எனப்படும் கூடுதல் வரி விதிப்பின் மூலம் அதிகப்படியாக 42.7 சதவீதம் வரையில் வரி வசூல் செய்யப்படுகிறது.
 
இந்நிலையில் உலகின் சக வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிகளவில் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதிகப்படியாகப் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 35 சதவீதமும், இந்தோனேஷியா 30%, பிரேசில் 27.5%, இலங்கையில் 24% என வருமான வரி விதிக்கப்படும் நிலையில் இந்தியாவில் 42.7 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் ஏற்கனவே சக வளரும் நாடுகளை விடவும் அதிக வருமான வரி விதிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய செஸ் வரி அல்லது வருமான வரி உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிட்டு வரும் இந்தியா தனிநபர் வருமான வரியும், கார்ப்பரேட் வருமான வரியை விதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பதில் பிப்ரவரி 1ஆம் தேதி தெரியும்.
 
Editor's Choice

அரச குடும்பத்தை விமர்சனம் செய்த ஒரு தாய்லாந்து பெண்ணுக்கு 43 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.

அஞ்சன் என்ற அந்த 63 வயது பெண் முன்னாள் குடிமைப் பணியாளர். அவர் சமூக ஊடகப் பக்கங்களில் போட்காஸ்ட் முறையில் ஆடியோ பதிவுகளை வெளியிட்டார்.

தாய்லாந்தின் 'லெசே மெஜஸ்டி' என்ற சட்டம் முடியரசுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடை செய்கிறது. உலகில் உள்ள இத்தகைய சட்டங்களிலேயே இது கடுமையான ஒன்று.

மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை கடந்த ஆண்டு கடைசியில் பயன்படுத்தத் தொடங்கியது தாய்லாந்து. முடியாட்சியில் மாற்றங்களைக் கோரி பல மாதங்கள் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

2014 - 2015 ஆகிய இரு ஆண்டுகளில் ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களில் அஞ்சன் பகிர்ந்த ஆடியோ பதிவுகளில் 29 வெவ்வேறு பதிவுகள் இந்த சட்டத்தை மீறும் வகையில் இருந்ததாக அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட 87 ஆண்டு கால சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

2014ல் ராணுவ ஜன்டா அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பிறகு முடியரசு மீதான விமர்சனங்களை நசுக்க உறுதியேற்று 14 பேர் மீது லெசே மெஜெஸ்டி சட்டத்தை பயன்படுத்தியது. அவர்களில் அஞ்சனும் ஒருவர்.

எதிர்ப்பாளர்கள் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்ற போட்காஸ்ட் குரல் பதிவுகளை வெளியிட்டதாக இந்தக் குழு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குரல் பதிவுகள் முடியரசு தொடர்பான நிர்வாகத்தின் கருத்துகளை கேள்விக்குள்ளாக்கின. அப்போது இரண்டாண்டு சிறையில் இருந்தபிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

அஞ்சனுக்கு எதிரான விசாரணை மூடிய அறைகளுக்குள் நடத்தப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் தேசப்பாதுகாப்பு காரணத்தின் பேரில் ரகசியமாக வைக்கப்பட்டது.

வெறும் ஆடியோ பதிவேற்றியதற்காக, அதுவும் முதல் முறை கைது செய்யப்பட்டு, இவ்வளவு காலத்துக்குப் பிறகு, இவ்வளவு கடுமையான தண்டனை தரப்படுவது என்பது, பிற அதிருப்தியாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே தெரிகிறது.

முடியாட்சியைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என்ற எச்சரிக்கையை பிற அதிருப்தியாளர்களுக்கு அதிகாரத்தில் இருப்போர் தரவிரும்புகிறார்கள்.

கடந்த ஆண்டு மாணவர்கள் வழிநடத்திய போராட்ட அலையில் அரசர் வஜிரலாங்கோர்ன் வசமுள்ள செல்வம், அவரது அரசியல் வகிபாகம், தனிப்பட்ட வாழ்வு ஆகியவை குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த சில வாரங்களில் 40 செயற்பாட்டாளர்கள் மீது லெசே மெஜெஸ்டி சட்டம் பயன்படுத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். சிலர் மீது இந்த சட்டம் பல முறை பாய்ந்துள்ளது.

மிகவும் கடுமையாக இருப்பதாக ஐ.நா. மனித உரிமை அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட இந்த சட்டம், அரசரின் வேண்டுகோளை ஏற்று 3 ஆண்டுகாலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த அரசெதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து இந்த சட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது என்கிறார் ஜொனாதன் ஹெட்.

அரசியல் கொந்தளிப்பும், போராட்டங்களும் தாய்லாந்துக்குப் புதியதில்லை. அதற்கொரு நீண்ட வரலாறு உள்ளது. சமீபத்திய அரசியல் கொந்தளிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. மிக ஆரம்ப கட்டத்தில் இருந்த தாய்லாந்தின் ஜனநாயக ஆதரவு, எதிர்க்கட்சியை கலைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த கொந்தளிப்பு உருப்பெற்றது என்கிறார் ஜொனாதன் ஹெட்.

பக்கம் 68 / 90