Editor's Choice

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்டோபரில் நடந்து முடிந்தது.

வயது வரம்பின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  கொரோனா ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பலர் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.

தேர்வு நடைபெற்ற நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாகவும் பலர் தேர்வை நழுவவிட்டனர். வயது வரம்பின் அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'வயது வரம்பு அடிப்படையில் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்காக மீண்டும் மறு தேர்வு நடத்த முடியாது' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்த மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Editor's Choice

ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள் என்றாலும் இதுவரை அந்த நாட்டு அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருந்து வந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலுசேர்க்கும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அந்த நாடு முதல்முறையாக அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு குடியுரிமை திட்டத்தின்படி, முதலீட்டாளர்கள், தனித்துவமான திறமைகள் கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பணியாளர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் குடியுரிமை வழங்கப்படும் என்றும், மேலும் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டிருக்க முடியுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.

சிறந்த கல்வியறிவு மற்றும் பணித்திறனை கொண்டுள்ளவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக தக்க வைக்கும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த திட்டத்தால், குறைந்த வருமானம் கொண்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பெரியளவில் பலன் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னவென்றால், குடியுரிமை பெற விரும்புபவர்கள் மற்ற நாடுகளை போன்று தாங்களாகவே குடியுரிமை கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது.

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய திட்டத்தின்படி, குடியுரிமை பெற எந்தவித விண்ணப்பம் சார்ந்த நடைமுறையே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தகுதிவாய்ந்த தனிநபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பமோ அல்லது அதிகாரிகளோ பரிந்துரை செய்வார்கள் என்றும் அதுகுறித்த முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் அந்த நாட்டில் உள்ள குடிமக்களின் எண்ணிக்கை வெறும் பத்தில் ஒரு மடங்குதான். அதாவது, அந்த நாட்டின் வளர்ச்சியில், செயல்பாட்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பங்கு அளவிடற்கரியது.

2005ஆம் ஆண்டு வெறும் 41 லட்சமாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகை அதிவேகமாக உயர்ந்து 2010இல் 83 லட்சமாக அதிகரித்தது. இதற்கு அங்கு ஏற்பட்ட தொழில்வளர்ச்சியும் அதனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து குவிந்த பணியாளர்களுமே காரணம். அப்போது முதல் உயரத்தொடங்கிய அந்த நாட்டின் மக்கள் தொகை கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு வரை புதிய உச்சங்களை தொட்டு வந்ததாக தரவுகள் கூறுகின்றன.

ஆம், கொரோனா வைரஸ் பரவலாலும், மீண்டெழாத கச்சா எண்ணெயின் விலையாலும் வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையால் குறைந்த ஊதியம் பெறும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றாலும், இது பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

உலகின் நிதி தலைநகராகவும், சுற்றுலா மையமாகவும் உருவெடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், தனது அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அயல்நாடுகளை சேர்ந்த துறைசார் வல்லுநர்களை பெரிதும் சார்ந்துள்ளது.

இந்த நிலையிலேயே, திறன்மிகு வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று, அவர்களை தக்க வைக்கும் வகையிலேயே இந்த புதிய குடியுரிமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபியை சேர்ந்த தி நேஷனல் என்ற செய்தித்தாள் கூறுகிறது.

இதுவரை பணிவாய்ப்பை அடிப்படையாக கொண்ட சில ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கத்தக்க நுழைவு விசா மட்டுமே வெளிநாட்டு பணியாளர்களுக்கு கொடுத்து வந்தது ஐக்கிய அரபு அமீரகம்.

ஐக்கிய அரபு அமீரகம், குறிப்பாக அங்குள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நகரங்களின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு பின்னால் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

பெரும்பாலும் கட்டுமானம், உணவகம், சுற்றுலா, வர்த்தகம், இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை தாய்நாட்டிலுள்ள தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இவர்களில் லட்சக்கணக்கானோர், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும், இதுவரை நிரந்தர வசிப்புரிமையோ அல்லது குடியுரிமையோ அல்லது சமூக நலன் சார்ந்த வசதிகளோ வழங்கப்பட்டதில்லை.

மாறாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புதிததாக வரும் தொழில்முனைவோர் அல்லது முதலீட்டாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நீண்டகாலம் வசிக்கும் வகையிலான நுழைவு விசாவை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு அரசு வழங்கி வருகிறது.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள், திறன்மிகு மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு "கோல்டன் விசா" என்ற பெயரில் சுமார் பத்தாண்டுகள் அந்த நாட்டில் வசிக்கும் வகையிலான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்சியாகவே தற்போது திறன்மிகு மற்றும் தேவை அதிகம் உள்ள பணியாளர்களை தக்க வைப்பதற்காக குடியுரிமை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், இந்த திட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுபவர்களுக்கு ஏற்கனவே குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச கல்வி, சுகாதாரம், வீட்டு கடன் உள்ளிட்ட வசதிகள் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை தெளிவில்லை.

வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு பொதுவாக குடியுரிமை வழங்கப்படுவதில்லை. இது பொதுவாக அமீரகத்தை பூர்விகமாக கொண்ட ஆண்களின் மனைவிகளுக்கும், அமீரகத்தை சேர்ந்த ஆண்களின் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிநாட்டினரை மணந்த அமீரகத்தை சேர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை அளிக்கப்படாது. மாறாக அதற்கு விண்ணப்பிக்க வேண்டும், இந்த நடைமுறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, 10 - 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழர்களை பெரும்பாலும் உடலுழைப்பு தொழிலாளர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. "தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அரசுத்துறைகளில் தமிழர்களின் பலர் பணியாற்றுவதை வெகு எளிதாக காண முடிகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும், கட்டுமானத்துறையில் பொறியாளர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் தமிழர்களின் பங்கு அதிகம் காணப்படுகிறது"

சமீப ஆண்டுகளில் அயல்நாட்டு பணி என்பது சாதாரண விடயமாக மாறி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தமிழர்கள் இன்னமும் சார்ந்திருப்பதன் காரணம் என்னவென்று கேட்டபோது, "மேற்குலக நாடுகளில் பணிவாய்ப்பு அதிகரித்து வந்தாலும், அது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. ஆனால், வளைகுடா நாடுகளை பொறுத்தவரை, ஓரளவு கல்வியறிவு உள்ளவர்கள் கூட, தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சுற்றுலா நுழைவு இசைவிலோ (விசா) இங்கு வந்து சில மாதங்களில் பணிவாய்ப்பு பெற்று, பிறகு வேலைவாய்ப்புக்கு உரிய அனுமதியை பெற்றுவிட முடியும்".

 

Editor's Choice

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் இதை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில் சிமென்ட் பயன்படுத்தியும் இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. கூட்டம் கூடி கடந்த முறை நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் போன்று நிகழாமல் இருக்க இந்த நடவடிக்கை அவசியம் தான் என ஒரு சிலர் இதை வரவேற்றாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

''எல்லையில் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அங்கு கூட இப்படி ஒரு பாதுகாப்பு அரண் ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள்''. ''சீனா எல்லையில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அதை இந்த அரசு தடுக்கவில்லை. ஆனால் உள்நாட்டில் தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர், ''இப்படி ஒரு தடுப்பு சுவர் அருணாச்சல் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்தபோது எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ''எத்தனை பெரிய கோட்டை சுவரே எழுப்பினாலும் சரி, இன்னும் பல வேலிகள் அமைத்தாலும் சரி, விவசாயிகளை ஒருபோதும் ஒடுக்க முடியாது'' என தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதால் டுவிட்டரில் #FencingLikeChinaPak என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Editor's Choice

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏறக்குறைய மோதுகின்ற அளவுக்கு நெருங்கி வந்தன.

கருங்கடலுக்குள் நுழைந்த அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷிய போர் விமானம் மின்னல் வேகத்தில் பறந்து சென்ற பரபரப்பு காட்சி வெளியிடப்பட்டுள்ளது ஜனவரி 23 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் டொனால்ட் குக்  கப்பல் ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்தி கருங்கடலுக்குள் நுழைந்தது.
 
கருங்கடலில் யுஎஸ்எஸ் டொனால்ட் குக் அருகே ரஷ்யாவின் சூ-24  போர் விமானம் பறந்தது வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகள் அமெரிக்க கடற்படையின் 6 வது கடற்படை அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டன.
 
இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றையொன்று மாறிமாறி குற்றஞ்சாட்டியுள்ளன.
 
மாஸ்கோ நேரப்படி காலை 6.35 மணிக்கு, யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன்னால் 50 மீட்டர் இடைவெளியில் கடந்து சென்றது என்று ரஷ்ய பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதாமல் இருக்க "அவசர நடவடிக்கை" எடுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்ய போர்க்கப்பலுக்கு ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவின் போர்க்கப்பலே காரணம் என்று அமெரிக்க படைப்பிரிவுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ரஷ்யாவின் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பலுக்கு எதிராக பாதுகாப்பற்ற நடவடிக்கை எடுத்ததாக கூறி, "ரஷ்யர்களின் செயல்பாடு பாதுகாப்பற்றதாகவும், தொழில்முறையற்றதாகவும்" இருந்ததாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை தளபதி கிளேட்டன் தாஸ் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு வெறும் "பரப்புரை" என்று கூறி அவர் நிராகரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் கடலில் யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பலை, ரஷ்யாவின் அட்மிரல் வினோகிராதோஃப் 50 முதல் 100 அடி வரை நெருங்கி வந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் கிழக்கு சீனக் கடலில் தென்கிழக்கில் நிகழ்ந்தது என்று தெரிவித்துள்ள ரஷ்ய பசிபிக் கடற்படை, அமெரிக்க போர்க்கப்பலின் தளபதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளது.

கடலிலும், வான்வழியிலும் நடத்துகின்ற ஆபத்தான ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த இரு நாடுகளும் மாறி மாறி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் கருங்கடலுக்கு மேலே ரஷ்ய போர் விமானம் தங்கள் விமானங்களை இடைமறித்தது "பொறுப்பற்ற நடவடிக்கை" என தெரிவித்து அமெரிக்கா காணொளிகளை பதிவிட்டது.

ஆனால், "ரஷ்ய வான்பரப்பு மீறலை" தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுவென ரஷ்யா கூறிவிட்டது.

Editor's Choice
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதையடுத்து வரும் 13ம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது போட்டியில் 50 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்எஸ் ராமசாமி அறிவித்துள்ளார்.
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் தற்போது 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்எஸ் ராமசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த ஒரு ஆண்டாக லைவ் போட்டிகளை மைதானத்தில் கண்டு களிக்க முடியாத ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து ராமசாமி பிசிசிஐயிடம் பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராமசாமி ஆலோசனை மேற்கொண்டதாகவும், தற்போது 50 சதவிகித ரசிகர்களை அனுமதிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அனுமதியை பிசிசிஐயிடம் வாங்குவது மட்டுமே பாக்கி என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் அடுத்து நடைபெறவுள்ள 3வது மற்றும் 4வது போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோதேராவில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச போட்டியான இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
சென்னையின் இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி துவங்கி 17ம் தேதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் காரணமாக மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது இந்த போட்டியின்மூலம் முதல் முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Editor's Choice
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்தபோது, அந்த பிராந்திய மக்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தர குடியேற்ற உரிமையை 1997-ம் ஆண்டு வரை வழங்கக்கூடிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹாங்காங்கில் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டில் 5 ஆண்டுகள் வசிப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறி இங்கிலாந்தை கண்டித்தது.

மேலும் ஹாங்காங் மக்களுக்கு இங்கிலாந்து வழங்கியிருந்த பாஸ்போர்ட் இனி செல்லாது எனவும் சீனா அறிவித்தது.‌இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை இங்கிலாந்து அரசு தொடங்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புதிய விசாவைப் பெற விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இங்கிலாந்தின் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஹாங்காங் மக்களுக்கான புதிய விசா திட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்த நடவடிக்கை இங்கிலாந்தின் முன்னணி காலனியான ஹாங்காங்குடன் இங்கிலாந்தின் வரலாறு மற்றும் நட்பின் ஆழமான உறவுகளை கவுரவிக்கிறது” என்றார்.

பக்கம் 63 / 90