Editor's Choice

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து இந்தியா மீண்டுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஐ.டி சேவை நிறுவனமான காக்னிசண்ட் தனது ஊழியர்களுக்கு பெரிய அளவிலான போனசை அளிப்பதோடு 24,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் தொடங்கி, மூத்த அசோசியேட் மட்டத்திலும் அதற்குக் கீழும் உள்ள ஊழியர்களுக்கான காலாண்டு பதவி உயர்வு சுழற்சியை செயல்முறைப்படுத்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6.9 சதவீதத்தை ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 7.9 சதவீத சம்பள உயர்வு வழங்க இந்தியா இன்க் திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் உலகளாவிய நிறுவன ஆலோசனை நிறுவனமான கோர்ன் ஃபெர்ரி நடத்திய ஆய்வில் மேற்கோளிட்டுள்ளது. இந்த ஆண்டு 78 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வு (Salary Hike) வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு 62 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 4.4 அதிகரிப்பு இருக்கும் என டெலாய்ட் கணித்துள்ளது.

இதற்கிடையில், டெலோயிட் டூச் தோமட்சு இந்தியா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், சம்பள உயர்வு, சென்ற ஆண்டு இருந்த 4.4 சதவீதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

டெலோயிட் கணக்கெடுப்பு 20 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டு இரட்டை இலக்க ஊதிய உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020 இல் 12 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இரட்டை இலக்க ஊதிய உயர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 60 சதவீத நிறுவனங்கள் மட்டுமே கடந்த ஆண்டு தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆஃப்-சுழற்சி முறையில் ஊதிய உயர்வுகளை அளித்ததாகவும் கணக்கெடுப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலோயிட் இந்தியாவின் அறிக்கை லைஃப் சைன்சஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் (IT Sector) அதிகபட்ச சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்று கணித்துள்ளது. விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் இந்த ஆண்டு குறைந்தபட்ச சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice

அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறை ஒன்றில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரைப் போல் 20 மடங்கு பெரிய பனிப்பாறை இதுவென்பதால், இதன் மீதான விரிசல் சர்வதேச அளவில் சூழலியல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக உலக அளவில் பருவ நிலைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடும் பனிப்பொழிவு, வெள்ளம், அதீத மழை, கடுமையான காட்டுத் தீ, வறட்சி, அதிதீவிர புயல்கள் போன்றவற்றை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.

மற்றொரு பக்கம், அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற பனிப் பிரேதசங்களில் கால நிலை மாற்றம் காரணமாக பனிப்பறைகள் உருகி வருகின்றன.

இந்த நிலையில் அண்டார்டிகாவில் மீண்டும் பனிப்பாறை ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே வெளியிட்ட அறிக்கையில், “ அண்டார்டிகாவில் வெட்டல் பகுதியில் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைப்போல 20 மடங்கு அளவுள்ள பெரிய பனிப்பாறையில் நீளவாக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூப்பது வருடங்களில் இம்மாதிரியாக மூன்று முறை பனிப்பாறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.


Editor's Choice

உலக சாம்பியன் தடகள வீரரும், பிங்காதோனின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனையுமான, 105 வயது நிரம்பிய மன் கவுருடன் மிலிந்த் சோமன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தனது 93 வயதில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 105 வயதிலும் அசராமல் ஓடுகிறார் என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

நடிகர் மிலிந்த் சோமன், உடற்பயிற்சி, ஓட்டப்பந்தயம், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் பேணிக் காப்பதுடன், அடுத்தவர்களுக்கும் உதாரணமாக இருந்து வருகிறார். இதனாலேயே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இவர் தான், இந்தியாவில் பெண்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பிங்காதான் ஓட்டப்போட்டியை கொண்டு வந்தவர். 

சுறுசுறுப்பான வாழ்க்கை 45 வயதில் முடிந்துவிடுகிறது என சிலர் கூறுகிறார்கள். அந்த வயதுக்கு மேல் தங்களால் எதுவும் செய்ய முடியாது என ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பாட்டியின் கதையே வேறு. 93 வயதில் ஓட்டப் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து, தற்போது அவரது 105வது வயது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் வசம் பல உலக சாதனைகள் உள்ளது. இவருக்கு உயரிய விருதான ‘நரி சக்தி புரஷ்கார்’ விருதை வழங்கி ஜனாதிபதி கவுரவித்திருக்கிறார்.

 
Editor's Choice

எதிர்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி சேவை செயலி வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிப்பட்ட சாட் அல்லது ஸ்டேட்டஸ்களில் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்பும் முன்னால் பயனர்கள் அதை ம்யூட் செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஐஓஎஸ் பயனர்களுக்கு எப்போது இந்த வசதி வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். அப்போது ஆடியோவை ம்யூட் செய்யும் வசதி தானாகத் திரையில் தோன்றும். அதன்மூலம் ஆடியோவை ம்யூட் செய்து வீடியோக்களை அனுப்பலாம், பகிரலாம்.

Editor's Choice

உலகிலேயே அதிக கப்பல்களைக் கொண்ட சிறந்த கப்பல் படையாக விளங்கியது அமெரிக்க கப்பல் படை. இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருந்தது. வலுவான ராணுவம் கொண்ட சீனா, கப்பல் படையை வலுப்படுத்த 2016ஆம் ஆண்டுமுதலே ஜி ஜிங்பிங் அரசு திட்டமிட்டது.

இதனை அடுத்து புதிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கப்பல்கள் போர் சமயத்தில் தொலைவிலிருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொண்டிருந்தது. தற்போது தென் சீனக் கடற்பரப்பில் பயிற்சி மேற்கொண்டு வரும் சீன கப்பல் படையினர், போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்கொரிய கப்பல் படையுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சீன கப்பற்படை சமீபத்தில் தைவான் கப்பல் படையுடன் மோதலில் ஈடுபட்டது. ஆசிய கண்டத்தில் சீன கப்பல் படையுடன் வேறு எந்த நாட்டின் கப்பல் படையும் போட்டிபோட முடியாது என்னும் நிலை நிலவியது.

2020-ஆம் ஆண்டுக்குள் 360 சீன போர்க்கப்பல்கள் உருவாகின என்று அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க கப்பற்படையிடம் 355 போர்க்கப்பல்கள் உள்ளன. தற்போது சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கப்பல்படை என்ற பெயரை சீன கப்பல் படை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கப்பல்களில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமாக அண்டை நாடுகளுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக தற்போது ஜப்பான், தென் கொரியா, தைவான் உள்ளிட்ட பல அண்டை நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

Editor's Choice

இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிறந்த இடங்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நடத்துகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி டெல்லியில் அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,' சுமார் 10லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில் சென்னைக்கு 4வது இடமும், கோவைக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பக்கம் 21 / 74