Editor's Choice

பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம் சார்ந்த உரையாடல்கள் இன்றைக்குச் சமூகத்தில் அதிகரித்திருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இந்த விஷயங்கள் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது ஆய்வுக்குரியது!

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 85% பேர், தாங்கள் பெண்கள் என்பதாலேயே சம்பள உயர்வு, பணி உயர்வு, பணி சார்ந்த வாய்ப்புகள் ஆகியவற்றைத் தவறவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலைச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

கருத்துக்கணிப்பு இணையம் வழியாக நடைபெற்றது. 18 முதல் 65 வரை உள்ள சுமார் 10,000 பேர் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்திருந்தனர். இந்தியாவில் மட்டும் 2,285 பேர் பங்கெடுத்தனர்.

பணிக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் காலையில் தங்கள் குடும்ப மற்றும் வீட்டு வேலைகளை முடித்தபிறகே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு பணிக்குச் செல்கின்றனர். இத்தகைய குடும்பப் பொறுப்புகளை நிர்வகிப்பதனால் பணி சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாக 10-ல் 7 பெண்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பாலின சமத்துவம் தங்கள் பெற்றோர் காலத்தைவிட இப்போது மேம்பட்டிருப்பதாக 66% பேர் கருதுகின்றனர். தங்கள் நிறுவனம் ஆண்களுக்கே சாதகமாக இருக்கிறது என இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் ஐந்தில் ஒருவர் கூறுகின்றனர். மேலும், ஆண்களைவிட தங்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாக 37% பெண்கள் கருதுகின்றனர்.

பாலினப் பாகுபாடு, குடும்பப் பொறுப்புகளுடன் கொரோனா பெருந்தொற்று பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை குடும்பத்திலும், பணி சார்ந்து ஏற்படுத்தியிருக்கிறது.  பணியிடங்களில் பன்மைத்துவம், நெகிழ்வுத்தன்மை, ஆகியவற்றோடு பெண்களின் பங்கெடுப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Editor's Choice

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

ஹாரி - மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் - மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மார்ச் 7ஆம் தேதி வெளியாகிறது.

ஹாரி - மேகன் மார்கலின் நேர்காணல் குறித்த வீடியோ தொகுப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

“எனது மிகப்பெரிய கவலையான வரலாறு திரும்பியது. எங்கள் இருவருக்கும் இது மிகக் கடினம். நான் எனது மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு எனது மனைவி உள்ளார். நாங்களாவது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறோம். எனது தாயார் அவர் வாழ்நாளில் அவர் சந்தித்த பிரச்சினைகளை தனியாகக் கடந்து வந்ததை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார்.

Editor's Choice

சர்வதேச மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

உக்ரைனில் சர்வதேச மல்யுத்த போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் மோதினார். இதில் தொடக்கத்தில் எதிராளியை மடக்கித்தள்ளி 4-0 என்று வினேஷ் முன்னிலை பெற்றார். அதன் பிறகு பதிலடி கொடுத்த கலாட்ஜின்ஸ் 4-4 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார்.

தொடர்ச்சியாக 4 புள்ளிகளை வசப்படுத்திய வினேஷ் போகத் முடிவில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

Editor's Choice

ஒவ்வொரு மாதமும் மத்திய, மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். இவை பெரும்பாலும் சாதாரண மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவை. மார்ச் மாதம் என்னென்ன மாற்றங்கள் என தற்போது காணலாம்.

 அரசு மானியம் மற்றும் அரசு நேரடியாக பணமாக அனுப்பக்கூடிய சலுகைகளை பெற SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.

இந்தியன் வங்கியின் ATM-களில் இனி வாடிக்கையாளர்களால் 2000 ரூபாய் நோட்டு எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கி (Indian Bank) ATM-களில் 2000 ரூபாய் நோட்டு வராது.

இன்று முதல் சுங்கச் சாவடிகளில் இலவச ஃபாஸ்டேக் (free FASTag) வழங்கப்படாது என இந்திய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. புதிதாக ஃபாஸ்டேக் வாங்க விரும்புவோர் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

Editor's Choice

பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றம் சாட்டப்பட்டவரிடம், நீங்கள் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வீர்களா என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, “ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அவ்வாறு என்றால் நாங்கள் உதவுகிறோம். இல்லை என்றால் நீங்கள் உங்கள் பணியை இழக்க நேரிடும். சிறையிலும் அடைக்கப்படுவீர். நாங்கள் உங்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நாங்கள் உங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது.

பெண் கேட்டபோது திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண் வீட்டார் தற்போது மனுதாரர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். மனுதாரர் அரசாங்க ஊழியர் என்பதால், அவர் கைது செய்யப்பட்டால் வேலை பறிபோகிவிடும்” என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி பாப்டே, "அந்தச் சிறுமியை மயக்குவதற்கு முன்பும், பலாத்காரம் செய்வதற்கு முன்பும் இதைப் பற்றி நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது நீ அரசு ஊழியர் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டாமா" எனக் கேட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, "குற்றம் சாட்டப்பட்ட மனுதாரரை 4 வாரங்கள் கைது செய்யத் தடை விதித்து, அதற்குள் முறைப்படி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்" என உத்தரவிட்டார்.

Editor's Choice

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தியது. எமரால்டு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய விதர்பா அணி 41 ஓவரில் 150 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அக்‌ஷய் வாத்கர் 31, சஞ்சய் ரகுநாத் 28, ஹர்ஷ் துபே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தமிழக பந்துவீச்சில் பாபா அபராஜித், கவுசிக், முகமது தலா 3 விக்கெட், சிலம்பரசன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஆட்டத்தை விரைவாக முடித்து மொத்த ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியாக ஜெகதீசனுடன் இணைந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் இன்னிங்சை தொடங்கினார்.

அதிரடியாக 2 சிக்சர் விளாசிய அவர் 14 பந்தில் 19 ரன் எடுத்து வெளியேறினார். ஜெகதீசன் 48 ரன், கவுசிக் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஷாருக் கான் 6, அபராஜித் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தமிழக அணி 11.2 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது. முகமது 37 ரன், ரஞ்சன் பால் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2வது இடம்: பி பிரிவில் ஆந்திரா, தமிழகம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆந்திரா (0.732), தமிழகம் (0.650) முதல் 2 இடங்களைப் பிடித்தன. மற்ற பிரிவுகளில் இன்று லீக் சுற்று முடிவடைந்த பின்னரே, கால் இறுதியில் மோதவுள்ள அணிகள் உறுதியாகும்.

பக்கம் 24 / 74