Editor's Choice

இலங்கையில் கடந்த 2019ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு  சிறுபான்மையினர்களான முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து  வருகின்றன. அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை  கொண்டு வரப்பட இருக்கிறது.

உள்நாட்டின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும்  புர்கா அணிய தடை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி  அளித்து விட்டது. முந்தைய காலங்களில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகள்  புர்காக்களை அணியவில்லை. இந்த மத தீவிரவாதத்தின் அடையாளம்  சமீபத்தில்தான் தோன்றியது.

எனவே, அதற்கு நாங்கள் கட்டாயம் தடை  விதிப்போம்.தேசிய கல்விக் கொள்கையை மீறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Editor's Choice

கார்ன்வால் கடற்கரையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கடலின் மேற்பரப்பிற்கு மேலே காற்றில் மிதக்கும் கப்பல் படமெடுக்கப்பட்டுள்ளது

ஆனால் கப்பல்  கடல் பரப்பில் மேல் தான் உள்ளது. 'கானல் நீர்' கோற்றம் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வின் காரணமாக மிதப்பது போல் தோன்றுகிறது இது மாயையான தோற்றத்திற்கு (optical illusion) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

டேவ் மெட்லாக் என்பவர் தனது நாய் அழைத்துக் கொண்டு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்த  வினோதமான தோற்றத்தைக் கண்டு புகைப்படம் எடுத்தார்.

கானல் நீர் எனும் அற்புதம் , இயற்கையாக நிகழும் ஒளியியல் மாயை. கானல் நீர் என்ற சொல்லுக்கும் தண்ணீருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேற்பரப்பு மிகவும் சூடாகவும், காற்று குளிர்ச்சியாகவும் இருக்கும்போது இது போன்ற தோற்ற அதிசயங்கள் நிகழ்கின்றன.  ஒளி குளிர்ந்த காற்று வழியாகவும், சூடான காற்றின் அடுக்கு வழியாகவும் செல்லும் போது ஒளிவிலகல்  ஏற்பட்டு ஒரு மாயையான தோற்றம் கண்களுக்கும் தெரிகிறது.

Editor's Choice

இந்த இடத்தில் மாந்தோப்பு சாத்தியமில்லை என வேளாண் துறையினர் தெரிவித்தனர். அதே இடத்தில் 300 ஏக்கரில் அல்போன்சா மாந்தோப்பை உருவாக்கி ஏற்றுமதியிலும் சாதித்து வருகிறார், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஏ.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன்.

பண்ணைக்குள் நீர்த்தேக்க கண்மாயில் மழை நீரை நிரப்பினேன். ஆனாலும் உப்பு நீராகவே இருந்தது. பண்ணை ஓரங்களில் பத்தடி ஆழத்தில் வாய்க்கால்கள் வெட்டி அனைத்து வாய்க்கால்களையும் ஒன்றாக இணைத்து மழைநீரை சேகரித்தேன். நிலத்தடி நீர் உயர்ந்தது. பண்ணைக்குள் உள்ள நான்கு கிணறுகளில் சுத்தமான நீர் கிடைத்தது. பெங்களூருவில் இருந்து அல்போன்சா கன்றுகளை வாங்கி நடவு செய்தேன். 10 மீட்டருக்கு ஒன்று என 300 ஏக்கரில் 10 ஆயிரத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டேன். அனைத்திற்கும் சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை உரம் தான். நல்ல வெயில், காற்று, இயற்கை உரத்தில் தங்க நிற மாம்பழங்கள் கிடைத்தன. ஆண்டு முழுவதும் காய்க்காது. இப்போது சீசன்.

இன்னும் 15 நாட்களில் அறுவடை தொடங்கிவிடும். ஒரு டன், 2 டன் வீதம் ஜூன் வரை அறுவடை நடக்கும். ஆர்கானிக் பழங்கள் என்பதால் விலையும் கிடைக்கிறது. ஆண்டுக்கு 500 டன் வரை கிடைக்கும். பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்கிறேன். கருங்குளம் அல்போன்சா என்றால் இந்தியாவிலேயே பிரசித்தம் என்ற பெருமையை பெற்றுள்ளேன். கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளும் ஆய்வு செய்துள்ளனர். தென்னை மரங்கள், செஞ்சந்தன மரங்கள் வளர்க்கிறேன்.

விவசாயிகளுக்கு மரவிவசாயம் சிறந்தது என்பேன். அதிலும் மா வறட்சியைத் தாங்கி வளரும். சொட்டுநீர் பாசனம் அமைத்தால் கூலியாட்கள் தேவை குறையும். என்னுடைய 300 ஏக்கரில் நீர்ப்பாசனம் செய்ய 3 பேரே உள்ளனர். அடர்நடவு விவசாயத்தில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காய்க்காது. பராமரிப்பு அதிகம். என்னுடைய மரங்கள் நல்ல இடைவெளியில் வளர்வதால் சூரியவெளிச்சம், காற்று, தண்ணீருடன் ஆரோக்கியமாக வளர்கிறது என்றார்.தங்கமாக காய்க்கும் கருங்குளம் அல்போன்சா

Editor's Choice

2018-ல் Telecom Commercial Communications Customer Preference Regulation (TCCCPR) என்ற ஒழுங்குமுறையை அமல்படுத்தியது டிராய். அதன்படி, பயனர்கள் தாங்கள் தேவையில்லை என நினைக்கும் குறுஞ்செய்திகளைத் தடுக்கும் வசதியும் அளிக்கப்பட்டது. 2018-ல் கொண்டுவரப்பட்ட இந்த முறைப்படி, மொபைல்களில் பயனர்கள் எந்தெந்த குறுஞ்செய்திகளைப் பெற விரும்புகிறார்கள் என்ற பட்டியல் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருக்கும். மேலும், வணிகரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள், தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் என்ன வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் என்பது குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இவற்றைச் சரிபார்த்து வணிக நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட எண்ணில் இருந்து தான் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனவா, அவை பதிவு செய்துள்ளபடியான தகவல்களைத்தான் அனுப்புகின்றனவா மற்றும் பயனர்களின் விருப்பம், இவை அனைத்தையும் சரி பார்த்த பிறகே ஒரு குறுஞ்செய்தி குறிப்பிட்ட பயனரை அடையும். இவற்றில் ஒன்று சரியாக இல்லை என்றாலும் அந்தக் குறுஞ்செய்தியை தொலைத் தொடர்பு நிறுவனமே தடை செய்யும், அது பயனர்களை அடையாது. இந்த முறையைப் பின்பற்றினால் தேவையில்லாத மற்றும் மோசடி செய்யக்கூடிய வகையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைத் தடுக்க முடியும். மேலும் இந்த முறை குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே, அழைப்புகளுக்குக் கிடையாது. எனவே, மோசடி/தேவையில்லாத அழைப்புகள் (Spam) உங்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கும்.

2018-லேயே இந்த முறை அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் தீவிரமாக இதனை டிராய் அமல்படுத்தவில்லை என பேடிஎம் (Paytm) நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், TCCCPR முறையைத் தீவிரமாக அமல்படுத்தக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, வணிக ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் அது குறித்த தகவல்களை உடனடியாகப் பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பை அனுப்பியிருந்தது டிராய்.

கடந்த திங்கள்கிழமை, அப்படிப் பதிவு செய்யாத நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் TCCCPR முறைப்படி தடை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல வங்கி மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட, இந்த TCCCPR முறை ஏழு நாள்களுக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. அதற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எந்த வகையான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் போன்ற தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இது குறித்து தெளிவை ஏற்படுத்தவும் கூறியுள்ளது டிராய்.

Editor's Choice

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணிடம், அவரது சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு விசாரணையில் இந்த அறிவுறுத்தலை வழங்கிய உச்ச நீதிமன்றம், விதிவிலக்கான வழக்குகளில் 20 வாரங்களுக்கு அதிகமான கருவை கலைப்பதற்கு அனுமதி கோருவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

"ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருந்தால், அவருடைய சட்ட உரிமைகள் குறித்து அவருக்கு தெளிவாக கூறப்பட வேண்டும்" என்று தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்வு கூறியது. இந்திய கருத்தடை சட்டம் 1971 இன் பிரிவு 3, 20 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்தை கலைப்பதை தடை செய்கிறது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே. பிஜு, மருத்துவ காரணங்களில் அடிப்படையில் தனது கட்சிக்காரருக்கு கருக்கலைப்பு செய்வது குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்றார்.

14 வயது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டஅந்த சிறுமி 26 வார கர்ப்பத்தை சுமந்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற வழக்குகளில்  காலதாமதமாய் கிடைக்கும் தீர்ப்பால் எந்தவித பயனும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைப்பது தொடர்பான பிரச்சனையை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு எடுத்துக் கொண்டது. 

பாலியல் வல்லுறவு காரணமாக கருவுற்றப் பெண்களின் உரிமைகளுக்கும், இயல்பாக கருவுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். இந்த விவகாரம் நீண்ட நாளாக பலரால் முன்னெடுக்கப்பட்டு, பேசு பொருளாக மாறியுள்ளது. நான்கு வாரங்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட 26 வார கருவை சுமந்துக் கொண்டிருக்கும் சிறுமி இப்போது கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரவில்லை என்றும் கூறினார். ஆனால் மாநிலங்களில் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது தான் என்று நீதிபதி தெரிவித்தார்.  

Editor's Choice

சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனத்துக்கு, அந்நாட்டிலிருக்கும் ஒழுங்குமுறை அமைப்பு, மிக அதிகளவிலான அபராதம் விதிக்க கூடும் என, அமெரிக்காவின், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

சீனாவின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான, ஜேக் மாவுக்கு சொந்தமான நிறுவனம், அலிபாபா. இந்நிறுவனத்துக்கு தான் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்திருப்பதாக கூறி, நிறுவன நம்பிக்கைகள் குறித்த கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும், அலிபாபாவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே போன்ற காரணத்துக்காக, ‘குவால்காம்’ நிறுவனத்துக்கு, 7,080 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அலிபாபாவுக்கு இதை விட அதிகளவிலான அபராதம் விதிக்கப்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அண்மைக் காலமாக அலிபாபா நிறுவனர் ஜேக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஜேக் மாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.கடந்த டிசம்பர் மாதத்தில், அலிபாபா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளது, அலிபாபா நிறுவனம்.

பக்கம் 14 / 74