Editor's Choice

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியுசி கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்த இடத்தில் ஸ்மித் இருக்க சென்னை டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் முன்னணி இடத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் ஆஸிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய துணைக் கேப்டன் ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அணிக்குள் கோலிக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன. 

Editor's Choice

தற்சார்பு இந்தியா என்ற ஆத்மனிர்பர் பாரதம் என்பதை ஊக்குவிக்க வேண்டும், அதற்கு ஆதரவு தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அப்போதிருந்து, பல உள்ளூர் டெவலப்பர்கள் மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அத்தகைய ஒரு செயலி தான் கூ ( Koo) - இது ட்விட்டருக்கு இந்திய மாற்றாக உள்ள சமூக ஊடக செயலி.

பல அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் இந்திய சமூக ஊடக நெட்வொர்க்கான கூ ஊடகத்தில் பதிவுகளை இடத் தொடங்கியுள்ளனர். சட்டம் மற்றும் நீதி துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர், கூவில் இணைந்த முக்கிய அமைச்சர்களில் அடங்குவர். 

விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178  டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ள நிலையில், முக்கிய அமைச்சர்கள் இந்த தளத்திற்கு மாறுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், ட்விட்டருக்கு மாற்றான, உள்நாட்டு செயலியான கூ-வை வலுப்படுத்தும் நோக்கம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கூ, என்பது ட்விட்டருக்கு  ஒரு இந்திய மாற்று. இந்திய மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளம் Koo, அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் மார்ச் 2020 இல் உருவாக்கப்பட்டது. ட்விட்டரைப் போலவே, கூ ஒரு மைக்ரோ பிளாக்கிங் தளமாகும். இந்த தளம் ஆகஸ்ட் 2020 இல் இந்திய அரசு நடத்திய தற்சார்பு இந்தியாவின் புதுமை சவாலையும் வென்றது.

இந்த செயலியின் முக்கிய அம்சம் பல இந்திய பிராந்திய மொழிகளை இது உள்வாங்குகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா மற்றும் அஸ்ஸாம் மொழி ஆகியவற்றில் எழுதலாம்.

கூவில் உள்ள பயனர்கள் பதிவுகள், ஆடியோ, வீடியோ, புகைப்படங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ட்விட்டரைப் போலவே, கூவும் பயனர்கள் பரஸ்பரம் டி.எம் வழியாக சாட் செய்யலாம். மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளத்தில் நீங்கள் கருத்துக்கணிப்புகளையும் நடத்தலாம்.

Editor's Choice

தமிழகத்தில் டிரீம் -11 (dream 11) என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது.

பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது.

இதையடுத்து பிப்ரவரி 4 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த தடையை மீறி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த டிரீம் -11 என்ற ஆன்லைன் சூதாட்டத்திற்கு தற்போது தமிழக அரசு தடை விதித்துள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு dream 11 க்கு தடை விதித்துள்ளது.

Editor's Choice

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். இவர் இசையமைப்பாளர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, ஜி.பி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் இசையமைப்பாளராக இருந்துகொண்டே நடிகர்களாகவும் ஜொலித்துக்கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் பாலாஜி. இவர் தமிழ் சினிமாவில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி( கன்னடா) உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழில் வெளியாகி வெற்றிப் பெற்ற த்ரிஷா இல்லைனா நயன் தாரா என்ற படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க இசையமைப்பாளர் பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் நடிகையாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு இயக்குநர் ரங்க புவனேஸ்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக 100 செயலிகள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய அரசின் உத்தரவின் பேரில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட செயலிகள் அனைத்தும் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து அதனை தவறாக பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலகட்டத்தில் 100 செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது மேலும் இதே போன்று இன்னும் சில செயலிகள் இருப்பதாகவும் இந்த செயலிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வேண்டும் என்றும் இல்லையேல் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Editor's Choice
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான கார் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு  மறையீட்டு நாணயமான பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
 
மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும்  முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பின் காரணமாக, ஊசலாடி கொண்டிருந்த பிட்காயினின் விலை 17 சதவீதம் உயர்ந்து, முன்னெப்போதுமில்லாத வகையில் 44,220 டாலர்கள் என்ற  உச்சத்தை அடைந்துள்ளது.
 
நிறுவனத்தின் தினசரி நடவடிக்கையில் பயன்படுத்தப்படாத பணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த நிறுவனம்  தெரிவித்துள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு "#bitcoin" என்ற ஹேஷ்டேகை தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் மஸ்க் சேர்த்ததை அடுத்து, பிட்காயின்களின் விலை  அதிகரிக்க தொடங்கியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
 
அடுத்த சில நாட்களிலேயே அந்த ஹேஷ்டேகை மஸ்க் தனது கணக்கிலிருந்து நீக்கிவிட்டாலும், பிட்காயின் மட்டுமின்றி டோஜ்காயின் உள்ளிட்ட மற்ற மறையீட்டு  நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
 
பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், டெஸ்லா ஜனவரி மாதத்தில் "தனது முதலீட்டுக் கொள்கையை புதுப்பித்தது" என்றும் இப்போது மின்னணு நாணயங்கள், தங்கம் அல்லது அதனுடன் தொடர்புடைய முதலீடுகளில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
 
"நாங்கள் ஏற்கனவே 150 கோடி டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை வாங்கியுள்ளோம். மேலும் வருங்காலத்தில் இன்னமும் மின்னணு பணத்தில் முதலீடு செய்யவும்,  தக்கவைக்கவும் திட்டமுள்ளது. மேலும், சட்டங்களுக்கு உட்பட்டு, எதிர்காலத்தில் எங்கள் தயாரிப்புகளுக்கான கட்டண வடிவமாக பிட்காயினை ஏற்கத் தொடங்குவோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு மத்தியில் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்கு "விளிம்பில்" பிட்காயின் இருப்பதாக கடந்த வாரம் ட்விட்டர் பதிவு  ஒன்றில் மஸ்க் தெரிவித்திருந்தார்.
 
மறையீட்டு நாணயத்தின் (Virtual Currencies) வரலாற்றில் டெஸ்லாவின் சமீபத்திய முதலீடு புதிய திருப்புமுனையாக இருக்கக்கூடும் என்று சில  ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"டெஸ்லா முதல் நகர்வை தொடக்கி வைத்துள்ளதை அடுத்து, மற்ற நிறுவனங்களும் பிட்காயினில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டும் என்று நான்  நினைக்கிறேன். ஏனெனில், பிட்காயினை வாங்கியுள்ளது, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று" என்று கிரிப்டோகரன்சி ஆராய்ச்சி நிறுவனமான மெசாரியின் சந்தை நுண்ணறிவுப் பிரிவின் துணைத் தலைவர் எரிக் டர்னர் கூறினார்.
 
ஆனால், பிட்காயின் ஒரு "மிகவும் ஊசலாட்டம்" கொண்ட மறையீட்டு நாணயம் என்று மார்க்கெட்ஸ்.காமின் தலைமை சந்தை ஆய்வாளர் நீல் வில்சன்  எச்சரிக்கிறார்.
 
"டெஸ்லா இப்போது பெரிய அபாயத்தை சந்திக்க தொடங்கியுள்ளது. இது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என்று அவர் கூறியுள்ளார்.

பக்கம் 43 / 74