Editor's Choice

உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியின் உதவியுடன் நீங்கள் இதயத் துடிப்பை அளவிட முடியும். அது மட்டுமல்ல, நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம்.

ஸ்மார்ட்போனின் கேமரா மூலம் இது செயல்படும். அடுத்த மாதத்திலிருந்து இந்த செயலியை பயன்படுத்த முடியும். 

ஸ்மார்ட்போன் சென்சாரை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் நடை தூரத்தைக் கண்டறிகிறது கூகிள் ஃபிட்  செயலி. மேலும் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டறியலாம். கூகிள் பிக்சல் தொலைபேசியில் வரும் புதிய செயலியின் மூலம், உங்கள் பிட்னஸை தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தொலைபேசி லென்ஸில் விரல் வைக்க வேண்டும். சருமத்தின் நிறம் மாறும். இதன் அடிப்படையில், உங்கள் இதய துடிப்பு எவ்வளவு என்பதை கேமரா மூலம் அறிய முடியும். இதன் மூலம், நீங்கள் இதய துடிப்பு வீதத்தை அளவிட முடியும். பிட்டாக இருக்க இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதையும் இந்த செயலி விளக்குகிறது.

கூகிளின் ஃபிட் செயலில் சுவாசத்தை  அளவிட, நீங்கள் கேமராவுக்கு முன்னால் நிற்க வேண்டும். ​​நீங்கள் சுவாசிக்கும் போது கேமரா உங்களை கண்காணித்து உங்கள் சுவாச வீதம் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்கும். இதன் மூலம்  உங்கள் சுவாச வீதம், துடிப்பு மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றை விரைவாகக் கண்டறியும்.

மருத்துவரிடம் செல்லாமலேயே இதயத்துடிப்பு மற்றும் சுவாசவீதம் அறிந்து கொள்ளலாம் என்பது ஆச்சரியப் படக் கூடியது.

Editor's Choice

பிரபல வணிக இதழான போர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்’ என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.

ஆண்டுதோறும், ஆன்லைன் பரிந்துரை, ஜூரிக்களின் பட்டியல் மற்றும் ஃபோர்ப்ஸ் குழுவின் ஆய்வு என மூன்று கேட்டகிரியில் 30 வயதுக்குள் சாதித்த 30 இளம் சாதனையாளர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி (நடிகையர் திலகம்) படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி, இப்போது மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்லா பட ஷூட்டிங்கில் துபாயில் பிஸியாக இருக்கிறார்

கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான 28 வயதானகீர்த்தி சுரேஷ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தென்னிந்திய பிரபலம் கீர்த்தி சுரேஷ் மட்டும்தான். போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் ‘புல்புல்’லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

“போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

அமெரிக்காவைச் சேர்ந்த பேபால், பணப் பட்டுவாடா மேற்கொள்வதில் முன்னிலையில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

பேபால் நிறுவனம், இந்தியாவுக்குள் மேற்கொள்ளப்படும் அதன், ‘டிஜிட்டல்’ பணப் பட்டுவாடா சேவையை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, இந்தியாவுக்குள் நடைபெறும் சேவை மட்டும் நிறுத்திக் கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய வணிகங்களின் வெளிநாட்டு விற்பனையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:இந்திய வணிகங்கள், எங்களுடைய உலகளவிலான, 35 கோடி வாடிக்கையாளர்களை எளிதில் அணுகி, அவற்றின் பன்னாட்டு விற்பனையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் உள்ள, 3.6 லட்சம் வணிகர்கள் மூலம், 10 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பேபால் பணப் பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Editor's Choice

உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில், தவறாக சித்தரிக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்திற்கு, விளக்கம் அளித்து, பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இணையதள பக்கத்தில், இந்தியாவின் வரைபடம், தவறாக வெளியிடப்பட்டிருந்தது. ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு, அக்ஷய் ஷின் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகள், சீனாவின் அங்கமாக வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தன. உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில், இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததற்கு, மத்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இணையதளத்தில், அந்த வரைபடத்துடன், 'டிஸ்கிலெய்மர்' எனப்படும், விளக்கம் அளிக்கப்பட்டது.

வரைபடத்தில், எந்தவொரு நாட்டையோ, எல்லைகளையோ அல்லது பகுதியையோ முறையாக குறிக்கவில்லை. இந்த வரைபட விபரங்கள், உலக சுகாதார அமைப்பு வெளிப்படுத்தும் எண்ணங்களும் அல்ல. எந்த நாடுகளின் எல்லைகளையும் குறைத்து காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடப்படவில்லை. வரைபடத்தில், புள்ளிகள் மற்றும் கோடுகளால் காட்டப்பட்டவை, தோராயமான எல்லை கோடுகள். இந்த கோடுகள், உண்மையான எல்லை பகுதிகளாக இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

கணினி அல்லது இணையம் தொடர்பான, மின்வெளி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.

தகவல் தொழில்நுட்பம் என்பது இருமுனையும் கூர்மை கொண்ட ஓர் ஆயுதம். அதை கையாளும்போது சற்று கவனம் சிதறினாலும் நம்மை குத்திக் கிழித்து விடும். கொரோனா காலத்தில் முன்பைக் காட்டிலும் மிக அதிகமாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் கையாளுகிறோம். வேலைக்குச் செல்லவோ பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லவோ வாய்ப்புகள் குறைந்து போன நேரத்தில் பாதுகாப்பு கருதி இன்னமும் வீட்டிலிருந்து சிலர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

படம் பார்ப்பது முதற்கொண்டு சாப்பாடு தருவிப்பது வரை அன்றாடம் நாம் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறோம். ஒரு செயலியை நம்முடைய அலைபேசியில் (ஸ்மார்ட்போன்) பதிவிறக்கம் செய்ய அது விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் அது குறித்த புரிதல் ஏதும் இல்லாமலே ஆமோதித்து ஒப்புதல் வழங்குகிறோம். 'கூகுள்' போன்ற தேடுபொறிகள் இலவசமாகவே எண்ணற்ற தகவல்களை நமக்கு வாரி வழங்குகின்றன.

நம் தேவை என்ன, நம் விருப்பம் எதைச் சார்ந்தது, நாம் அன்றாடம் எவற்றையெல்லாம் கவனிக்கிறோம் என்று தேடுபொறிகள் நம்மைப் பற்றிய தகவல்களை நமக்கே தெரியாமல் திரட்டி வைத்துள்ளன. சொல்லப்போனால், அவை நம்மைப்பற்றி நம்மைவிட அதிகம் தெரிந்து வைத்துள்ளன. சில செயலிகள் நம்முடைய தகவல்களைத் திரட்டி, வர்த்தக ரீதியில் தேவைப்படுவோருக்கு வழங்கி பணம் ஈட்டுகின்றன.

மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்கள் இப்படி பல்வேறு நிறுவனங்களுக்கு வர்த்தக நோக்கில் பகிரப்படுகின்றன. இவை அனைத்தும் பள்ளிகளில் மட்டுமே பதிந்து வைத்திருந்த அலைபேசி எண்கள். வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க விருப்பமா என கேட்டு நாளொன்றுக்கு 30 அழைப்புகள் வந்ததாக என் தோழி கூறினாள்.

நம் நேரத்தை நம்மிடமிருந்து பிடுங்கும் இச்செயல் தகவல் திருட்டால்தான் ஏற்படுகிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனைத்து இலவசங்களும் நமக்குக் கிடைக்கின்றன. நம்மைப் பற்றிய தகவல்களைப் பரிமாறும்போது கவனமாக இருந்தால் சில நெருக்கடிகளை நாம் களையலாம். இன்று சிறப்பங்காடிகள் முதற்கொண்டு எங்கு போய் என்ன பொருள் வாங்கினாலும் அலைபேசி எண் கேட்கப்படுகிறது. நாமும் எவ்வித யோசனையுமின்றி போகுமிடமெல்லாம் அனைவரிடமும் எண்ணை பதிந்து கொள்ள அனுமதிக்கிறோம். ஏன், எதற்கு என்று வினவினாலோ தங்களுடைய தள்ளுபடி விற்பனைகளை நமக்கு குறுந்தகவலாக அனுப்பி வைப்பதற்கு என்கிறார்கள்.
 

குடியிருப்புகளில், அலுவலகங்களில் அனைவரும் இணையத்தை பயன்படுத்துவதற்கு வசதியாக சுலபமான ஒரு கடவுச்சொல்லைப் (Password) பதிந்து வைத்திருப்பர். ஆனால், சிலர் இலவச இணையத்திற்காக (Wi-fi), கடவுச்சொல்லைக் கேட்டு பெறுவது இன்று வாடிக்கையாகி விட்டது. நமக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இப்படி சென்று சேரும் தகவல்களால் நம் பாதுகாப்பு குறையும்.நம் கடவுச்சொல்லை பிறர் தவறாக உபயோகிப்பதைத் தடுக்க, அவ்வப்போது அதனை மாற்றுதல் அவசியம். யாரும் ஊகிக்கமுடியாத கடவுச்சொல்லாக பார்த்து நாம் வடிவமைக்க வேண்டும்.

சிலர் குறிப்பிட்ட ஒரு கடவுச்சொல்லை பல வருடங்களாக மாற்றாமல் வைத்திருப்பர். என்ன பெரிதாக நடந்துவிடும் என்ற சிறு அலட்சியப் போக்கு இணையத்தை தவறாக உபயோகிப்போருக்கு சாதகமாக அமைந்துவிடும். ரயில் நிலையங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தி வைத்திருப்பர். அதைப் பயன்படுத்தத் தொடங்குகையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் சம்மதம் தெரிவிப்போம்.

இதன் மூலம் நம் அலைபேசி எண் உட்பட தகவல்கள் எல்லாம் அவர்களுக்குச் சென்றுவிடும். அதேபோல் பொது இடங்களில் நம் அலைபேசிக்கு சார்ஜ் செய்ய வேண்டாம். அங்கு சில கருவிகள் ரகசியமாக இணைத்து வைக்கப்பட்டிருந்தால் நம்முடைய முக்கிய தரவுகள் களவாடப்படக் கூடும்.

கூகுள் லைவ் லொகேஷனை பரிமாற்றம் செய்து கொள்வது பிறருடைய இருப்பிடத்தை கண்டு பிடிக்க பேருதவியாகத்தான் இருக்கிறது.ஆனால் அதன் மூலம் நாம் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறோம் என்னும் தகவல் பிறருக்கு தேவைப்படும் பட்சத்தில் கிடைத்து விடும். இதன் மூலமே குற்றவாளிகள் எளிதில் பிடிபடுகிறார்கள். குற்றச்செயல் புரிபவர்கள் தான் கலங்க வேண்டுமேயன்றி பொதுமக்கள் இதுகுறித்தெல்லாம் பயம் கொள்ளத் தேவையில்லை.

நமக்கு வெளிப்படையாகக் காணக்கிடைக்கும் இணைய செயல்பாடுகள் வெறும் ஐந்து விழுக்காடு மட்டுமே. நாம் உள்நுழைந்து தேடும், செயல் புரியும் அனைத்தும் இதனுள்ளேயே அடங்கும். மீதமிருக்கும் 95 சதவீதம் இருண்ட இணையமாக (டார்க் வெப்) உலகம் முழுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கென்று எந்த வரைமுறையும் ஒழுங்குமுறையும் கிடையாது. சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவர்த்தனைகள், போதைப் பொருள்கள், கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை எல்லாம் இதன் வழியே சக்கைபோடு போடுகின்றன.

ராணுவ ரகசியங்கள் உட்பட பிறருக்கு தெரியக்கூடாது என பாதுகாக்கும் ரகசியங்கள் பெரும்பாலும் டார்க் வெப் மூலமே பரிமாறப்படுகிறது. பல மருத்துவமனைகள், நிறுவனங்கள் தங்கள் விவரங்களை டார்க் வெப் மூலமும் சேமித்தும் வைக்கின்றன.ஒரு வழித்தடத்தில் போவதை இன்னொரு வழித்தடத்தில் பயணிப்பவர்களால் பார்க்க முடியாது. பயணிக்கும் ஆபத்தான காட்டு வழியில் ஆளுக்கு ஒருபுறம் ரகசிய வழியில் செல்வது போன்றது தான் இருண்ட இணையத்தில் பயணிப்பது.

அண்மையில் வாட்ஸ் ஆப் அறிவித்த தனியுரிமைக் கொள்கை பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்பட்ட நபர்களுக்குள் பகிர்ந்துகொண்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரக்கூடும் என்ற அச்சம் அந்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்வினையாற்றியது. புதிதாக ஒரு அலைபேசியை உபயோகிக்க ஆரம்பித்தாலே அது விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம் தெரியாமல் சம்மதம் தெரிவிக்கிறோம்.

தகவல் தொழில்நுட்பம் நம்முன் கடலைப்போல விரிந்து கிடக்கிறது. அதன் ஆழம் தெரிந்து, அலைகளின் வேகம் அறிந்து இறங்க வேண்டும். எப்போதும் கவனத்துடனே பயணிக்க வேண்டும்!

Editor's Choice

மொபைல் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டால் சர்வீஸ் சென்டர்தான் பல சமயங்களில் தீர்வு. அவர்களிடம், போன் தண்ணீரில் விழுந்தது குறித்து பொய் சொல்லக் கூடாது.

இப்போது மொபைல்களில் இம்மெர்ஷன் சென்சார் உள்ளது. தண்ணீரில் மொபைல் போன் விழுந்தால் மொபைலில் உள்ள இம்மெர்ஷன் சென்சார் நீருடன் தொடர்பு கொள்வதன் விளைவாக அதன் நிறம் மாறுகிறது.

சில இன்சூரன்சுகளில் நீரில் விழுந்த மொபைலுக்கான பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கு நடந்ததை முழுமையாக, உண்மையாக சொல்வது அவசியம்.

தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். அதன் பிறகும் போன் ஆனில் இருந்தால் அதனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.

பிறகு போனை டிஷ்யூ பேப்பரினாலோ அல்லது கையடக்க துணி கொண்டோ நன்கு சுற்றி வைக்க வேண்டும்.

போனுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹெட்போன், டேட்டா கேபிள் முதலிய சாதனங்கள் இருந்தால் உடனே இணைப்பை துண்டித்துவிட வேண்டும்.

சிம் கார்டு மற்றும் மெமரி கார்டை போனில் இருந்து கழற்றி விட வேண்டும். பின்னர் போனை அரிசி நிரப்பப்பட்ட பையில் வைக்க வேண்டும்.

நீரில் விழுந்த போனை கூடுமானவரை காற்றுப் புகாத பாக்கெட்டுகளில் அடைத்து வைக்க வேண்டும். இப்படி அடைத்து வைக்கும்போது நீரை உறிஞ்சும் வகையிலான சிலவற்றை போனுடன் சேர்த்து பாக்கெட்டுகளில் அடைப்பது கூடுதல் பயன் தரும். சமைக்காத அரிசியானது நீரை உறிஞ்சும் பொருளாக நன்கு செயல்படும்.

காற்று புகாத பைகளில் சமைக்காத அரிசியை ஸ்மார்ட் போனுடன் சேர்த்து 24 முதல் 48 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.

போனை ஹேர் டிரையர் கொண்டு உலர்த்த கூடாது. ஹேர் டிரையரிலிருந்து வருவது மிகவும் சூடான காற்றாகும்.

இந்தச் சூடான காற்றை போனுக்குள் செலுத்தும்போது போனில் உள்ள பலவீனமான மின்னணு கூறுகள் அதன் செயல்பாட்டை இழந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் போனை ஹாட் ஓவன் மற்றும் ரேடியேட்டர் அருகில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தூயநீர் கொண்டு போனை கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

ஸ்மார்ட் போன் ஆனது உப்பு நீரை விட தூயநீரில் விழுந்தால் அதைச் சரி செய்து விடுவது எளிது. எனினும் உப்பு நீரில் விழுந்த போனை தூயநீர் கொண்டு மீண்டும் கழுவுவது என்பது தவறு.

ஏனெனில் உப்பு நீரில் விழுந்த போனின் பாகங்கள் ஏற்கனவே ஆக்சிஜனேற்றம் அடைந்து விடுகிறது.

இவ்வகையான போன்களில் உடனே செய்ய வேண்டியது நமக்கு தேவையான டேட்டாக்களை பேக் அப் செய்வது தான்.

உடனே, சேவை மையத்துக்கு மொபைலை கொண்டு செல்லு சர்வீஸ் செய்வதுதான் உத்தமம்.

பக்கம் 47 / 74