Editor's Choice

Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.

இணையத்திற்கான Wi-Fi இணைப்பு மிக விரைவில் ஒரு பழைய விஷயமாக மாறப்போகிறது. வரவிருக்கும் காலங்களில், இணைய இணைப்புக்கான Li-Fi தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கும். அதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், தற்போதைய Wi-Fi இணைய வேகத்தை விட Li-Fi 20 மடங்கு வேகமாக இருக்கும்.

இந்தியாவில் Li-Fi தொழில்நுட்பத்திற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.  ஆந்திராவில் Project X-இன் கீழ், கூகிள் இந்தியாவில் Li-Fi தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டுள்ளது.

Li-Fi தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள்  ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில், ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் இணைய தரவு மாற்றப்படுகிறது. ஒளி கற்றைகள் கம்பிகளோ அல்லது இணைப்புகளோ இல்லாமல் தரவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும். தொலைதூர பகுதிகளில் இணைய சேவையை வழங்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

Project X- இன் கீழ் Li-Fi மூலம் இணைய வேகம் 20 ஜிகாபைட் (gbps) வரை அதிகரிக்கிறது. தற்போதைய இணைய வேகம் 1 ஜிகாபைட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Li-Fiன் மூலம்  20 கி.மீ சுற்றளவில் உள்ள பயனர்கள் ஒரே இணைப்பின் மூலம், வேகமான இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Editor's Choice

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று என்பதால், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டினர். கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு பகுதிகளும் ஊரடங்கால் முடங்கியது. சர்வதேச விமானங்களும் பல மாதங்கள் நிறுத்தப்பட்டன.

இது, நம் நாட்டிற்கான சுற்றுலா பயணியரின் வருகையை வெகுவாக குறைத்தது.  ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச், 17 முதல் செப்., 21 வரை தாஜ்மஹால் மூடப்பட்டிருந்தது. இதனால், தாஜ்மஹாலுக்கான சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும் நிலையில், கடந்த ஆண்டு, 76 சதவீதம் குறைந்துள்ளது. இதன்படி, 2019ல், 7.37 லட்சம் வெளிநாட்டு பயணியரும், 48.35 லட்சம் உள்நாட்டு மக்களும் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

கடந்த ஆண்டு தாஜ்மஹாலுக்கு வருகை தந்த வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை, 1.82 லட்சமாகவும், உள்நாட்டு மக்கள், 11.34 லட்சமாகவும் குறைந்துள்ளது என, அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலா பயணியரின் வருகை இல்லாததால், அவர்களை நம்பி தொழில் செய்யும் வழிகாட்டிகள் மற்றும் வியாபாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Editor's Choice

டிஜிட்டல் இந்தியா விற்பனையின் முன்பதிவு சலுகைகளை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் முன்னெப்போதையும் விட இரட்டை நன்மைகளுடன் சிறந்த மற்றும் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள்.

ஜனவரி 18 முதல் 20 வரை இயங்கும் புத்தகத்திற்கு முந்தைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மின்னணு பொருட்களை ரூ.1,000 முன்பதிவு செய்து பதிவு செய்யலாம். இதன் பின்னர், 'டிஜிட்டல் இந்தியா சேல்' உடனடி தள்ளுபடியுடன் கூடுதல் தள்ளுபடியின் கீழ் 1,000 ரூபாய் தள்ளுபடியைப் பெற முடியும்.

முன்பதிவு செய்வதற்கு ரூ.2,000 முன்கூட்டியே கொடுக்கும் விருப்பத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம், அதன் பிறகு அவர்களுக்கு EMI மற்றும் கூடுதல் சலுகைகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும். இது ஜனவரி 22 முதல் ஜனவரி 26 வரை தொடங்கும்.

இந்த சலுகைகள் அனைத்தும் Reliance Digital, My Jio Stores மற்றும் ஆன்லைன் reliabncedigital.in இல் கிடைக்கின்றன. எலக்ட்ரானிக் தொடர்பான பெரிய சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களுடன், இந்த முறை குடியரசு தினத்தின் 'Digital India Sale' பல பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உடனடி தள்ளுபடியையும் வழங்கும்.

Editor's Choice

அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் என்பவர் சாம்சங் நிறுவனத்தை துவங்கினார். ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. ஆப்பிளுக்கு நிகராக சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு மூன்று தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. லியின் மகன் லி கொன் ஹி 1987-இல் சாம்சங் தலைவராகப் பொறுப்பேற்றார். 2008 வரை அவர் தலைவர் பதவியில் நீடித்தார். அந்த காலகட்டத்தில் டிவி, சாம்சங் வீடியோ பிளேயர், ஆடியோ சவுண்ட் சிஸ்டம், செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் விற்பனையில் சாதிக்கத் துவங்கியது சாம்சங்.

2009, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுத்துக்கொண்ட லீ, பின்னர் 2011 முதல் 2020ல் தனது மறைவு வரை தலைவர் பதவியில் நீடித்தார். தந்தையின் மறைவை அடுத்து மூன்றாவது தலைமுறையாக அவரது மகன் ஜே ஒய் லீ துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். தாத்தா மற்றும் அப்பா போல இவரும் சாம்சங் நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று தொழில் முன்னேற்றம் காண முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இவர்மீது லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

52 வயதான ஜே ஒய் லீ, 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை விசாரித்த சியோல் உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதித்துள்ளது.

ஜே ஒய் லீ தென்கொரிய ஆளும் கட்சியைப் பகைத்துக் கொண்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஜே ஒய் லீ கைதான பின்னர் சாம்சங் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் அடுத்து யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Editor's Choice

இந்தியாவின், ஒவ்வொரு மாநிலத்திலும், வருவாய்த்துறை தான், நிர்வாகத்துறையாக விளங்குகிறது. வருவாய்த்துறையில் வரும் அலுவலர்களே, மாவட்டத்தை ஆளும் கலெக்டர் என்ற அந்தஸ்துள்ள பதவியை பெறுகின்றனர். வருவாய்த்துறையின் வரலாற்றை, தற்போதைய இளம்தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாநில மையம், வருவாய்த்துறை தொடர்பான தகவல்களை திரட்டி, வெளியிட்டுள்ளது.

கி.மு. 320 -650 வரையிலான குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் தான், நிலவரியை பணமாக வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் மற்றும் துருக்கி சுல்தான் மன்னர்கள் வழியில், பணமாக மட்டுமல்ல, தானியமாகவும் நிலவரி பெறப்பட்டது. புதிய நில அளவை மற்றும் நில வகைபாடு முறை, கி.பி.1538 முதல் 1545 வரையிலான, ஷேர்சா சூரி என்ற மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிலவரி வசூலிக்க வசதியாக, ஜாகிர்தார்களும், ஜமீன்தார்களும் உருவாக்கப்பட்டனர்.

1772ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்த போது, வருவாய் வாரியம் அமைத்து, முதன்முறையாக கலெக்டர் நியமிக்கப்பட்டனர். அப்போது, ஜமீன்தாரி முறை, ராயத்துவரி, மகசூல்வரி என்று மூன்று வகையான நிலவரி வசூல் செய்யப்பட்டது.கடந்த, 1820ல் ராயத்து வரி வந்த பின்னரே, நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. அவர்களிடம் இருந்து நேரடியாக நிலவரி வசூலிக்கப்பட்டது. மகசூல் வரி, 1833ல் அறிமுகமானது. கவர்னர்கள் நிர்வாக வசதிக்காக, இங்கிலாந்து அரசி எலிசபெத் உத்தரவின்படி, 1789ம் ஆண்டு ஜூன் 20ல் சென்னை மாகாணத்தில் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.

இவ்வாரியம் தான், நில அளவை, நிலவரி திட்ட பணி, நில பதிவுருக்கள் பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொண்டது.கடந்த, 1916ம் ஆண்டுக்கு பின், வேளாண்மை, கால்நடை மற்றும் கூட்டுறவு துறைகள் உருவாக்கப்பட்டன. அதன்பின், வருமான வரி, ஆயத்தீர்வை, கடல் சுங்கம், உப்புதுறைகள் அமைக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பின், சமூகநலம் மற்றும் நீதித்துறை அமைக்கப்பட்டது. வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம் மற்றும் நில சீர்திருத்தம் ஆகிய மூன்று துறைகள் நிறுவப்பட்டன. அனைத்து துறைகளுக்கான தாய் துறையான வருவாய்த்துறை, மாநில நிர்வாக பணிகளுக்கு நேரடியாக உதவும் அச்சாணியாக இருந்து வருகிறது.

வருவாய்த்துறையில், மாவட்ட நிர்வாகம், உட்கோட்ட நிர்வாகம், வட்ட அளவிலான நிர்வாகம், 'பிர்கா' நிர்வாகம், வருவாய் கிராம நிர்வாகம் என, ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 'தாசில்தார்' என்ற பதவி, கி.பி. 1556ல், முகலாய மன்னர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அரேபிய மொழியில், வருவாய் வசூல் செய்யும் அதிகாரி என்பதே தாசில்தார் என்ற வார்த்தைக்கான அர்த்தமாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி, தாசில்தார் பதவி உருவாகி, 465 ஆண்டுகள் கடந்து விட்டது. வருவாய்த்துறையின் அதிகாரம் மிகுந்த, 'கலெக்டர்' பதவி உருவாகி, 248 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

Editor's Choice

கோவை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொழில்துறை. அதிலும் குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இதன்மூலம், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில் நிறுவனங்களுக்கு கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக கடும் சோதனை ஏற்பட்டு வருகிறது. துவக்க காலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இத்தொழிலுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. அதன்பிறகு மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, 2016ம் ஆண்டு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, 2017ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி என அடி மேல் அடி விழுந்துகொண்டே இருப்பதால், மீள முடியாத அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் இக்குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது பெரும் சுமையாகி விட்டது. இந்த கடுமையான வரி விதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 45 சதவீத குறுந்தொழில் நிறுவனங்களால் இயங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், வெட்கிரைண்டர், பவுண்டரி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பெரும் நிறுவனங்களுக்கு, உதிரிபாகங்கள் செய்துகொடுக்க, குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் பெறுகின்றன. இந்த ஜாப் ஆர்டர்களை செய்து கொடுத்த பிறகு, அதற்கான பில் தொகை உடனடியாக கிடைப்பதில்லை. அந்த தொகை வருவதற்கு கிட்டத்தட்ட 3 மாதம் ஆகி விடுகிறது.

ஆனால், 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும். அதனால், பில்தொகை வராமலேயே, கையில் இருந்து பணம் போட்டு, ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய நிலைக்கு குறுந்தொழில் முனைவோர் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் நெருக்கடி காரணமாக, குறுந்தொழில் முனைவோர் பலர், தங்களது ஆலைகளை பூட்டிவிட்டு, வேறு தொழிலுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுவிட்டது. உச்சக்கட்டமாக, கொரோனா ஊரடங்கு இத்துறையை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. இதன்காரணமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.

ஆலையை திறந்து வைத்திருந்தாலும் ஆர்டர் கிடைக்கவில்லை. வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை பீளமேடு, ஆவாரம்பாளையம், கணபதி, வேலாண்டிபாளையம், சரவணம்பட்டி, சுந்தராபுரம், சிட்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பரிதாப நிலை தொடர்கிறது. அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டு வருவதால், கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

கொரோனா கால ஊரடங்கை கருத்தில்கொண்டு, குறுந்தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு தேவையான அளவு வட்டியில்லா கடனுதவி அளிக்கவேண்டும் என சிறு குறு தொழில் நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை, மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஒரு பக்கம் மத்திய-மாநில அரசுகளின் பாராமுகம், இன்னொரு பக்கம் ஜாப்ஆர்டர் இழப்பு என இரண்டும் ஒருசேர தாக்குவதால், இத்துறையில் உள்ள குறுந்தொழில் முனைவோரால் எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வை அடியோடு ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பையும் ரத்துசெய்ய வேண்டும். அந்தந்த ஆலைகளின் செயல்திறனுக்கு ஏற்ப, ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அவசரகால கடனுதவி அளிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்களை பாதுகாக்க முடியும். குறுந்தொழில் நிறுவனங்கள் இல்லையேல், பெரிய நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் செய்துகொடுக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக பெரிய நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படும். அரசுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் குறுந்தொழில் துறையை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறுகுறு தொழில் முனைவோர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்கம் 52 / 74