Editor's Choice

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டூலியஸ் என்கிற ஆற்றில் பாலை ஏற்றிச்சென்ற பெரிய டிரக் விபத்துக்குள்ளாகியது. ட்ரக்கில் ஏற்றி வந்த பல லிட்டர் பால் ஆற்றில் கொட்டியது. இதனை அடுத்து ஆறு செல்லும் பாதைகள் பால் தண்ணீருடன் கலந்து சென்றது. இதனை அப்பகுதியில் வசிக்கும் பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததால் இந்த ஆறு ஓடும் பகுதியில் வசித்துவந்த கிராம மக்கள் ஆறு திடீரென வெள்ளை நிறத்தில் ஓடியதை கண்டு அதிர்ந்தனர். ரசாயனம் ஏதாவது ஆற்றில் கலந்து இருக்குமோ என்று அஞ்சினர். பின்னர் ஆற்றில் பால் கலந்தது தெரியவந்து நிம்மதி அடைந்தனர். சில மணி நேரங்களில் இந்த பால் ஆற்றோடு சென்று கடலில் கலந்தது. ஆறு பழைய நிறத்துக்கு மாறியது. இச்சம்பவம் பிரிட்டனில் வைரலாகியுள்ளது.

Editor's Choice

பாகிஸ்தானில் பிரெஞ்சு மக்களுக்கு எதிரான வன்முறை போராட்டம் தீவிரமடைந்து, அங்கே உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தெஹ்ரீக் இ லப்பைக் (Tehreek-e-Labaik Pakistan) என்ற கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீதியில் இறங்கி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலமாகவே, பாகிஸ்தானில், வன்முறை போரட்டங்கள் தீவிரமடைந்து, நாடே பற்றி எறிகிறது. 

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானில், இந்த வன்முறை போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதை அடுத்து,  அங்கே, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து  சமூக ஊடகங்களையும் தற்காலிகமாக முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 அன்று, நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், ஒருவர், பட்டபகலில், நடுத்தெருவில் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இது பிரான்ஸில் (France) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து அதிரடி நடவடிக்கையாக,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முகம்மது நபியின் சர்ச்சைக்குரிய கார்டூனை, அரசின் கட்டிடங்களில் பிரம்மாண்டமாக திரையிட்டார். அதோடு நிற்காமல், மதரஸாக்கள் உள்ளிட்ட பல பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை விதித்து பிரான்ஸில் சட்டமும் இயற்றப்பட்டது. 

இந்நிலையில், அண்மையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கு, ஒரு பத்திரிக்கைக்கு மீண்டும் ஒப்புதல் அளித்தது தான், பாகிஸ்தானின் இன்றைய வன்முறைக்கு காரணம்.

இது கடவுள் நிந்தனை என பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ லப்பைக் அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீதியில் இறங்கி, பாகிஸ்தானில் நாடு முழுவதும் வன்முறை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Editor's Choice

'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்த, கனடா பார்லிமென்ட் கூட்டத்தின் போது, எம்.பி., ஒருவர் நிர்வாணமாக தோன்றியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவல் காரணமாக, பார்லிமென்ட் கூட்டத்தில், எம்.பி.,க்களில் பலரும், வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்று வருகின்றனர்.கனடா பார்லிமென்ட் உறுப்பினராக இருப்பவர் வில்லியம் ஆமோஸ். இவர், நேற்று முன் தினம், பார்லிமெட் கூட்டம் நடந்த போது, வீடியோ கான்பரன்சிங்கில் நிர்வாணமாக தோன்றினார். கையில் மொபைல் போனுடன், ஒரு மேஜைக்கு பின், நிர்வாணமாக நின்ற அவரது புகைபடமும், வீடியோவும் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, எம்.பி.,க்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி, ஆமோஸ் கூறுகையில், ''நடை பயிற்சி முடித்து, உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக, இந்த சம்பவம் நடந்து விட்டது; இது, துரதிருஷ்டவசமானது,'' என்றார்.

Editor's Choice

தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்கிலாந்து அரச நிர்வாக பொறுப்பை இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் ஏற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை மறுநாள் வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் ராணி, அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இறுதிச் சடங்கில் பங்கேற்க வரும் பேரன்கள் இளவரசர் வில்லியம்ஸ், ஹாரிஸ்சுக்கு 2 கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானால் தான், இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் அரச குடும்பத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 2,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உண்டு. இதற்கு பிலிப் பொறுப்பு வகித்து வந்தார்.

அப்போது அவர் பயன்படுத்திய லார்ட் சேம்பர்லெய்ன் அரசு உடைமைகள், ராயல் விக்டோரியன் செயினுடன் கூடிய சின்னம்,  செங்கோல் ஆகியவை ராணியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பிலிப் இறந்தையடுத்து, மீண்டும் அரச நிர்வாக பொறுப்பை ராணி 2ம் எலிசபெத் ஏற்றார்

Editor's Choice

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின், 130வது பிறந்த நாள், அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், அம்பேத்கரை கவுரவிக்க கோரும் தீர்மானத்தை, ஜனநாயக கட்சி உறுப்பினர் ரோ கன்னா தாக்கல் செய்தார்.

அனைவருக்கும் சம உரிமை, மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில், அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவரது கொள்கை, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அம்பேத்கரை கவுரவித்து தீர்மானம் நிறைவேற்றுவதன் வாயிலாக, அவர் ஆற்றிய பணிகள் பற்றி, உலகில் உள்ள இளம் தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும். உழைப்புகேற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு சம உரிமை, அகவிலைப்படி உட்பட பல சீர்திருத்தங்களை, இந்தியாவின் அரசியல் சட்டத்தில் அவர் அறிமுகப்படுத்தி உள்ளார் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

 
Editor's Choice
கொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
கொரோனா வைரசிலிருந்து நம்மை பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனினும் மூடிய அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வரும் ஞாயிறு முதல் இஸ்ரேலில் பொது இடங்களில் மக்கள் முக கவசங்கள் அணிந்து கொள்ளத் தேவையில்லை” என்று கூறி உள்ளார்.
 
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைந்துள்ளோம். தடுப்பூசிகள் பலனளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்கம் 43 / 90