Editor's Choice

நாட்டின் மிகப் பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில், 65 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என, ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பயணங்கள், தங்குவது ஆகியவை சுருங்கிய காரணத்தால், நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழைப்பை சந்திக்கக்கூடும். செலவினங்களை கடுமையாக குறைக்க நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளின் ஒட்டுமொத்த லாபத்தை துடைத்துவிடும் அளவுக்கு, நிகர இழப்புகளை சந்திக்க நேரிடும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் உலகம் முழுக்க மீண்டும் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், அவை வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் நிலை உள்ளது.  கொரோனாவுக்கு முந்தைய நிலையை இத்துறை நிறுவனங்கள் எட்டுவதற்கு இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என தெரிகிறது.

Editor's Choice
மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மே15-ந்தேதி வரை மூடப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. தடை காலத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி போன்ற நினைவுச்சின்னங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

தாஜ்மகாலை பொறுத்தவரை பிரதான குவிமாடத்தில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை அகற்றுதல், பிரதான வாயிலில் பதிக்கப்பட்டுள்ள பழைய கற்களை அகற்றி புதிய கற்களை பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தாஜ்மகால் புதுப்பொலிவுடன் மாறும் என தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைப்போல ஆக்ரா கோட்டையின் அமர்சிங் வாயில் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதேபூர் சிக்ரியில் தோடர்மால் பரடாரி, முகலாயர் கால வளாகங்கள் அனைத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

 
 
Editor's Choice

கடந்த 9-ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடலானது இன்று புனித ஜார்ஜ் தேவாலயத்தின் 'ராயல் வால்ட்' பெட்டகத்தில்  முறைப்படி இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தனது 99-ம் வயதில் பொது வாழ்வுக்கு விடைகொடுத்திருக்கும் இளவரசர் பிலிப்பின் நாட்டுப் பற்று, விசுவாசம், சேவை போன்றவற்றைப் பறைசாற்றும் விதமாக அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று தங்கள் மன்னருக்கு இறுதி விடை கொடுத்தனர். அதிலும், குறிப்பாக இளவரசர் பிலிப்பின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த 'பிரிட்டன் கப்பற்படை' அவருக்குக் குண்டுகள் முழங்க முழு மரியாதை செலுத்தியது.

9-ம் தேதி வின்ட்சர் கோட்டையில் உயிரிழந்த இளவரசரின் உடலானது இத்தனை நாள்களாக அங்குள்ள தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று நல்லடக்க நாளை முன்னிட்டு காலை 11 மணியளவில் ராணுவ கொடி, மாலை போர்த்தப்பட்டு, இளவரசரின் கடற்படை தொப்பி மற்றும் அவர் பயன்படுத்திய வாள் ஆகியவை சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது. சவப்பெட்டியை விண்ட்சர் கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவந்து `கிரனடியர் கார்ட்ஸ்' எனும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க எட்டு நிமிட அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த அணிவகுப்பில், இளவரசர் பிலிப் தன் மறைவிற்கு முன்னதாக விரும்பிய பாடலின் இசை ஒலித்தது. அப்போது ராணி எலிசபெத் மட்டும் சபையில் தனியாக அமர்ந்திருந்தார்.

கொரோனா பரவல் காரணமாகக் கலந்துக் கொள்ளாத இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி வாயிலாக நிகழ்வுகளைப் பார்த்தார்.
 
இறுதி ஊர்வலத்தின் போது இருபுறமும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நடுவில் லேண்ட் ரோவர் வாகனத்துடன் இளவரசர் ஹாரிஸ், வேல்ஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நடந்து சென்றனர். ராணி எலிசபெத் மட்டும் ஸ்டேட் பென்ட்லி என்றழைக்கப்படும் காரில் கோட்டையிலிருந்து முன்னதாகவே புனித ஜார்ஜ் தேவாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வின்ட்சர் கோட்டைக்கு மிக அருகாமையில் ஜார்ஜ் தேவாலயம் அமைந்திருந்ததால் இறுதி ஊர்வலமானது சில நிமிடங்களிலேயே முடிந்தது. ராணி எலிசபெத் தேவாலயத்தை அடைந்ததும், 'தேசிய கீதம்' இசைக்கப்பட்டது.

இளவரசரின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த லேண்ட் ரோவர் வாகனம் ஜார்ஜ் தேவாலயத்தை அடைந்ததும், தி கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் வகை பீரங்கிகள் தொடர்ந்து ஒரு நிமிட நேரம் இடைவிடாமல் வானத்தை நோக்கிச் சுடப்பட்டது. மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கான அபாய ஒலி ஒலித்தது. மக்கள் அனைவரும் தங்கள் மன்னர் பிலிப்பிற்கு தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினார்கள். அந்த நேரத்தில், லண்டன் மற்றும் இதர விமான நிலையங்களில் 6 நிமிடங்களுக்கு விமானங்கள் புறப்படவோ, தரையிறங்கவோ இல்லை. தேவாலயத்தின் நுழைவு படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைத் தேவாலய பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் மத குருக்கள் பெற்றுக்கொண்டு ராணுவத்தினரின் உதவியுடன் தேவாலயத்திற்கு உள்ளே கொண்டுசென்றனர்.

3 மணிக்குத் தொடங்கிய சடங்குகள் சுமார் 4 மணியளவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இளவரசர் பிலிப்பின் பூத உடலானது புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அமைந்துள்ள 'ராயல் வால்ட்' எனப்படும் சவப்பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'ராயல் வால்ட்' 1810-ம் ஆண்டு உயிரிழந்த மன்னர் ஜார்ஜுக்காக கட்டப்பட்டது. அது தொடங்கி, ஜார்ஜ் IV, மன்னர் வில்லியம்ஸ் IV என அரசகுடும்பத்தை சேர்ந்த பலரது உடல்கள் அங்குப் புதைக்கப்பட்டுள்ளன. இளவரசர் பிலிப்பின் உடல் தற்போது ராயல் வால்ட்டில் 1969-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட அவரது தயார் இளவரசி ஆலிஸ் உறைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

Editor's Choice

மும்பை வான்கடே மைதானத்தில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பீல்டிங்கிற்காக டோனி களமிறங்கியது 200வது போட்டியாகும்.  இதுவரை ஐ.பி.எல்.லில் 206 போட்டிகளை விளையாடியுள்ள டோனி, சென்னை அணிக்காக 176 ஐ.பி.எல். போட்டிகளிலும் மற்றும் 24 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
 
சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியது பற்றி, போட்டி முடிந்ததும் பேட்டியளித்த டோனி, மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.  இது ஒரு மிக நீண்ட பயணம்.  கடந்த 2008ம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது.  தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன்.  200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை என்று கூறினார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது.  அடுத்து விளையாடிய சென்னை அணி, 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த போட்டியை சென்னை அணி வருகிற திங்கட்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

Editor's Choice

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. 

 நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், "கொரோனா தடுப்பூசி  குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.

"முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும்." என்றும் நடிகர் விவேக் அப்போது விளக்கினார்.

அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு வந்த நிலையில், இதற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமோ என்ற அச்சம் மக்களிடையே பரவியது. கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவு காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற ஊகங்கள் வலுப்பெற்ற நிலையில், பீதி பரவுவதைத் தடுக்க நேற்று மதியம் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நடிகர் விவேக்குக்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  

நடிகர் விவேக்குடன் அவரது 6 நண்பர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதகவும் மருத்துவர்கள் கூறினர். அவரது திடீர் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர். 

நடிகர் விவேகிற்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது, தடுப்பூசி செலுத்திகொள்வதால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது என்பதையும் மருத்துவர்கள் விளக்கினர். "அடைப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தது. மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று மருத்துவமனை தெரிவித்தது.

கொரோனா காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு விஷயமும் கொரோனா பெருந்தொற்றுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படுகின்றது. எனினும், பெருந்தொற்று என்ற திரையை நீக்கி விட்டு உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகும். 

சிரிக்க வைத்து அனைவரையும் மகிழ்வித்த நடிகர் விவேக்கின் மரணம் பல சந்தேகங்கங்களைக் கிளப்பியுள்ளது. 

Editor's Choice

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் அட்டையை புதுப்பிப்பதற்கான விதிகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது; இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஓ.சி.ஐ. கார்டு வழங்குகிறது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு 'விசா' பெறத் தேவையில்லை. இந்த கார்டு வைத்துள்ளவர்கள் 20 வயது முடிந்ததும் ஒரு முறையும் 50 வயது முடிந்ததும் ஒரு முறையும் கார்டை புதுப்பிக்க வேண்டும்.

இதனால் 'பாஸ்போர்ட்'களை புதுப்பிக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார் செய்தனர். இந்நிலையில் 'ஓ.சி.ஐ. கார்டை 20 வயது பூர்த்தியான பின் புதுப்பித்தால் போதுமானது. அதன்பின் புதுப்பிக்க தேவையில்லை' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.

பக்கம் 42 / 90