Editor's Choice

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில், விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ர‌ஷியா தலையீடு இருந்தது உண்மை என்றாலும், ரஷிய அதிகாரிகளுக்கும் டிரம்ப் பிரசார குழுவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமான வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷியாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷியா திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியது ஆகிய விவகாரங்களில் ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதர்கள் 10 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு மற்றும் அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷிய அரசுக்கு எதிரான பொருளாதார தடைகள் விரிவுபடுத்தும் உத்தரவை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்துள்ளாா். அதன்படி 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், தோ்தல் தலையீட்டில் அங்கம் வகித்த உளவாளிகள் உள்ளிட்ட 10 ரஷிய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.‌

சா்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை குலைய செய்யும் ரஷியாவின் நடவடிக்கைகள் தொடா்ந்தால் அதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும்.

இதனிடையே தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது‌.

Editor's Choice
கொரோனா பாதிப்பு மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஆன்லைனில் பேரீச்சை பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமீரகத்தின் முக்கிய விவசாய தொழில்களில் பேரீச்சம் பழ உற்பத்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் உள்நாட்டின் பொருளாதாரத்தில் இதன் வர்த்தகம் குறிப்பிட்ட பங்களிப்பை தந்து வருகிறது.

உள்நாட்டை பொறுத்தவரையில் ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.

இந்த மாதத்தில் இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் தண்ணீருடன் முதலில் நோன்பாளிகள் உண்பது பேரீச்சம் பழம் மட்டுமே. மிக முக்கிய இடம் பிடித்துள்ள இந்த பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலைகள், குடிசை தொழில்கள் என பல்வேறு முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு மற்றும் சுட்டெரிக்கும் வெயில் ஆகியவற்றால் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாகவும், அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கி இருப்பதாலும் ஆன்லைனில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களைகட்டி வருகிறது. ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ஆன்லைன் விற்பனையில் பேரீச்சம் பழமாவதற்கு முன் உள்ள கிமிரி (பச்சை நிறத்தில் உள்ள காய்), கலால் (பச்சை ஆப்பிள் போன்ற நிறம்), பிஸ்ர் (மஞ்சள் நிறமாக மாறும் நிலை), ருதாப் (இனிப்பு சேரும் நிலை) மற்றும் தமார் (முழு பழம்) ஆகிய நிலைகளில் உள்ளவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்குகின்றனர்.
Editor's Choice

திருமணம் செய்வதும், பிறகு சில நாட்களிலே விவாகரத்து செய்வதை கேட்டிருக்கலாம். விவாகாரத்து செய்த கணவனும் மனைவியுமே, மீண்டும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொண்ட கதைகளை கேள்விப்பட்டிருக்கலாம்.  

ஆனால், தனது மனைவியை மூன்று முறை விவாகரத்து செய்த ஒருவர், அதே மனைவியை நான்கு முறை திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவத்தை யாரும் கேட்டிருக்க முடியாது! 

அதிசயமும், ஆச்சரியமும் திகைப்பும் நிறைந்த செய்தியாக தோன்றுகிறதா? அந்த அதிசய மனிதர் இவை அனைத்தையும் 37 நாட்களில் செய்திருக்கிறார் என்பது தான் இந்த விஷயத்தில் மற்றுமொரு ஹைலைட்!

இதுபோன்ற வினோதமான மனிதரையோ, நடத்தையோ இதுவரை கேள்விப்படாத ஒன்று. வங்கி ஒன்றில் பணிபுரியும் குமாஸ்தா ஒருவர் ஏப்ரல் 6 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். அதற்காக ஏப்ரல் 7 முதல் 16 வரை எட்டு நாட்கள் விடுப்பு எடுத்தார்.

விடுமுறை ஏப்ரல் 16ஆம் தேதியன்று திருமணத்திற்காக எடுத்த விடுப்பு முடிந்ததும், அடுத்த நாளே அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் அதே நாளில் மீண்டும் விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்துக் கொண்டார். 

பிறகு மீண்டும் திருமணத்திற்காக எட்டு நாட்கள் திருமண விடுப்பு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு, விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் ஏப்ரல் 28 அன்று இரண்டாவதாக திருமணம் செய்த முதல் மனைவியை இரண்டாவதாக விவாகரத்து செய்த அந்த மனிதர், அதே நாளில் மூன்றாவது முறையாக பழைய மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

மே 11 அன்று மூன்றாவது விவாகரத்து செய்துவிட்டு, அடுத்த நாள் அதாவது மே 12 அன்று மூன்று முறை விவாகரத்து செய்த பெண்ணையே நான்காவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார் இந்த விசித்திர கணவர்.

இவரது இந்த தொடர் திருமண விடுப்பு, அவர் வேலை பார்த்த வங்கிக்கும் சந்தேகத்தை எழுப்பியது. பிறகு நடைபெற்ற விசாரணையில் ஊழியரின் தில்லு முல்லு அம்பலமானது.

எனவே, அவருக்கு ஒரே ஒரு திருமணம், அதிலும் முதல் திருமணத்திற்கான விடுமுறைகளுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது.  

கில்லாடி ஊழியர் பிறகாவது சும்மா இருந்தாரா? வங்கி தனது விடுப்புகளுக்கு முழுத் தொகையையும் செலுத்தவில்லை என்று தைப்பே நகர தொழிலாளர் பணியகத்தில் வங்கி மீது புகார் அளித்தார்.

விடுப்புக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என்று வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது இந்த விவகாரத்தில் மற்றுமொரு திருப்பம்! அதுவும் வங்கிக்கு  Taipei City Labor Bureau விதித்த அபராதம் 700 அமெரிக்க டாலருக்கு மேல்.

விடுப்பு தொழிலாளர் தரநிலை சட்டத்திற்கு, இந்த வழக்கின் தீர்ப்பு இணங்கவில்லை என்று தைப்பே நகர தொழிலாளர் பணியகத்தின் தீர்ப்புக்கு வங்கி மேல்முறையீடு செய்தது.

நான்கு திருமணமும், மூன்று விவாகரத்தையும் திருமண விடுப்பு எடுப்பதற்காக செய்த மனிதனின் செயல்பாடுகள் நியாயமற்றது என்று தொழிலாளர் பணியகத்தின் தொழிலாளர் தரநிலைப் பிரிவின் ஆணையாளர் ஹுவாங் ஜிங்காங் ஒப்புக் கொண்டார்,

ஆனால், விவாகரத்து செய்த மனைவியையே மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது என்ற விதிமுறை தொழிலாளர் தரச் சட்டத்தில் இல்லை என்று அவர் கூறினார்.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த மனிதரிடம் இருந்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டும் போல!

Editor's Choice

தீண்டாமை என்றாலே சமத்துவமின்மை என்றுதான் பொருள். தீண்டாமையை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலக வரலாற்றில் இத்தகைய ஏற்றத்தாழ்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இந்து மதத்தில் இவை சர்வ சாதாரணம். ஒருவன் இன்னொரு மனிதனைத் தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கும் கீழ்த்தரமான மரபு இந்து மதத்தையும் இந்து சமுதாயத்தையும் தவிர, வேறு எங்காவது இருக்கிறதா? ஒரு மனிதனை இன்னொருவன் தீண்டுவதால் அவன் அசுத்தமாகிப் போகிறான் என்றும், அந்தத் தீண்டுதலால், தண்ணீருக்குக்கூட தீட்டு வந்துவிடுகிறது என்றும், அவன் கடவுளைத் தொழவும் அருகதை அற்றவன் என்றும் இங்கு நிலவுகிற மரபு மனித சமுதாயத்தில் வேறு எங்காவது உண்டா? அந்த அளவு உங்கள் உடலுக்கும் உங்கள் சொற்களுக்கும் கேவலமான பொருள் கூறப்படுகிறது.

தீண்டப்படாதவர்களுக்குச் சட்டம் உறுதிசெய்திருப்பதைவிட அதிகபட்சமான சமூக விடுதலை தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் சட்டரீதியான சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்குப் பெளதிக சுதந்திரம் இருக்கிறதல்லவா, எங்கு வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அவை சட்டம் விதித்திருக்கிற கட்டுப்பாடுகளை மீறாத அளவில் சரி என்று சிலர் சொல்கிறார்கள்; இந்தச் சுதந்திரத்தால்தான் என்ன பயன்?

மனிதனுக்கு உடல் மட்டுமில்லை; உள்ளமும் உண்டு. பெளதிக விடுதலை என்றால் என்ன? சுதந்திர எண்ணம், சுதந்திரச் செயல் இவையே பெளதிக விடுதலை. ஒரு கைதியின் விலங்குகளை அகற்றி அவனை விடுதலை செய்துவிடுகிறார்கள்; இதன் உள்ளர்த்தம் என்ன? அவன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்பதுதானே? உடல் திறன் அளவுக்குத் தகுந்தபடி அவன் செயல்படலாம் என்பதுதானே? மனத்துக்கு விடுதலை இல்லையென்றால், இந்த உடல் விடுதலையால் அவனுக்கு என்ன பயன்? மன விடுதலைதான் உண்மையானது. மன விடுதலையற்றவன் விலங்குகளால் பிணிக்கப்படாத நிலையிலும் ஓர் அடிமைதான். அவனது மனம் சுதந்திரமாக இல்லையென்றால் அவன் சிறைவாசம் புரியாவிட்டாலும் கைதிதான். மன விடுதலை இல்லாதவன் உயிரோடு உலவினாலும் பிணம்தான். மன விடுதலை அல்லது சிந்தனைச் சுதந்திரம் ஒருவனது இருப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஒருவனது சிந்தனைச் சுதந்திரத்தின் சுடர் அணைக்கப்பட்டுவிட்டது என்றும் அல்லது அவனது மனம் விடுதலையாகிவிட்டது என்றும் எப்படித் தெரிந்துகொள்வது? மேலே கூறியவற்றின் பின்னணியில் நீங்கள் சுதந்திரமானவர்கள்தானா? உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல, அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்துக்கு ஈடு இணையே இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்கள் எதன் பொருட்டு பாடுபட வேண்டும்? கல்வி வளர்ச்சிக்காகவும் உண்மைத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அவர்கள் பாடுபட வேண்டும். சலுகை பெற்ற சமுதாயப் பிரிவினரின் அதிகாரம் என்பது பொதுமக்களிடையே திட்டமிட்டு, விடாது, ஓயாது பரப்பப்படும் அப்பட்டமான பொய்களையே ஆதார பீடமாக அடித்தளமாகக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் போராட வேண்டிய, பாடுபட வேண்டிய இரண்டாவது விஷயம் அதிகாரம். நலன்களைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே உண்மையிலேயே பெருமளவில் முரண்பாடு நிலவுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. விவேகமான அணுகுமுறை இந்த முரண்பாட்டை ஓரளவுக்கு மட்டுப்படுத்தக் கூடுமாயினும் இத்தகைய ஒரு முரண்பாட்டின் அவசியத்தை அது ஒருபோதும் அகற்றாது. ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும்படி செய்வது அதிகாரம்தான். அவ்வாறு இருப்பதால் அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் தேவை. அதிகாரத்தை எவ்வாறு நெறிமுறையோடு பயன்படுத்துவது என்ற பிரச்சினை இருக்கலாம். ஆனால், ஒரு தரப்பில் அதிகாரம் இல்லாதபோது இன்னொரு தரப்பில் உள்ள அதிகாரத்தை ஒழிப்பது சாத்தியமல்ல என்பதில் எத்தகைய ஐயப்பாடும் இருக்க முடியாது. அதிகாரம் என்கிறபோது அது பொருளாதார அதிகாரமாகவும் அரசியல் அதிகாரமாகவும் இருக்கலாம்.

எனவே, கூடிய அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டிய முழுக் கட்டாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று இருக்கின்றனர். சமூக, பொருளாதாரத் துறைகளில் போதிய அளவு அதிகாரம் பெற்றிராத நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் மிக அதிகமான அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் பெற இயலாது. தாழ்த்தப்பட்ட இன மக்கள் எந்த அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றபோதிலும் இந்துக்கள் பெற்றிருக்கும் மிகப் பரந்த, விரிந்த சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்துடன் ஒப்பிடும்போது அது மிகச் சிறிய அளவே இருக்கும்.

 
Editor's Choice

கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டி இருப்பதால், அவை கொரோனா பரப்பும் மையங்களாக திகழ்கின்றன. வங்கி ஊழியர்கள், கொரோனாவின் பிடியில் சிக்குகிறார்கள்.

இதை கருத்திற்கொண்டு, கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டும் இயங்கச் செய்ய வேண்டும். அதுபோல், வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வங்கிகள் இயங்கச் செய்ய வேண்டும். அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு இதை அமல்படுத்தலாம் என மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிஷ் பாண்டாவுக்கு வங்கிப் பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கிளைகள் கொண்ட நகரங்களில் எல்லா கிளைகளையும் திறக்காமல், ஏதேனும் ஒரு கிளையை மட்டும் திறக்க அனுமதிக்கலாம்.

சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டும் நேரில் வந்தும், மற்றவர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

வங்கி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுபோல், கொரோனாவால் இறந்த வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கும் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என  அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Editor's Choice

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமூகத்தினர் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் நேரம் இது. நாட்டின் பல இடங்களில் நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  புதிய ஆண்டை ஆசிய துணைக்கண்டத்தில் பலர் துவங்கும் இந்த நல்ல நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனைவருக்கும் புத்தாண்டுக்கான தனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தியுள்ளார். 

தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"இந்த வாரம் பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் மற்றும் புத்தாண்டின் துவக்கத்தைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு ஜில் மற்றும் நான் எங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரீஸ், நேபாளி, சிங்கள, தமிழ், தாய், மற்றும் விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள் " என்று பைடன் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில், ஆண்டின் இந்த நேரம் கோடைக்காலத்தின் துவக்கத்தையும் வசந்த காலத்தையும் குறிக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பருவமும் புத்தாண்டின் துவக்கமும் பல்வெறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. தமிழகதில் சித்திரைத் திருநாள், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உகாதித் திருநாள், மேற்கு வங்கத்தில் நப பர்ஷா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் புத்தாண்டின் வருகை கொண்டாடப்படுகின்றது. 

வசந்த காலத்தில் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழா, சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் வசந்த நவராத்திரி ஏப்ரல் 13 ஏப்ரல் 22 வரை கொண்டாடப்படவுள்ளது. நவதுர்கா என்றழைக்கப்படும் துர்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள் இந்த நவராத்திரியில் வழிபடப்படுகின்றன.

பக்கம் 44 / 90