Editor's Choice

ஆலங்குளம் தொகுதியில், 'பனங்காட்டு படை' ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார் களம் இறங்கி உள்ளார். சென்னையில் வசிக்கும் இவர், பிரசாரத்திற்காக, ஆலங்குளத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். தினமும் காலை, மாலையில் கிராமம் கிராமமாக சென்று ஓட்டுக்கேட்கிறார். செல்லும் இடமெல்லாம், பெரும் கூட்டம் திரள்வதால், 'குஷி'யில் மிதக்கிறார். இவருக்கு எப்படி இவ்வளவு கூட்டம் என புரியாமல், இரு கட்சிகள் பீதியில் உள்ளனர்.

வாலிபர்கள் கூட்டம், ஜாதி பாசத்தில் வந்தது என வைத்துக் கொண்டாலும், பெண்கள் ஏனய்யா இப்படி ஓடி, ஓடி வருகிறார்கள் அவர் பேச்சை கேட்க? என்று இரு முகாமிலும் பட்டிமன்றம்.ஹரி நாடார் பேசுவதை கேட்க அவ்வளவு ஆர்வமா, உங்களுக்கு என, சில பெண்களை விசாரித்த போது,

'அவரு என்ன பேசுறார்னு கேக்க வரலைங்க.. கிலோ கணக்குல தங்க நகையெல்லாம் போட்டுகிட்டு வாரார்னு சொன்னாகளா... அதான் எப்டி இருக்கும்னு பாத்துட்டு போவலாம்னு வந்தோம்...' என்றனர்.

ஹரி நாடார் கழுத்திலும், காதிலும், கையிலும் சுமக்கும், நகைகள் நாலே கால் கிலோ. 4,250 கிராம். 531 சவரன். அவரிடம் உள்ள மொத்த நகைகள், 1,400 சவரன் மதிப்பு, 5 கோடி ரூபாய்.

Editor's Choice

அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் சுகாதாரத்துறை துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரேச்சல், முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் சுகாதாரத் துறை செயலாளராகப் பதவி வகித்து குறிப்பிடத்தக்கது.

ரேச்சல் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்களில் 48 பேர் ரேச்சல் ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் அரசியல், சினிமா, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் சாதிக்கத் துவங்கிவிட்டனர். அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு மிக முக்கிய பதவி வழங்கியது பல்வேறு நாடுகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Editor's Choice

இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படாது; மாறாக திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்து உள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் இந்தியாவின் கல்வி மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு சார்பில், புதிய கல்வி கொள்கை மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது.

புதிய கல்வி கொள்கை வழியே, மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கும். எட்டாம் வகுப்புக்கு பின், உயர்கல்விக்கு முந்தைய நான்கு ஆண்டு படிப்பு அறிமுகமாகும். தற்போதைய ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு பதில், இந்த படிப்பை மாணவர்கள் படிக்க வேண்டும். அதன்பின், விரும்பும் உயர்கல்வியில் சேரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர, கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை கட்டாயமாக படிக்க வேண்டும். இந்த பாடங்களை பள்ளிகளில் படிக்காத வேறு பிரிவு மாணவர்களும், இன்ஜினியரிங் சேரலாம். அதற்கு, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை, பிரிட்ஜ் கோர்ஸ் என்ற குறுகிய கால படிப்பாக, கட்டாயம் முடிக்க வேண்டும்.

கல்லுாரிகள் தங்கள் கட்டடங்களை, பல்வகை படிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லுாரியும், மற்ற பல்கலை மற்றும் கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, மாணவர்களுக்கு படிப்பை நடத்தலாம். வெளிநாட்டு பல்கலைகள் இந்தியாவிலும், இந்திய பல்கலைகள் வெளிநாட்டிலும் ஒப்பந்தம் செய்து, கல்வி வழங்கலாம்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் அறிவியல் படிப்பு கள் நடத்தப்படும். இதற்கான புத்தகங்கள், அந்தந்த மொழிகளில் தயாராகி வருகின்றன. அறிவியல் ரீதியான வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்திலும், மற்றவை மாநில மொழிகளிலும் இருக்கும். இன்ஜினியரிங் படிப்பவர்கள், கலை, அறிவியல் படிப்புக்கும்; கலை, அறிவியல் படிப்போர், இன்ஜினியரிங் படிப்புக்கும், இடையில் மாறிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

இன்ஜினியரிங், அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை படிப்புகளுக்கும், நுழைவு தேர்வு நடத்தப்படாது. அதேநேரம், மாணவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், ஆப்டிடியூட் திறன் அறிதல் தேர்வு நடத்தப்படும் என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

 

Editor's Choice

கடந்த 19ம் தேதி கேரள தேவாலயத்தின் கீழ் உள்ள கான்வென்ட்டை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், அங்கு பயிற்சி பெறும் இரண்டு பெண்கள் டில்லியில் இருந்து ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு உத்கல் எக்ஸ்பிரஸில் சென்றனர். ஜான்ஸி ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த ரயிலில் பயணித்த பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிலர், ‛‛அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்ய அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் அவமானப்படுத்தியதாகவும், ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதுப்பற்றி விசாரித்த ரயில்வே போலீசார், கன்னியாஸ்திரிகள் மீது எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்து, அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. அதோடு கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நமது தேசத்தின் நன்மதிப்பையும், பாரம்பரியமான மத சகிப்புத்தன்மை, வழிபாடு ஆகியவற்றின் மதிப்பையும் கெடுத்துவிடும். இதற்கு உச்சபட்ச கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. #Nuns, #BajrangDal உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவும் ஒரு வகையிலான மதத்தின் பேரிலான வன்முறை சம்பவம் தான். இதுபோன்று செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Editor's Choice

உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாய், 193 கி.மீ. நீளமும், 24மீ ஆழமும், 205 மீ அகலமும் கொண்டது. 1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய், எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. இந்த கால்வாயிலிருந்து, வருவாயை பெருக்கும் நோக்கில், எகிப்து அரசு 2015-ம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் கால்வாயை விரிவாக்கம் செய்தது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட ‘எவர்கிவன்’ என்ற வணிக கப்பல், மலேசியா வழியாக பயணித்து நேற்று முன்தினம் இரவு எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது.  எவர்கிவன், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது. 
 
அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல், முன்பக்கம் கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டது.
 
இந்த நிகழ்வை, மற்றொரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண், வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சூயஸ் நிர்வாகம் கூறி உள்ளது. 
 
இந்த கப்பல் ஏற்படுத்திய விபத்தினால், ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாயின் நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்துவருகின்றன. கப்பல்களின் அணிவகுப்பால் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது. 
 
 
Editor's Choice
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 
அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது வரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் என்ற வினோத அறிவிப்பை அந்நாட்டில் உள்ள கிரிஸ்பி கீரிம் என்ற கடை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அட்டையை காண்பித்தால் இலவச டோனட்ஸ் வழங்கப்படும் என அக்கடை தெரிவித்துள்ளது. 
 
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை எத்தனை டோனட்ஸ் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் கடை முன்பு கூட்டம் குவிந்துள்ளனர்.

பக்கம் 5 / 74