Editor's Choice
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இலையமுதுகூடம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. தொலைவிலும் இந்த கிராமம் அமைந்துள்ளது.
இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
 
முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேஸ்வரர் , முனியீஸ்வரர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சன்னதியும் இடதுபுறம் அம்பாள் சன்னதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.
 
இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்" சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் கொண்டுள்ளார். இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.
ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
 
சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர்.
 
இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு.. ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.
 
- A. Gurumoorthi
Editor's Choice
மற்ற மாவட்டங்களில் இருப்பதை விட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் சுடலைமாட சாமி வழிபாடு அதிக அளவில் உள்ளது. சுடலைமாட சாமி மீது பயம் கலந்த பக்தி இப்பகுதி மக்களுக்கு அதிகம். தவறாக நடந்து கொண்டால் சுடலை மாடசாமி தண்டிப்பார் என இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை அதிகம் உண்டு. பார்ப்பதற்க்கு பயப்படும் தோற்றத்தில் இருப்பதால், சுடலை மாடசாமி கதைகளை சொல்லி சிறு குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பவர்கள் கிராமப்பகுதிகளில் அதிகம்.
 
சுடலை மாடனுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் இசக்கி மடன், இருளப்பசாமி, பூல் மாடன், சுடலை மாடன் சாமீ, சுடலை ஈஸ்வரன், மாடசாமி, மாடன், மகாராஜா, சுடலேஷ்வரன், சுடலையாண்டி, சுடலை முத்து, மாசான முத்து, முண்டன் சாமி, மயாண்டீஸ்வரர், மாண்டி, பலவேசகரன் சுவாமி, ஊசிக்காட்டு சுடலை, முத்து சுவாமி, பத்மா பரம ஈஸ்வரன், வெள்ளை பாண்டி, ,தளவாய் மாடசாமி இரட்டைசுடலை மாடசாமி, பண்றி மாடன், பூக்குழி மாடன், சங்கிலி மாடன், ஆகாச மாடன் ,உதிர மாடன், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
 
சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்ததால் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு அலைய துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது. அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதால் அதை இனியும் தேவலோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார் என்பது வரலாறு.
 
சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடைய பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். விளக்கு எரிந்து திரி எரிந்துபோய் மங்கத் துவங்கியதும் சிவபெருமான் வேண்டும் என்றே அதன் திரியை பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு நாள் அது பார்வதியின் தொடையில் விழுந்து விட அவள் சதை தீ காயத்தினால் வீங்கி விட்டது. ஆகவே சிவபெருமான் பிரம்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது. அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி, அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
 
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.
 
சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிக்களரி என்ற வருடாந்திர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு. அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை சுடலை மாட சாமி வேட்டைக்குப் போகுதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள். அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள்.
 
அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம். அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார். அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார். தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள். ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
 
சுடலை மாடசாமி கோயில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
 
சுடலை மாடசாமி கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. சுடலை மாடன் அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும்
பணிபுரிந்து வருகிறார்.
 
கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்துகொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை மாடன், அன்னையின் பணிக்கு வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம், இதை அறிந்த சுடலை காளிப்புலையணை வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து குடி கொண்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்.
 
சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது. தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மாவிடமாட்டான் என்பது இப்பகுதி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
 
எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு. இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி என்ற உணவு இவருக்கு உண்டு. இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம் என்பதுவும் பொதுவாக கருதப்படுகிறது.
 
படத்தில் சுடலை மாடனின் வீற்றிருக்கும் கோலம். பெரும்பாலும் அவரது ஆலயங்களுள் நின்ற கோலமே காட்டப்பட்டிருக்கும்.
Editor's Choice

1997ஆம் வருடம் காடு மல்லிகார்ஜுனா கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பூமியில் தோண்டும் வேலை நடைபெற்ற பொழுது ஒரு நந்தி சிலை தென்பட்டிருக்கிறது.

அதை மேலும் அகழ்ந்தபோது ஒரு கோயில் பூமிக்குள¢ இருப்பதை கண்டிருக்கின்றனர்.உள்ளே முதலில் தென்பட்டது நந்தி சிலை. நந்தியின் முகம் தென்திசை நோக்கி இருந்தது அதற்கு முன¢புறம் கீழ் பகுதியில் ஒரு நீர்க்குளம் இருந்திருக்கிறது. கிழே ஒரு சிவலிங்கமும் இருந்திருக்கிறது.

நந்தி தென்முகமாக இருப்பதினால் இதை தக்ஷிணமுக நந்தி என்றழைக்கின்றனர். இந்த நந்தியின் வாய்ப்குதியில் மண்ணினால் மூடப்பட்டிருந்தது. அதை சுத்தம் செய்தபோது அதிலிருந்து நீர் ஊற்ற ஆரம்பித்திருக்கிறது. அந்நீர் கீழே உள்ள சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது போல் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அபிஷேகப்பிரியரான சிவனை தொடர்ச்சியாய் வருடம் முழுவதும் அபிஷேகம் செய்யும் வண்ணம் நந்திசிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் 7000 வருடத்திற்கு முந்தைய கோயில் இது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோயிலின் வடிவமைப்பு ஆச்சரியப்படத் தக்கவகையில் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

இக்கோயிலை அமைத்தவர் ராவ் பகதூர் மல்லப்பா செட்டியார் என்று பெங்களுரு இதிகாசம் என்ற நூலில் குறிப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

இக்கோயிலின் எதிர்புறம் கங்கம்மா ஆலயம் அமைந்துள்ளது.

Editor's Choice

தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்திற்கு வடகிழக்கே 309 கி.மீ தொலைவில். கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கிறது பத்ராச்சலம்.

பத்ரகிரி என்ற வார்த்தையிலிருந்து உருவானது பத்ராச்சலம் என்றª பயர். புராண கூற்றின்படி மேருவுக்கும் மேனகாவிற்கும் வரம் வாங்கிப் பிறந்த குழந்தையே பத்ரா . அவள் பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டதாம்..

ஸ்ரீராமர் , சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் தண்டகாரண்ய வனப்பிரதேசத்தில் வாசம் செய்தார். அந்த வனத்தில் ஒருபகுதியே பத்ராச்சலம். இன்று இங்கே இராமருக்கு ஒரு கோயில் உண்டு. இந்த தண்டகாரண்யத்திலிருந்துதான் இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான்.

பத்ராச்சலம் நகரில் பத்ரா என்கிற முனிவர் இராமர் மேல் பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் இராமனைச் சந்தித்து தன் சிரசின் மேல் அமரும்படி கேட்டுக் கொண்டாராம். ஆனால் தான் இலங்கையிலிருந்து திரும்பும் போது அமருகிறேன் என்று சொல்லி சென்றுவிட்டார் ராமர். ஆனால் திரும்ப பத்ராச்சலம் பகுதிக்கு அவர் வரவேயில்லை. இதனால் பத்ரா முனிவர் விஷ்ணுவை எண்ணித் தவமிருந்தார்.

அவர் தவத்தினை மெச்சிய மகாவிஷ்ணு இராமபிரான் வடிவில் சீதை, லட்சுமணனுடன் காட்சி தந்து அருளினார். அதுமட்டுமன்றி முனிவரின் வேண்டுகோளின்படி, பத்ரகிரியின் உச்சியில் தன் இடது தொடையில் சீதையையும் வலது தொடையில் லக்ஷ்மணனையும் அமர வைத்தபடி காட்சி தந்தாராம் ஸ்ரீராமர்.

இங்குள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கும் ஒரு கதை உண்டு. போகால தம்மக்கா என்ற பெண்ணின் கனவில் தோன்றிய ஸ்ரீராமர், பத்ரகிரியின் மலைச் சரிவில் சில விக்ரங்கள் மறைந்து கிடப்பதாகக் கூற, தம்மக்கா, அந்த விக்ரங்களைக் கண்டு பிடித்து பத்ரகிரியில் ஒரு சிறு கோயிலைக் கட்டி அதில் அந்த சிலைகளை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்து வந்தாராம். அக்காடுகளையும் சுத்தம் செய்து கோயிலுக்கு வழி அமைத்தாராம். இதற்குப் பின்னர் பத்ராச்சலம் புண்ணியத்தலமாகி, ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் தலமாகிவிட்டது

 

Editor's Choice

தற்போதைய திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் என்பது அக்காலத்தில் மங்கம்மாள் சத்திரம் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டது.

தற்போது சத்திரம் பேருந்து நிலையம் என்று குறுகி விட்டது. மதுரை இரயில் நிலையத்திற்கு எதிர்புறம் அமைந்திருக்கும் மங்கம்மாள் சத்திரம் இன்னும் அவரின் கொடைத்தன்மையை பறைசாற்றிய வண்ணம் நின்று கொண்டிருக்கிறது.

இராணி மங்கம்மாள், 17 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பெண்ணரசி (1689&-1704) இவரது தந்தை முத்தியப்ப நாயக்கர், மதுரை மன்னன் சொக்கநாதரின் தளபதியாக பணிபுரிந்தவர்.

இராணி மங்கம்மாள் வளர்ந்தபின் சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளை மணந்து கொண்டார்- சொக்கநாத நாயக்கர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் பேரன் ஆவார்.

சொக்கநாதர் இறந்தபின் மங்கம்மாள் இளம் வயதாக இருந்த, தன் மகன் அரங்க முத்துகிருஷ்ண வீரப்ப நாயக்கரை மதுரை அரசனாக்கி தன்னை காப்பாளராக அறிவித்துக் கொண்டு தனது இராச்சியத்தை ஆண்டு வந்தார். இவர் திருச்சிராப்பள்ளியைத் தன் தலைநகராக கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது. முத்துகிருஷ்ண வீரப்ப நாயக்கர் பெரிய அம்மை நோயால் இறந்து விட அவரது குழந்தையை அரசனாக அறிவித்து, மங்கம்மாள் 1704 ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்து வந்தார்.

மங்கம்மாள் முறையாகப் போர்ப்பயிற்சிகளைப் பெற்ற வீராங்கனையும் கூட, மங்கம்மாள் பல கோயில்களை கட்டியதோடு, பாசனத்திற்காக பல கால்வாய்களையும், குளங்களையும் அமைத்துள்ளார்.

இராணி மங்கம்மாளின் சமயப்பணி

மீனாட்சியம்மனின் பக்தையான இவர் அம்மனுக்கு விலை உயர்ந்த ரத்தினங்களையும், அணிகலன்களையும் பரிசளித்துள்ளார். பல்லக்கினையும் வழங்கியுள்ளார். கோயில் விழாக்களில் அம்மனின் பாதத்தில் தன் செங்கோலை வைத்து வழிபாடு செய்வது இவரது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவரும் இவர்தான். இன்றும் இவரது ஓவியத்தை ஊஞ்சல் மண்டபத்தில் காணமுடியும்.

இக்கோயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள நகரா மண்டபம் மங்கம்மாவால் கட்டப்பட்டது.

இதே போல் திருப்பரங்குன்றம் கோயிலின் முன் மண்டபத்தைக் கட்டியவரும் இராணி மங்கம்மாளே. இக்கோயிலின் மேற்கு வரிசைத் தூண் ஒன்றில் முருகன் தெய்வானையின் திருமணக¢ காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. எதிரில் கிழக்குப் பக்கமாக எதிரில் உள்ள தூணில் மங்கம்மாள் தன் பெயரனோடு, முருகனின் திருமணக்காட்சியைக் காண்பது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மதுரையிலிருந்து அருப்புக் கோட்டைச் செல்லும் பகுதியில் அமைந்துள்ள அவனியாபுரம் என்ற ஊரில் அனுமன் கோயில், மற்றும் அலங்காரப் பிள்ளையார் கோயிலையும் மங்கம்மாள் கட்டி வைத்துள்ளார். இக்கோயிலின் எதிர்புறம் அமைந்துள்ள கல்வெட்டில்தான் இராணி மங்கம்மாளின் தந்தையின் பெயர் வடிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் பசிப் போக்கவும், பயணிகள் இரவு வேளையில் ஓய்வெடுத்துக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடரவும், மங்கம்மாள் சாலை ஓரங்களில் பல சத்திரங்களைக் கட்டி வைத்தார். அங்கே உணவும் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கும், நீரும், புற்களும் வழங்கப்படடன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இராணி மங்கம்மாள் சாலை என்றே ஒரு சாலை இருக்கிறது. மதுரை கன்யாகுமரி நெடுஞ்சாலையை அமைத்தவரும் இவர்தான். அச்சாலை இராணி மங்கம்மாள் பெயரில் அழைக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் அடங்கியுள்ள பல கிராமங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். அக்கிராமங்களில் வாழும் வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அந்த சாலைகளை இராணி மங்கம்மாள் சாலை என்றே அழைக்கின்றனர்.

இராணிமங்கம்மாளின் அரசியல் சாதுர்யம்

இராணி மங்கம்மாள் சிறந்த நிர்வாகியும் கூட, அச்சமயத்தில் மொகலாயப்படை வலிமை மிக்கதாய் இருந்தது, அவர்களுடன் நட்புறவு பூண்டார். அச்சமயத்தில் திருவிதாங்கூர் மதுரை ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசாக இருந்து வந்தது. இருப்பினும் போர் ஏற்பட்ட போது மங்கம்மாள் இந்தச் சிற்றரசை அடக்கினார்.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரையும் அடக்கி வைத்தார்.

மைசூர் மன்னன் சிக்கதேவராயன் நாயக்கர்களை வீழ்த்த 1695 ஆம் ஆண்டில் திருச்சியை முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படை அம்முற்றுகையை உடைத்து, சிக்கதேவராயன் படைகளை விரட்டியடித்தது.

இராமநாதபுர மன்னர் ரகுநாதசேதுபதி மதுரை அரசுக்கு எதிராக இருந்தார். இதனால் அவரை அடக்க தன் படைகளை அனுப்பி வைத்தார் இராணி மங்கம்மாள்.

மதுரை நாயக்க அரசின் தொடர் வெற்றிக்கு காரணமாய் இருந்த தளவாய் நரசப்பையா வீர மரணம் அடைந்தார். இதனால் இராணி மங்கம்மாள் தோல்வியைத் தழுவ வேண்டியதாயிற்று.

மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர், வளர்ந்தபின் பிறரின் துர்போதனையைக் கேட்டு, தனது பாட்டியை வெறுத்து, எதிரியாகவும் கருதினார். இராணி மங்கம்மாள் தன் பேரனால், தனது பெயராலேயே சிறைவைக்கப்பட்டார்.

அதுவே அவரது இறுதிக்காலமாயிற்று. அங்கே பட்டினியில் வாடிய மங்கம்மாள் என்ற மிகச்சிறந்த பெண்ணரசி 1706 இல் தன் இன்னுயிரை உகுத்தார்.

தன் திறமையின் மூலம் தனியொரு பெண்ணாக, 18 ஆண்டுகாலம் மதுரையை மிகச் சிறப்பான முறையில் ஆண்ட இராணி மங்கம்மாள், தமிழக மக்களிடம் இன்னும் புகழ் பெற்றவராகவே இருந்து வருகிறார்.

மதுரையில் தற்போது உள்ள காந்தி மியூசியமானது அக்காலத்தில் இராணி மங்கம்மாள் வாழ்ந்து அரசாட்சி செய்த அரண்மனை. வீரமங்கையான இராணி மங்கம்மாளின் அரசாட்சியையும், வீர தீர செயல்களையும் விளக்கும் வகையிலான மியூசியமாக தமிழக அரசு இதை பயன்படுத்தி இருக்கலாம். மாறாக 1955 ஆம் ஆண்டு அப்போது இருந்த தமிழக அரசு இந்த அரண்மனையை காந்தி சன்மார்க்க நிதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டதால் தற்போது அது காந்தி மியூசியமாக செயல்பட்டு வருகிறது.

காந்தி மியூசியத்தை தமிழகத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அக்கால தமிழகத்தின் உள் கட்டமைப்புக்கும், வீர தீர செயல்களுக்கும் பெயர்பெற்ற இராணி மங்கம்மாள் வாழ்ந்த இந்த அரண்மனையை அவரின் புகழை பறைசாற்றும் அரண்மனையாக மாற்ற வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சி எடுத்தால் வருங்கால தலைமுறையும் இராணி மங்கம்மாளை பற்றி அறிந்து கொள்ள ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.

வருங்கால தலைமுறைக்கு தமிழகர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் கொண்டுபோய் சேர்ப்பது அரசின் கடமையும் கூட. அரசாங்கமே தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத துணை போகாமல் இராணி மங்கம்மாள் அரண்மனையை மீட்டெடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Editor's Choice

ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கணிப்பாக்கம். இங்கே அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோயில் பிரசித்திப் பெற்றது.

இந்த விநாயகர் கோயிலுக்கு கதை ஒள்று சொல்லப்படுகிறது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் நடநத கதை அது. கோயிலும் பழைமையானதுதான்.

அப்போது காணிப்பாக்கத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்கள் உடல் குறை உள்ளவர்கள். ஒருவர் ஊமை, ஒருவர் செவிடு, மூன்றாமவர் கண்பார்வையற்றவர்.

இவர்களுக்குப் பரம்பரையான நிலம் ஒன்னேகால் ஏக்கர் இருந்தது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஒரு முறை வானம் பொய்த்து, ஏரி, குளம், கிணற்று நீரும் வற்றிப் போனது. . இந்தச் சகோதரர்கள் மூவரும் தங்கள் கிணற்றில் இறங்கி கிணத்தை ஆழப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஒருநாள் கடப்பறைப் பட்டு டிங் என்று சத்தம் கேட்டிருக்கிறது. என்னவென்று பார்க்கும் போது விநாயர் சிலை ஒன்று குப்புற வாக்கில் கிடந்திருக்கிறது. அதன¢ பின்னந் தலையில் கடப்பாரை பட்டதினால் இரத்தம் பெருகியிருக்கிறது. இதனால் அந்தப் பள்ளத்தில் கிடந்து நீர் செந்நீராகிவிட்டிருகிறது.

விநாயகருக்கு உயிர் இருக்கிறதா என்று மூவரும் அதிர்ந்து போய் அவசர அவசரமாக விநாயகர் சிலையை கிணற்றை விட்டு மேலே தூக்கி வந்திருக்கின்றனர். மேலே வந்தவுடன் கண்பார்வையற்றவருக்கு பார்வைத் திறன் வந்திருக்கிறது. உடனே அவன் ஊமையிடம் பேசிப்பார் என்று சொல்ல அவன் பேச ஆரம்பித்திருக்கிறான். இவர்கள் பேசுவது காது கேளாதவனுக்கு விளங்கியிருக்கிறது. விநாயகர் அருளால் தங்கள் மூவருக்கும் உடல் குறை நீங்கிவிட்டது என்று சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதற்குள் ஊர் மக்களும் அங்குக் கூடிவிட்டனர். அந்த விநாயகரை அங்கிருந்த மரத்தடியில் வைத்து வணங்கி வழிபாட்டினை மேற்கொண்டு,இந்த ஊருக்கு ஒரு ஆறு வேண்டும் கணேசா என்று நடக்காத ஒன்றை எண்ணி வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் விநாயகர்தான் வரசித்தி விநாயகர் ஆயிற்றே, ஒரிசா ராமகிரி மலையில் உற்பத்தியாகி ஓடி வந்த யஹுதா நதியை காணிப்பக்கம் வழியாக ஓடி கடலில் கடக்கும்படி கட்டளையிட்டார். ஒரு கடும் மழைகாலத்தில் ஆற்றின் போக்கு மாறி காணிப்பாக்கம் வழியாக கடலில் போய் கலந்தது. அதன் அந்த ஊரில் பஞ்சம் மறைந்து போனது.

அதன்பின் அதன்பின் வரசித்தி விநாயகர் அந்த ஊரின் சத்யப்பிராமண அதிகாரி ஆனார். யாராவது உண்மையை ஒப்புக் கொள்ளவில்லையென்றால் இவர் அந்த நபரைக் கொண்டு வந்து சத்யபிரமாணம் செய்யும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. பொய் சொன்னவர்களுக்கு கடும் தண்டனை வழங்கிவிடுவார் என்ற பயம் இருப்பதால் எல்லோரும் உண்மையை ஒப்புக் கொள்வார்களாம்.

11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியும் இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. வரசித்தி விநாயகரின் மகிமையைக் கேள்விப்பட்ட குலோத்துங்கன் சுயம்பு விநாயகருக்கு பஹூதா ஆற்றங்கரை ஓரமாக கோயிலை எழுப்பியிருக்கிறார்.. அதன்பின் விஜயநகர பேரரசர்களான ஹரிஹரர் மற்றும் புக்கரால் புதிய மண்டபங்களும், கோயில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்ட காலத்தில், சித்தூர் நீதி மன்றத்தில், கோணிப்பாக்கம் விநாயகர் கோயிலின் சத்யப்பிரமாணம் தனி சாட்சியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்னும் இக்கோயிலில் சத்யபிரமாணம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர் இங்கு வந்து சத்ய பிரமாணத்திற்கு பணம் செலுத்தி ரசீது வாங்கிக் கொள்கிறார். எதிரணி நபருக்கும் தகவல் அனுப்பப்படுகிறது. யார் தவறு செய்திருந்தாலும் விநாயகர் முன் நின்று சத்யபிரமாணம் செய்யும் போது உண்மையை ஒத்துகொள்கிறார்களாம்,.

பக்கம் 9 / 11