Editor's Choice
"பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் புகழ் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
 
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்".
 
உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.
 
தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை.அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை!
 
இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 
இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை".கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
 
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம்.
உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதியை தரிசித்துவாருங்கள், அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள்.
 
- A. Gurumoorthi
Editor's Choice
இந்தியாவில் எங்குமே காணப்படாத அதிசயம்
 
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு.
 
தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.
 
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே செம்மணல்.
 
கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.
 
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.
 
தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.
 
தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் நடைபெறும்.
 
திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.
 
இந்த பகுதியில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும். அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.
 
இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான்.
 
அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல.
 
அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.
 
அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன.
 
ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு அதிசய பூமியை உருவாக்கிய அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.
 
இங்குள்ள மணல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது.
 
முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
எனவே, தேரிக்காட்டின் மணலுக்கு அடியில், அந்தக் காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருக்கலாம்.
 
இங்குள்ள மணல் மேடுகள் காற்றின் போக்குக்கு ஏற்ப இடம் மாறுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, இந்தப் பகுதியில் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை 1848–ம் ஆண்டு அங்கு ஆங்கிலேய ஆட்சியின் கலெக்டராக இருந்த இ.பி. தாமஸ் என்பவர் முன் வைத்துள்ளார்.
 
அவரது முயற்சியால் தேரிக்காட்டில் ஏராளமான பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. நிறைய பனை மரங்களைக் கொண்ட தேரி இப்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
 
சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்ட றியப்பட்டது.
 
அவை எந்தப்பகுதியில் வசித்தவர்களின் முதுமக்கள் தாழிகள் என்பது தெரியவில்லை.
 
அங்கு இருந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் ஆகியவையும் கிடைத்தன.
 
இந்த தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேலப்புதுக்குடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில்கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகழ்பெற்றதாகும்.
 
இந்த பகுதி மணலை போன்று திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி செல்லும் வழியில் நாலுமூலைகிணறு மற்றும் முத்தையாபுரம் இந்த இரண்டு ஊருக்கு இடைப்பட்ட பகுதியில் குன்றுமலைசாஸ்தா கோவில் உள்ளது இப்பகுதியும் தேரிக்காட்டைபோல நூற்றுக்கனக்கான பனைமரங்களால் சூழப்பட்டு நம்மனதை பண்டையகாலத்திற்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது....
 
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் முருகன் கோவில் வனத்திருப்பதி கோவில் முத்தாரம்மன் கோவில் நவதிருப்பதி சுனைகோவில் தேரிக்காடு குன்றுமலைசாஸ்தா இன்னும் பல பகுதிகள் இருக்கின்றது
 
Editor's Choice

சிவஸ்தலம் பெயர்:

திருக்குருகாவூர்வெள்ளடை(திருக்கடாவூர்)
 
இறைவன் பெயர்:
 
வெள்ளடையீஸ்வரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்.
 
இறைவி பெயர்:
 
நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னியம்மை.
 
தேவாரம் பாடியவர்கள்:
 
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார்.
 
தேவாரப்பதிகம்:
 
(சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்=ஏழாம் திருமுறை)
 
இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே!!
 
பொழிப்புரை:
 
எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக, நீ, முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ!
 
அமைவிடம்:
 
ஊர்: திருக்கடாவூர்
மாவட்டம் மயிலாடுதுறை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
 
கோயில் தகவல்கள்:
 
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பால் கிணறு
உற்சவர்: சோமாஸ்கந்தர்
ஆகமம்: சிவாகமம்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
 
பொது தகவல்:
 
இத்தல விநாயகர் #செல்வ_விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கின்றன.
 
பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள #முருகன் வள்ளி தெய்வானையுடன் #தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.
 
தென் திசையை பார்த்திருப்பதால் இவரை குரு அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
 
கோஷ்டத்தில் சட்டைநாதர், துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
 
பிரகாரத்தில் சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன.
 
தல வரலாறு:
 
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.
 
இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாபம் நீங்க, சம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.
 
சம்பந்தருக்கு காட்சி தந்த சிவபெருமான், அவரை காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், இத்தலத்திற்கு கங்கையை வரவழைத்து தருவதாகவும் கூறினார்.
 
அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார், அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் இங்குள்ள #கிணற்றில்_கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
 
தலபெருமை:
 
ஒருநாள்_மட்டும்_நீராடும்_தீர்த்தம்:
 
தை அமாவாசை அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து, சம்பந்தருடைய உற்சவம் விக்ரகம் இந்த தீர்த்தத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அச்சமயம் இக்கோவிலில் உள்ள சிவன் அம்பாள் அவருக்கு காட்சி கொடுத்து தீர்த்தம் கொடுக்கின்றனர். அதன் பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி செல்கிறார். இந்த வைபவம் இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.
 
அன்னமிட்ட_கை :
 
சிவஸ்தல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார்.
 
வழியில் அவருக்குப் பசி எடுத்தது, அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார், சுந்தரரிடம் அவரருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார்.
 
அதன்படி சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார், அதன் பிறகு சாப்பிட்ட கலைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர், சற்று நேரம் கழித்து அவர் கண்விழித்தபோது, அங்கு அன்னப்பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமும் தெரியவில்லை.
 
வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவபெருமான் என்று உணர்ந்து, பின்பு அவரை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
 
சுந்தரருக்கு சிவன் அன்னம் பறிமாறிய விழா,#சித்ரா_பௌர்ணமியன்று நடக்கிறது. இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
 
சாந்த துர்வாசர்:
 
இக்கோயிலில் பிரகாரத்தில், துர்வாச முனிவர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம்.
 
தலச்சிறப்பு:
 
இத்தலத்தில் சுவாமி #சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.
 
சம்பந்தருக்காக, இங்கு #தை_அமாவாசை தினத்தன்று கிணற்றில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அம்மாவாசை அன்று மட்டுமே இக்கிணறு திறக்கப்பட்டு, பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுகின்றனர், மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.
 
திருவிழாக்கள்:
 
சித்ரா பவுர்ணமியில் கட்டமுது படையல் விழா, மற்றும் தை அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கிய விழா.
 
ஆலய_முகவரி:
 
அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில்,
திருக்கடாவூர்,
வடகால் (அஞ்சல்),
சீர்காழி (வட்டம்),
மயிலாடுதுறை (மாவட்டம்)
PIN:609115
தொடர்புக்கு: 9245612705
 
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்க்காவலர் அருகில் வசிப்பதால் அவரை தொடர்பு கொண்டு தரிசிக்கலாம்.
 
எப்படிப் போவது?
 
சீர்காழியிலிருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி, தெற்கே 1 கி.மீ சென்றால் திருக்கோயிலை அடையலாம், கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
 
- A. Gurumoorthi
Editor's Choice
இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள 27-தேவஸ்தானங்களுள் ஒன்று!! தற்போது இத்திருக்கோயில் இவ்வாதீனத்தில் அருட்செங்கோலோச்சுகின்ற தருமையாதீனம் #27_வது_ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம்
Dharumai Adheenam பரிபாலனத்தின் கீழ் இருந்து வருகிறது.
 
சிவஸ்தலம் பெயர்:
 
சீர்காழி (திருப்பிரமபுரம்)
 
இறைவன் பெயர்:
 
பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்
 
இறைவி பெயர்:
 
பெரியநாயகி, திருநிலை நாயகி,
 
தேவாரம் பாடியவர்கள்:
 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்.
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்.
 
தேவாரப்பதிகம்:
 
(சம்பந்தர் தேவாரம்=முதல் திருமுறை)
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
பொழிப்புரை:
""""""""""""""""""""""""""""
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
 
அமைவிடம்:
"""""""""""""""""""""""""
ஊர்: சீர்காழி
மாவட்டம்: மயிலாடுதுறை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
 
கோயில்_தகவல்கள்:
""""""""""""""""""""""""""""""""""""""""""
தல விருட்சம்: மூங்கில்,பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
ஆகமம்: பஞ்சரத்திர ஆகமம்
பழமை; 1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்கள்: சோழர்கள்
 
பொது_தகவல்:
""""""""""""""""""""""""""""""""
இத்திருக்கோவிலின் உள்ளேயே, சம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் வெளியே தனியே உள்ளனர்.
சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள்.
இத்தலத்தில் மொத்தம் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி முதலியன முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.
இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சியளித்ததால், மூங்கில் தலவிருட்சமாக உள்ளது.
 
தலத்தின்_வேறு_பெயர்கள்:
""""""""""'""""""""""""""''"""""""""""""""""""""""""""""
இத்தலத்திற்கு மொத்தம் 12 பெயர்கள் உள்ளன:
1) பிரமபுரம்-பிரம்மதேவன் வழிபட்டதால் இப்பெயர்.
2) வேணுபுரம்-இறைவன் மூங்கில் வடிவில் இந்திரனுக்கு காட்சி அளித்ததால் இப்பெயர்.
3) புகலி-சூரனுக்குப் பயந்த தேவர்கள்களின் புகலிடமாய் இருந்ததால் இப்பெயர்.
4) வெங்குரு-குரு வழிபட்டதால் இப்பெயர்.
5) தோணிபுரம்-பிரளய காலத்தில் இத்தலம் தோணியாய் மிதந்ததால் இப்பெயர்(பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததாலும் இப்பெயர்)
6) பூந்தராய்-பூமியைப் பிளந்து சென்ற திருமால் (வராகமூர்த்தி) வழிபட்டதால் இப்பெயர்.
7) சிரபுரம்-சிரசின் கூறாய் உள்ள ராகு கிரகம் இறைவனை பூஜித்ததால் இப்பெயர்.
8) புறவம்-புறா வடிவத்தில் வந்த அக்னியால் சிபிச்சக்கரவர்த்தி பேறு பெற்றது.
9) சண்பை-சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீர கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.
10) சீகாளி-காளிதேவி சிதம்பரத்தில் நடராஜப் பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க இங்கு வந்து வழிபட்டதால் இப்பெயர்.
11) கொச்சைவயம்-மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்க பராசர முனிவர் வழிபட்டதால் இப்பெயர்.
12) கழுமலம்-மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டதால் இப்பெயர்.
 
தல வரலாறு:
""""""""""""""""""""""""""""
 சமயக் குரவர்களில் ஒருவரான #சம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும் #இளைய_பிள்ளையார் என்றும் வழங்குவர்.
 இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன், இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை திருக்குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார்.
 அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட,"#அம்மா_அப்பா" என்று‌ அழத் தொடங்கினார். இவரது அழுகுரல் கேட்ட சிவபெருமான், பார்வதி தேவியிடம் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு கூறினார்.
 அதன்படி, சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை ஊட்டினாள் பார்வதி தேவி, பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.
 குடித்துவிட்டு வந்த தந்தையார்,"பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே" எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
 அப்போது சம்பந்தர், இறைவனும் இறைவியும் தரிசனம் தந்த திசையை காட்டி #தோடுடைய_செவியன் என்ற பதிகம் பாடினார், அவரது தந்தை அதைக் கேட்டு அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவியை காட்சி தந்து பாலூட்டியதை அறிந்து பரவசப்பட்டார்.
 இத்தலத்தைப் பற்றிய சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் 1 பதிகமும் பாடி உள்ளார்கள்.
 
திருவிழாக்கள்:
"""""""""""""""""""""""""""""""""
 சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்சவம் தொடங்கும். இதில் 2-ம்‌ நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் #திருமுலைப்பால்_விழாவாக, தருமை ஆதீன குருமகாசந்நிதானம் திருமுன்னர் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு, நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
 மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரருக்கு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும் திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களில் #தைலாபிஷேகம் நடைபெறும்.
 ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு.
 
A. Gurumoorthi, Kallakurichi
Editor's Choice
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பத்தாவது கிமி இல் குத்தாலம் எனும் திருதுருத்தி உள்ளது , காவிரியின் நடுவில் துருத்தியபடி உள்ளதால் துருத்தி எனப்பட்டது. ஒரு காலத்தில் உத்தால வனமாக இருந்ததால் , கால போக்கில் உத்தாலம் குத்தாலம் ஆகிப்போனது.
 
இறைவர் உத்தவேதீஸ்வரர், உக்த வேதீஸ்வரர்,சொன்னவாறு அறிவார்
 
இறைவி அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி
 
தல மரம் : உத்தாலமரம்,
 
தீர்த்தம் : பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்
 
சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார்.
 
சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.
 
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும். அப்பர், சுந்தரர் ,திருஞானசம்பந்தர்ஆகியோர் பாடல்கள் உள்ளன.
 
திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்த அம்பிகை குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.
 
இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம்.அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும்.
 
பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.
 
மூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.
 
அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. வருணனின் சலோதரம் நீக்கியது. காளி, சூரியன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது. சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபக்தனின் காச நோயை போக்கியது போன்ய பல பெருமைகளை உடையது. தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
 
சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார்.
 
ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது.
 
இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சண்முகர் கலையழகுடன் காட்சி அளிக்கிறார்.
 
பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன.இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.
 
கார்த்திகை ஞாயிறு நாள்கள் இத்தலத்தில் விசேஷம். சூரியன் - கதிரவன் வழிபட்டுத் தவஞ்செய்த இடம் கதிராமங்கலம் என்றழைக்கப்படுகின்றது. "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் புலம்பித் திகழுமா காவிரி" ஆலயத்தின் வடபால் ஓடுகின்றது. மற்றதாகிய சுந்தர தீர்த்தம் - பதும தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். இது ஆலயத்தின் வடமேற்கிலுள்ளது. இவை தவிர, இத்தலத்தைச் சுற்றிலும் அக்கினி தீர்த்தம், காளி தீர்த்தம், புண்டரீக தீர்த்தம், காம தீர்த்தம், கதிரவ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் திருவாவடுதுறை, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, சூரியனார் கோயில், கதிராமங்கலம், திருமணஞ்சேரி, திருப்பந்தணை நல்லூர், திருவேள்விக்குடி முதலிய தலங்கள் உள்ளன. ஆலயத்துள் அலங்காரமண்டபமும், காவிரிக் கரையில் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன.
 
இத்திருக்கோயில் தருமையாதீனத்திற்குச் சொந்தமானது. நாடொறும் காரண, £கமிக ஆகமங்களின் முறைப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
 
கல்வெட்டில் இத்தலம் 'வீங்குநீர் திருத்துருத்தியுடைய மகாதேவர்', உடையார் சொன்னவாறறிவார்'. 'திருக்கற்றளி மகாதேவர்' என்று குறிக்கப்படுகிறது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் - திருத்துருத்திப் புராணம் - பாடப்பட்டுள்ளது. நாடொறும் ஐந்து கால பூஜை.
 
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
 
இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,
 
- A. Gurumoorthi, Kallakurichi
 
Editor's Choice
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
 
 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..
 
சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.
 
பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது . ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது …
 
போகர் தவம் செய்த பூதிக்காடு:
 
இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
 
இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..
 
இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்ற னர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறை வேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்து ள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.
 
பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களி ன் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாத கர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்திய தால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..
 
ஓதிமலை குறித்த புராணச் செய்தி 
 
படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கி விட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
 
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுட ன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்” எனப்பட்டது.
 
முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறை யிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.
 
*ஓதி மலை அமைவிடம் 
 
சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும்.புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு..
 
1. ஈரோட்டிலிருந்து – ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..
 
2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .
 
3. மதுரையில் இருந்து மதுரை – பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..
 
ஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமா னின் பரிபூரண கடாட்சியமும், அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள்….
 
- A. Gurumoorthi

பக்கம் 7 / 11