Editor's Choice
சரஸ்வதி (தாடிக்கொம்பு) இத்தலம் திண்டுக்கல்-வேடசந்தூர் பாதையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சௌந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மண்டூக மகரிஷி தன் சாபம் நீங்க தவமிருந்த தலம் இது. 500 வருடங்களுக்கு முற்பட்ட கோயில். கல்வியை அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்துள்ளன. திருவோண நட்சத்திர நாளில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகத்தோடு விசேஷ பூஜை நடக்கிறது. ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நிவேதனத்தைப் படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். சரஸ்வதி பூஜை நாளில் சரஸ்வதிதேவிக்கு விசேஷ ஆராதனை, பூஜைகள் நடைபெறுகின்றன.
 
ஞான சரஸ்வதி (உத்தமர்கோவில்)ஈசன் பிட்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற தலம், பிச்சாண்டார் கோயில் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த தலம். பெருமாள் பிரசன்னமாகி, ‘‘நீ இங்கேயே இருக்கலாம். உனக்கென்று ஆலயங்கள் இல்லையென்று கவலையுறாதே. தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் இங்கே உனைக் காண வருவார்கள்” என்று சொல்லி, தன் ஆலயத்திலேயே அமர்த்தி வைத்துக் கொண்டார். இங்கு பிரம்மனைப் போல சரஸ்வதிக்கும் தனிச் சந்நதி உள்ளது. இவள் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுகிறாள். வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் தேவி காட்சியளிப்பது அபூர்வமானது.
 
ஞானவாணி (திருக்கண்டியூர்)இத்தல ஈசனுக்கு பிரம்ம சிரகண்டீசர் என்று பெயர். பிரம்மாவுக்கான தனிக்கோயில் இது என்று சொல்லலாம். ஜீவன் ததும்பி நிற்கும் அற்புதச் சிலை. சரஸ்வதி தேவி தனது கணவனோடு அடக்கமாக, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரி வழங்கும் வெள்ளாடை நாயகி. இருவரையும் அகங்குளிர தரிசிக்க, தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே ஹரசாபவிமோசனப் பெருமாள் ஆலயமும் உள்ளது. ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள்தான் நீக்கினார். இந்தப் பெருமாள் ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீவருக்கென்று சந்நதியும் அமைந்துள்ளது.
 
கலைவாணி (வாணியம்பாடி) இத்தலத்தின் பெயரே வாணி என்றுதான் தொடங்குகிறது. பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், இத்தல அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ-பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணையேந்திய வாணி அருள்கிறாள். வேலூர்-கிருஷ்ணகிரி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.
 
வேத சரஸ்வதி (வேதாரண்யம்) வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை. நாகப்பட்டினத்திலிருந்து 45கி.மீ., திருத்துறைப்பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
 
எண்கர சரஸ்வதி (காஞ்சிபுரம்) யதோத்தகாரி பெருமாள் கோயிலின் கருவறையில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பாதத்தின் அருகில் அமர்ந்தவாறு சரஸ்வதி காட்சி தருகிறாள், கலைமகள். காமாட்சியம்மன் ஆலயத்திலும், கச்சபேஸ்வரர் கோயிலிலும் சரஸ்வதிக்கு சந்நதிகள் உள்ளன. காமாட்சியம்மன் கோயிலில் எண் கரங்கள் கொண்ட சரஸ்வதியைக் காணலாம்.
 
சோபனப்படி சரஸ்வதி (உத்திரமேரூர்) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்திருக்கும் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் சோபனப்படிக்கு கீழே சரஸ்வதியின் திருவுருவம் அமைந்துள்ளது.
 
அட்சர பீடம் (திருவாரூர்) திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அட்சரங்களே தனிச் சந்நதியில் கொலுவிருக்கின்றன. இந்த அட்சரங்களை தனி இறைவன் போல வழிபடுகிறார்கள். அட்சர பீடம் என்று அதற்குப் பெயர். 51 அட்சரங்களின் ஒலியில் உலகமே அடக்கம் என்பதை உணர்த்திடும் வகையில் உயிர் எழுத்துகளை ஒரு திருவாசியின் முகப்பிலும் மெய்யெழுத்துகளை பின்புறமும் செதுக்கி ஆவாஹனம் செய்துள்ளனர். இது அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறுவர். கமலாம்பிகையை சுற்றி வரும்போது தென்புறம் அட்சரபீடத்தையும், வடபுறம் சரஸ்வதி சந்நதியையும் தரிசிக்கலாம்.
 
தாமரைக்குள சரஸ்வதி (கேரளம்) கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கன் பரவூரில் பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒருமுறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை. மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி, ‘‘நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறேன்’’ என்றாள். அதன்படி தாமரைப் பூக்கும் தடாகம் உருவாக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது. இவளது திருநாமம், தட்சிண மூகாம்பிகை. தேர்வு எழுதிவிட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும் குழந்தைகள் அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெறவும், ஞாபகசக்தி பெருகவும் இங்கு அழைத்துச் செல்கின்றனர். இங்கு தரப்படும் கஷாயத்தை பருகினால் ஞாபகசக்தி கூடும் என்று நம்புகின்றனர்.
 
மாதங்கியான சரஸ்வதி (சேலம்) சேலம் மன்னார்பாளையத்தில் சரஸ்வதியின் அம்சமான ராஜமாதங்கி எழுந்தருளியிருக்கிறாள். மதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக அம்பாள் அவதரித்தாள். கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன் பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா? எனவே, தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் அறிவை வாரி வாரி வழங்குகிறாள்.
 
அரண்மனை சரஸ்வதி (தஞ்சாவூர்) தஞ்சாவூர் ராஜவீதி அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பான சரஸ்வதி ஆலயம் உள்ளது. கல்வி வளம் சிறக்க வணங்கவே எழுப்பப்பட்ட ஆலயமாக இது கருதப்படுகிறது.
 
நான்முகனுடன் நாமகள் (கும்பகோணம்) கும்பகோணத்தில் உள்ள பிரம்மன் கோயிலில் பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் மேன்மையடையவும் இங்கு ‘பிரம்ம சங்கல்ப பூஜை’ செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி, காயத்ரிக்கு விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்தில் சரஸ்வதிதேவி வரப்ரசாதியாய் திகழ்கிறாள்.
 
சரஸ்வதி சமேத பிரம்மா (சென்னை) சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீலக்ஷ்மி குபேரர் கோயில். இங்கு கன்னி மூலையில் சரஸ்வதி சமேத பிரம்மா தனிச் சந்நதியில் உள்ளார். இவருக்கு மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர நமது தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மாணவ, மாணவியர்கள் இந்த மஞ்சளை தரித்துக் கொண்டால் ஞாபக சக்தி பெருகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
 
கபால கிண்ணத்தில் கலைமகள் (பெரியபாளையம்) சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள். பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், வீரம், கல்வி மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
 
சரஸ்வதி முன் அன்னவாகனம் (சென்னை) சென்னை போரூரில் உள்ள மதனானந்தபுரத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்காம்பிகை என மூவரும் அடுத்தடுத்த சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். சரஸ்வதியின் முன் அன்னப்பறவை வீற்றிருப்பது அழகு. நவராத்திரி ஒன்பது நாட்கள் இத்தலத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. விஜயதசமி அன்று வெகுசிறப்பாக சண்டியாகம் நடைபெறுவது இத்தல விசேஷம்.
 
இரு தேவியருடன் சரஸ்வதி (திருநாகேஸ்வரம்) கும்பகோணம் அருகிலுள்ளது திருநாகேஸ்வரம், சுசீல முனிவரின் மகன் சுகர்மன், வனத்தின் வழியே சென்று கொண்டிருந்த போது, நாக அரசனான தக்கன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. தன் மகனை தீண்டிய தக்கனை, மானிடனாக பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாபவிமோசனம் பெற, தக்கன், பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே நாகமாகிய தக்கனுக்கு அருளியதால் நாகநாதராக இங்கே அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் கிரிகுஜாம்பிகை எனப்படுகிறாள். இங்கு துணைவியருடன் கூடிய ராகுவுக்கு தனிச் சந்நதி உள்ளது. இதுதவிர விநாயகரும், யோகராகுவும் ஒரு சந்நதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாகும். மேலும், இங்கு சரஸ்வதி, லட்சுமி, கிரிகுஜாம்பிகை ஒரே சந்நதியில் உள்ளனர். முப்பெருந்தேவியர்களும் ஒரே கருவறையில் திருவருட்பாலித்து பக்தர்களுக்கு கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றை அருள்கின்றனர். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம்.
 
கம்பர்-சரஸ்வதி (காஞ்சிபுரம்) காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் கலைமகள் தனி ஆலயத்தில் எழுந்தருளி அருளாசி வழங்கி வருகிறாள். சரஸ்வதி தேவியின் பேரருள் பெற்ற தவப்புதல்வர்களில் கம்பர் முதன்மையானவர். இவர், காஞ்சியில் வாழ்ந்திருந்த காலத்தில் கீழ் அம்பியில் சர்வகலாசாலை நடத்தினார். அழியாத கம்ப ராமாயணத் தை இவர் எழுதத் தொடங்கியது காஞ்சியிலாகும். அன்னை சரஸ்வதியின் மேல் ஆழ்ந்த பக்தியைக் கொண்ட கம்பர், தமது கையமைப்புக்குள் அடங்கக்கூடிய ஓரடி உயரம் கொண்ட சரஸ்வதி தேவி சிலையை தாம் செல்லும் ஊர்கள்தோறும் எடுத்துச் செல்வார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும்போது, காஞ்சி- வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கி கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கி அருள்மிகு சிந்தாமணி வழித்துணை விநாயகரை வழிபட்டார்.
 
இவ்விநாயகர் ஆலயம், தொண்டை மண்டல மன்னர் பிச்ச நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அச்சமயம் அன்னை சரஸ்வதிக்கு திருக்கோயில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கவிச்சக்ரவர்த்தி எண்ணியதாக வரலாற்றுச் சுவடுகள் தாங்கிய கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர் காலத்தில் அந்த எண்ணம் ஈடேறவில்லை. ஆனால், ஆண்டுகள் பல ஆனபிறகு, கம்பரின் ஆழ்ந்த பக்தியின் காரணமாக தாங்கி கிராமம் அருள்மிகு வழித்துணை விநாயகர் ஆலய சுற்று வளாகத்தில் அருள்மிகு சரஸ்வதி சிலையொன்று புதைபொருளாகக் கிடைத்தது. விநாயகர் ஆலயத்திலேயே பக்தர்களின் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் வைக்கப்பட்டிருந்த இந்த அன்னைக்கு விநாயகர் ஆலயம் அருகிலேயே தனிக்கோயில் கட்டப்பட்டது. இத்துடன் கம்பருக்கும் அவர் மனைவி நிகர்த்தவல்லிக்கும் சிலைகள் உருவாக்கப்பட்டு உடன் வைக்கப்பட்டது.
 
பேச்சியம்மன் (மதுரை)கிராமக் கோயில்களில் நாம் காணும் பேச்சியம்மன், சரஸ்வதியின் அம்சம்தான். பேச்சு+ஆயிதான் பேச்சாயி என்றாயிற்று. பேச்சுத்திறன் குன்றியவர்கள் இந்த அம்மனை வேண்டிக்கொண்டால், தம் குறைகள் தீர்ந்து பேச்சாற்றல் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். மதுரையிலுள்ள பேச்சியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. சிறு சிறு கிராமங்களில் தனிச் சந்நதியோடும் இந்த பேச்சியம்மன் திகழ்கிறாள்.
 
பிரம்மவித்யாம்பிகை (திருவெண்காடு) புத்தியை இயக்கும் சக்திகளில் மிகவும் முக்கியமானது புதன் கிரகம். ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை வளமும் தீர்மானிக்கப்படுகின்றன என்பார்கள். எனவே, கல்வியில் சிறந்தோங்க புத பகவானின் அருளைப்பெற வேண்டியது அவசியம். திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மேலும், மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்ம வித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள். அம்பாள் இங்கே சரஸ்வதிதேவியாகவே வழிபடப்படுகிறாள். இக்கோயில் கல்வி வரமருளும்; புத்தியை வலுவூட்டும். சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இக்கோயில்.
 
- A. Gurumoorthi
Editor's Choice
சிவனின் வாகனமான நந்தி பொதுவாக சிவன் கோயிலில் சிவனுக்கு முன் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அவர் காளை ரூபத்தில் இருப்பதைத் தான் பார்த்திருப்போம். படங்களில் வேண்டுமானால் நாம் மனித உடல் அமைப்பும், தலை மட்டும் காளை போன்ற உருவத்தில் இருக்கும் நந்தியை பார்த்திருப்போம்.
 
சில சிவ தலங்களில், நந்தி அதே போன்று நின்ற வடிவத்தில், கும்பிடுவது போன்ற அமைப்பையும் பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா பாடேஸ்வர மகாதேவ் திருக்கோயிலில் வித்தியாசமான நந்தி சிலை அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
 
பாடேஸ்வர் மகாதேவ் கோயில்:
 
மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்தில் உள்ள பாடேஸ்கிராமத்தில் அருள் மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இங்கு பல குகைகளுடன் உள்ள பெரிய வளாகம் உள்ளது. இதில் 8 பெரிய குகைகளும், பல சிறிய அளவிலான குகைகளும் உள்ளன. 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
சிற்ப வேலைப்பாடு;
 
நம் தமிழ்நாட்டிலேயே பல சிவ தலங்களில் 1000க்கும் அதிகமான நந்தி சிலைகளுடன் கூடிய கோயில்கள் உள்ளன. அந்த வகையில் 1000 சிவ லிங்கங்களை கொண்ட ஒரு அற்புத தலமாக இந்த பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் விளங்குகின்றது.
 
இந்த கோயிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்
 
*அதியசய நந்தி:*
 
இங்குள்ள ஒரு சிறிய குகையில் அமைந்துள்ள நந்தி முன் புறம் பார்க்க மனித வடிவில் யோக நிலையில் அமைர்ந்திருப்பது போன்றும், அதன் பின்புறம் பார்த்தால், நாம் சாதாரணமாக சிவ தலங்களில் பார்க்கக்கூடிய நந்தி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையும் கொடுக்கும் அளவிற்கு வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.
 
பக்கவாட்டில் பார்த்தால் நந்தியின் முன்னங்கால், மனித முன்னங்கால் இரண்டும் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
நந்தி சிலையின் சிறப்பம்சங்கள்:
 
இந்த நந்தி சிலை 7 கரங்களுடன் காணப்படுகின்றது. வலது பககத்தில் நான்கு கைகளும், இடது பக்கத்தில் மூன்று கைகளுடன் காணப்படுகின்றது.
 
- A. Gurumoorthi
Editor's Choice
சப்தமாத்திரிகா அல்லது அஷ்ட மாத்திரிகா சம்பிரதாயத்தில் இன்று தேவியை ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி அல்லது ஸ்ரீ முக்தீஸ்வரி தேவி வடிவில் வழிபடுவர் .
 
திதி நித்யா தேவிகளில் ஆறாவது தேவியான மஹா வஜ்ரேஸ்வரிக்கு நான்கு திருக்கரங்கள். பாசம், அங்குசம், கரும்பு வில், மாதுளம் கனி போன்றவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியுள்ளாள். நானாவித ரத்னங்களால் பிரகாசிக்கும் அணிகலன்களை அணிந்தருளும் தேவியிவள்.
 
கருணை மழை பொழியும் கண்கள் அடியவரை அனவரதமும் காக்கின்றன. புன்சிரிப்போடு கூடிய திருமுகத்தை உடையவள்.சிவப்புப் பட்டாடை அணிந்து, நவரத்தினங்களால் ஆன கிரீடமும், ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். கைகளில் இடப்பட்ட மருதாணி அழகாகப் பொலிகின்றது. பாதங்களில் தண்டையும் சதங்கையும் அணிந்துள்ளாள். இந்த அம்பிகை படகில் நவரத்தினங்களுடன் பிரகாசிக்கும் சிம்மாசனத்தில், பத்மாசனத்தில் அமர்ந்தவள். தேவரும், முனிவரும் பணிந்தேத்தும் பாத கமலங்களை உடையவள்.
 
நெற்றியில் ஒளிரும் மூன்றாவது கண் இவள் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை உணர்த்துகிறது. அன்னையின் கரத்திலுள்ள பாசம் லௌகீக பந்தங்களை மாற்றித் தன் வயம் ஈர்க்கும். அடங்கா மனத்தையும் அடங்க வைக்கும். அங்குசம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும். கரும்பு வில்லும், மாதுளங்கனியும் நன்மைகளின் குறியீடுகள். தன்னை நிகர்த்த சக்திக் கூட்டங்களுடன் எப்போதும் துலங்குபவள் இந்த மஹா வஜ்ரேஸ்வரி தேவி. இவள் மஹா வஜ்ரேஸ்வரி எனப்படுவதன் காரணமே இந்த அன்னையின் ஆற்றலின் பொருட்டுத்தான். தன் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் காத்து கரை சேர்ப்பவள் இவள். இத்தேவியை ஆராதிப்பவர்கள் வாழ்வில் மேன்மையுறுவர்.
 
சக்தி பீடங்களில் ஜாலாமந்திர் பீடத்தின் அதிதேவதையாக இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். லலிதா தேவி விரும்பி வசிக்கும் ஸ்ரீநகரத்தின் ௧௨ ஆம் மதில் வஜ்ரமணியால் ஆனது. அதற்கு அதிதேவதை இவள் என துர்வாஸ முனிவர் தன் லலிதாஸ்தவரத்னம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
‘பவதாவ ஸூதா வ்ருஷ்டி:’ இந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் எப்படிச் சொல்வது? காட்டிலே தீப்பிடித்து விட்டால், அதை அணைக்க நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் போதாது. ஆனால், ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை) வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள். சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
 
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அனைவரும் அம்பிகையை ஆராதித்து அதிக வரங்களைப் பெற்றிடலாம். வழிபடு பலன் இத்தேவியை வழிபட அக்ஞானம் அகன்று ஞானம் விருத்தியாகும். மனிதர்கள் படும் அனைத்து துக்கங்களையும் வேரோடு களையும் மகா சக்தியாக துக்கநாசினியாக இத்தேவி திகழ்கிறாள்.
 
மஹாவஜ்ரேஸ்வரி தேவி காயத்ரி:
 
ஓம் மஹாவஜ்ரேஸ்வர்யை வித்மஹே
 
வஜ்ர நித்யாயை தீமஹி
 
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
 
மூலமந்த்ரம்:
 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லின்னே ஐம் க்ரோம் நித்ய மதத்ரவே ஸ்வாஹா.
 
வஜ்ரேஷ்வரி கோவில் – இது தேவியின் மார்பகங்கள் அல்லது இடது மார்பகம் விழுந்த இடம் இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. அசுரனுடன் போரிட்டதால் ஏற்பட்ட புண்களுக்கு நெய் தடவி வழிபடுவர்.
 
இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடி கொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியைப் பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள். லலிதா சஹஸ்ரநாம வரிகள் வஜ்ரேஸ்வரி வாமதேவி என்றவை நம் மனதில் வருகிறது. தாரா அல்லது வஜ்ரேஸ்வரி “ரெய்கி”யின் தேவதையாகக் கருதப் படுகிறாள்.
 
காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின்
 
இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு.
 
மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போழுதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.
 
கோவிலின் பிரகாரத்தில் சில சன்னதிகள் உண்டு. மகா காளிக்கு என ஒரு மூலையில் சன்னதி. சன்னதியின் வெளியில் அட்ட்ரா புஜி தேவி – பதினெட்டு கைகளுடன் தேவியின் உருவம் இருக்கிறது. முன் நாட்களில் அங்கே ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
 
சில வருடங்களாக பலி இடுவது முற்றிலும் தடை செய்யப்பட, இப்போது காளியின் பலி பீடத்தில் இரத்தம் சிந்துவதில்லை!
 
இக்கோவிலிலும் உங்கள் பெயரைச் சொல்லி, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால், மேளத்தினை தட்டி, ”இன்னாருக்கு நல்லதையே கொடு” என்று தேவியிடம் அவர்களும் பிரார்த்திக்கிறார்கள். பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசக் கோவில்களில் இந்த வழக்கம் இருக்கிறது.
 
அடுத்து நாம் பார்க்கப் போவது மிகப் பழமையான ஒரு சிகப்பு பைரவர் சிலை. கிட்டத்தட்ட 5000 வருடம் பழமையான சிலை கம்பிக் கதவுகள் வழியே இந்த சிகப்பு பைரவரை வேண்டிக்கொண்டோம். இந்த சிகப்பு பைரவர் சிலைக்கு ஒரு கதை உண்டு. அது என்ன கதை? பார்க்கலாமா?
 
ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவோ, அல்லது அன்னிய நாடுகளின் தாக்கத்தினாலோ ஆபத்து வருவதற்கு முன்னதாகவே சிகப்பு பைரவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதோடு, மேனியும் வியர்த்து விட ஆரம்பித்து விடுமாம். 1905-ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தினை தாக்கிய நில நடுக்கத்திற்கு
 
முன்னரும் இப்படி நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
 
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் ௪௩ [43 ]முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் ௧௫ தேவியர் தாம் இந்த திதி நித்யா தேவியர் .
 
- A. Gurumoorthi
 
Editor's Choice
கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.
 
கொள்ளிடம் , மண்ணியாறு நதிக்கரையோரம் உள்ள தலம் திருப்பனந்தாள்..கும்பகோணம்- சென்னை சாலையில் கும்பகோணத்தில் இருந்து ௨௦கிமி தூரத்தில் உள்ளது.
திருக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது தேரோடும் பெரு வீதிகள் நான்கும் அமைந்துள்ளன. நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. மேலவீதி ‘இராசகம்பீரன் திருவீதி’ எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கு நோக்கிய இறைவன் மேற்கில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. இறைவனுக்கு வலது புறம் இறைவி கிழக்கு நோக்கியுள்ளார்
 
ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் இறைவன் அருள் கிடைப்பது நிச்சயம்.
 
இறைவன்- அருணஜடேசுவர சுவாமி (தாலவனேஸ்வரர், செஞ்சடையப்பர், ஜடாதரர்).
 
இறைவி- பெரிய நாயகி.
 
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்.
 
தலவிருட்சம் : பனை.
 
இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர். இத்தலத்தில் தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது மேலாடை நெகிழ அதனை இருமுழங்கைகளாலும் பற்றிக் கொண்டு மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார்
 
சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.
 
தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். மனதுடைந்துபோனான்.
 
யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. மன்னன். துவண்டு திரும்பினான்.
 
தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகார பலத்திற்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது.
 
இதே காலத்தில் குங்கிலியக்கலயநாயனார் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார்.
 
திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்து குங்கிலியத் புகையினை இட்டு தொண்டு செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு இணங்கும் அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.
 
நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு சரமாலையை சிவனுக்கு அணிவித்தார். எதிர்ப்புறத்தில் நின்று மறுமுனையை தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.
 
நிமிராவிட்டால் கயிறு இறுகி குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். அவருடைய அன்பு சிவனை அசைய வைத்தது. அடியவருக்காக மெல்ல நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.
 
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலே
 
திண்ணிய தொண்டர் கூடி இளைத்த பின் திறம்பி நிற்க
 
ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு கண்டபோதே
 
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
 
- என்பது பெரிய புராணம்.
 
அன்புக்காக எதையும் செய்வார் சிவன் அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.
 
இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது.
 
. முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்றப் போட்டி எழுந்தது. அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார். ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை.
 
மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார். பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார். பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.
 
அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார். இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது. பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது. திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.
 
சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.
 
. இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார். இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும். இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தல மரமாக பனை உள்ளது. பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன.
 
இக்கோயிலுக்கு நன்செய் புன்செய் என ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
 
இத்திருக்கோயிலைக் கட்டியவன் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது
 
சிவபெருமானை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. அதில் திருப்பனந்தாளும் ஒன்று
 
திருப்பனந்தாளில் காசி மடம் அமைத்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு பகுதியில் இம்மடம் உள்ளது. பல சிறப்புகள் கொண்டகாசி அதிபரையும் தரிசித்து செல்லலாம்.
 
- A. Gurumoorthi
Editor's Choice
நூற்றாண்டுகள் பல கடந்தும் அழியாத கலைச் சின்னமாய், இன்றும் புதியனவாகத் திகழ்பவைகளில் ஒன்று திருமயம் கோட்டை.
 
அதுவும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் உருவாக்கி வைக்கப்பட்ட பல குடைவரைக் கோவில்கள் சரித்திரச் சின்னங்கள் ஒருங்கே அமையப்பெற்ற ஊராக அன்றும், இன்றும் திகழ்ந்து வருகிறது "திருமயம்'.
 
"திருமெய்யம்' காலத்தால் மருவி, திருமயம் என்ற பெயராகி நம்மால் அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் "உண்மையின் இருப்பிடம். வடமொழியில் இவ்வூர்
 
"சத்திய ஷேத்திரம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
கி.பி.16-17ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்தது. அந்த வேளையில், இராமநாதபுர சமஸ்தானத்தின் வடக்கு எல்லைப் பகுதியாக திருமயம் விளங்கியது. சேதுபதிகளின் மேலாண்மைக்கு உட்பட்டு பல்லவராயர்கள் எனும் சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.
 
கி.பி.1673-1708-இல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்கிற விஜய இரகுநாதத் தேவர் 40 ஏக்கர் சுற்றளவில் ஏழுச் சுற்று மதில்களுடன் கருங்கற்களால் பிரமாண்டமான கோட்டை ஒன்றை இங்கே கட்டி வைத்தார். பின்னர் சேதுபதி மன்னருக்கும், புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையினருக்கும் திருமண உறவுகள் ஏற்பட்ட காரணத்தால், பல்லவராயர்களின் கையிலிருந்த திருமயம் பகுதி அரசுரிமை தொண்டைமான் மன்னர்களின் ஆளுகைக்கு மாறிப் போனது.
 
ஏழு வட்டவடிவிலான மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாகக் கொண்டு பிரமாண்ட முறையில் கட்டப்பட்டிருந்த இக்கோட்டையில் தற்போது நான்கு மதில் சுவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டையின் அமைப்பு வட்ட வடிவமானதாகும். இவ்விதமாக அமைந்த கோட்டையை "பத்மகக் கோட்டை' என்று அழைக்கப்படும். வெளிச்சுவரைச் சுற்றி ஆழமான அகழி உண்டு.
 
இன்றும் கோட்டையின் வடக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் கம்பீரமான நுழைவு வாசல்கள் உள்ளன. வடக்கு வாசல் காவல் தெய்வமாக பைரவரும், தெற்கு வாசலில் அனுமன், சக்தி, கணபதி ஆகியோரும். தென்கிழக்கில் முனீஸ்வரரும் காவல் தெய்வமாகக் காத்து நிற்கின்றனர். அந்தக் காலத்தில் ஒரு கம்பீரமிக்க கோட்டையின் கட்டுக்காவல் தாண்டி உள்ளே நுழைகிற உணர்வே இதைக் காணுகையில் நமக்கும் ஏற்படுகிறது.
 
காரணம், அன்றையக் காலகட்டத்தில் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எத்தகைய பாதுகாப்பு அம்சங்களோடு கோட்டை கொத்தளங்கள் விளங்கியிருந்தன என்பதை இன்றும் நாம் கண்கூடாகக் காண்பதற்கு திருமயம் கோட்டை ஓர் அற்புதமான வரலாற்று ஆவணமாக நம் முன்னேநிற்கிறது.
 
அதைச் சுற்றிலும் மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. உள்கோட்டையின் கருங்கல் மதிலைச் சுற்றி மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கற்களால் ஆன கைப்பிடிச் சுவற்றில் ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும், ஆட்கள் மறைந்து கொள்ளவும் இடைவெளிகள் காணப்படுகின்றன. உள் கோட்டைக்கு மேலே செல்லும்போது 100 டன் எடை அளவு இருக்கும் ஒரு தனிக்கல்லில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குன்றில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் வரைந்த மூலிகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதன் தெற்குப் பகுதியில், கருங்கற்களால் கட்டப்பட்ட பெரிய அறை ஒன்று உள்ளது. அது போர்த்தளவாடங்கள் வைக்கும் பாதுகாப்பு அறையாக அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டது.
 
இதன் எதிரே, குன்றின் மேற்குச் சரிவில் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் மிக உன்னதமான கலை நேர்த்தியில் குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக் குடைவரைக் கோவிலும், தெற்குச் சரிவில் அமைந்துள்ள சிவன், விஷ்ணு குடைவரைக் கோவில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
 
கோட்டையின் மேல் 20 அடி உயரமுள்ள பிரத்யேக கருங்கல் மேடையில் பீரங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆறு பீரங்கிகள் இக் கோட்டையின் வடக்கு, தெற்கு, கிழக்கு நுழைவாயில்களில் வைக்கப்பட்டுள்ளன. இதற்குத் தென்புலம் மழை நீரைத் தேக்கி வைக்கக்கூடிய மாதிரி சிறு குட்டை ஒன்றை அமைத்துள்ளனர். இங்கே தங்கியிருக்கும் காலங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பெரிய குட்டை கோட்டையின் வடபுறம் உள்ளது. இவற்றால், மாதக்கணக்கில் இதன் உள்ளே இருப்பவர்கள் குடிநீருக்காக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
 
கி.பி. 1708-இல் கிழவன் சேதுபதி காலத்திற்குப் பின், சேதுபதி தாண்டத்தேவன் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிழவன் சேதுபதியின் மகன் பவானிசாகர் என்பவருக்கும் தாண்டத்தேவனுக்கும் இடையே அரசுரிமை யாருக்கு என்பதில் போர் ஏற்பட்டது.
 
இந்த அரசுரிமைப் போரில் புதுக்கோட்டைத் தொண்டைமான் மன்னர் இரகுநாதராயத் தொண்டைமானின் உதவியால் தாண்டத்தேவன் வெற்றிபெற முடிந்தது. இந்த வெற்றிக்கு நன்றி காணிக்கையாக தாண்டத் தேவன் திருமயம் கோட்டையை தொண்டைமான் மன்னருக்கு சன்மானமாக வழங்கினார். எனவே, கி.பி. 1723-ஆம் ஆண்டுமுதல் திருமயம் கோட்டை தொண்டைமான் மன்னர்களின் பொறுப்பில் வந்தது.
 
கி.பி.1800-ஆம் ஆண்டு வாக்கில், புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயருடன் சுமுக உறவு வைத்திருந்த காரணத்தால் திருமயம் கோட்டையை ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருந்தார்.
 
கி.பி. 1875-ஆம் ஆண்டிலிருந்து கொடிய குற்றம் புரிந்தவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக இக்கோட்டை திகழ்ந்தது.
 
இக்குன்றின் தெற்குச் சரிவில் அதி அற்புதமான கலைக் கோவிலாக "சத்தியகிரீஸ்வரம்' எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில்.
 
இந்தக் கோவில்களுக்கு சற்று உயரே வேணுவனேஸ்வரி அம்மன் சந்நிதி உள்ளது. இதனையடுத்து கிழக்கு பார்த்தவண்ணம் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில் உள்ளது. மூலவராக ஆவுடையார் கோலத்தில் லிங்கத் திருமேனி அமைந்துள்ளது.
 
மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக
அமைந்துள்ளது.
 
சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கமாய் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரெங்கநாதர் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கம் திருத்தலத்தைவிட இத் திருத்தலம் காலத்தால் முந்தியது.
 
தென்பாண்டி மண்டலத்தின் 18 பதிகளில் இதுவும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
 
குகைக் கோவிலில் விஷ்ணுப் பெருமான் ""திருமெய்யர்'' என்கிற நாமத்தில் அனந்த சயன மூர்த்தியாகக் கண்கொள்ளா அற்புதப் பேரழகாகக் காட்சியளிக்கிறார்.
 
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குகைக் கோவில்களில் இதுவே அளவில் பெரியது. அனந்த சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார்.
 
அனந்த சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடித்திருக்கிற இந்தச் சிற்ப வேலைப்பாடு வேறெங்கும் காண முடியாத ஒன்று. இந்தக் குடைவரைக் கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி, விஸ்வக்சேனர், இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
 
இக் கோவிலின் கிழக்குப் பக்கம் முற்றிலும் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ள எண்கோண வடிவ தெப்பக்
 
குளம் நம் கவனத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
 
இவ்வாறு 1200 ஆண்டுகள் தொன்மைப் புகழ் மிக்க ஊராக திருமயம் சீரோடும், சிறப்போடும் இன்று விளங்கி வருகிறது. சரித்திரம் சொல்லும் இங்குள்ள கலைப் படைப்புகள் தமிழினத்தின் நாகரிக வாழ்வை விளக்கி நிற்கும் ஆவணங்கள் என்றால் அது மிகையாகாது.
 
குறிப்பு;தீரர் சத்திய மூர்த்தி பிறந்த ஊர்.புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது.வரலாற்றுச் சின்னமாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பாதுகாக்கப்படும் இக்கோட்டை திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
 
நுழைவுக் கட்டணம்: இந்தியர்கள்: 5/- ரூபாய்; வெளிநாட்டவர் 100/- ரூபாய். புகைப்படம் எடுக்க: 25/- ரூபாய்; வீடியோ எடுக்க 100/- ரூபாய்.
 
Editor's Choice

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

1. தாராலிங்கம் பற்றிய குறிப்பு.

 

சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளதுபோல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை "தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றன.

காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோவில், தென்பொன்பரப்பி சிவன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன.

தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள்.

நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை "வேதலிங்கம்' என்று போற்றுவர். சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ரதாரா லிங்கம் என்பர்.

எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச்செயல்களையும் குறிப்பன என்பர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசை லிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும்.

பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கோவிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது.

திருபொன்பரப்பி திருக்கோயிலில் உள்ளது, இதனின் வேறு பட்டதாகும். சூரிய காந்தக் கல்லால் ஆனது.

முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.

64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு- கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர்.

இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும், அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

பொதுவாக தாராலிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர்.

இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்.

திருபொன்பரப்பித் தலத்து சொர்ணபுரீஸ்வரர் ,நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சோடச தாராலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சந்தன அபிஷேகத்தின் போது, பதினாறு பட்டைகளிலும் சீராக கோடுபோல் வழிவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இனி, தென்பொன்பரப்பித் திருத்தல மகமைகளைச் சுருக்கமாகக் காண்போம்.

சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர் பிரதிஷ்டை செய்த சோடச தாராலிங்கம்!!

1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமைக் குருவாகக் கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனத்தை ஒரு பிரதோஷ நாளில் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதி, மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார்.

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட தாராலிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் சோடச லிங்கம் எ‌ன்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக பதினாறு பட்டைகள் கொண்ட சோடசலிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் பீடமும் 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.

உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).

இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக பாணத்தின் அடிபாகம் வரை வந்து ஆவுடையாரில் ஐக்கியமாவதைக் காணலாம்.

இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

காகபுஜண்ட சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம்.

ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்குப் பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.

கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி. சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.

இக்கோயில்களில் உள்ள கோஷ்ட திருமேனிகளின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் உருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

இத்திருக்கோயிலில்,இலிங்கோத்பவருக்குப் பதிலாக,திருமால் நின்றத் திருக்கோலத்தில் உருத்திராச மாலை அணிந்து பஞ்ச கோஷ்ட மூர்த்தங்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார்.

இவ்விடத்தில், கோஷ்டம் பற்றிய சிறு குறிப்பு =

முன்வாசலின் (முகப்பின்) இரண்டு பக்கத்திலுள்ள கோஷ்டங்களில் வாயிற் காவலர்கள் (துவார பாலகர்கள் அல்லது துவார பாலிகைகள்) காணப்படுவர். தென்புறமுள்ள கோஷ்டங்களில் நிருத்த கணபதி, தட்சணாமூர்த்தி காணப்படுவர். மேற்குக் கோஷ்டத்தில் திருமால் அல்லது இலிங்கோத்பவர் அமைப்பது வழக்கமாக உள்ளது. வடக்குக் கோஷ்டத்தில் நான்முகன், துர்க்கை அல்லது ஒரு சக்தி தெய்வம் ஆகியோர் கோஷ்ட தேவதைகளாக நிறுவப்படுதல் ஆலயக்கலை மரபாகும்.

இந்த சிவாலயம் எழுப்பப்பட்ட காலக்கட்டத்தில், தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் வாணகோவரையன் ஆவான் .

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன் பொன்பரப்பின வாணகோவரையன்.

இவனின் வேறு பட்ட பெயர்கள்=


1.இராசராஜதேவன் வாணகோவரையன்
2. சிறுபாக்கமுடையான் இராஜராஜதேவன் பொன்பரப்பினான் ஆன வாணகோவரையன்
3. மகதைநாடாழ்வான் பொன்பரப்பின வாணகோவரையன்
4. மகதேசன் இராஜராஜ வாணகோவரையன்

இவன்காலத்தில் இவர் கோயில் கட்டிய ஊர்கள்

1. ஆறகழூர்
2. அரும்பாவூர்
3. வெண்பாவூர்
4. பசும்பலூர்
5. தழுதாழை
6. கூகையூர்
7. தெடாவூர்
8. வீரகனூர்
9.தென்பொன்பரப்பி
10.உலகிய நல்லூர்

மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் ஒரு அழகிய சிவாலயத்தை கலை நுணுக்கத்தோடு எழுப்பினான். அப்போது ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்று புழங்கியதால் இவ்வூருக்கு பொன் பரப்பி என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாணகோவரையனுக்கு சோதனை வந்தது. கப்பம் கட்டாததால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுக்கும் நோக்கத்தில் அவனைத் தாக்க வந்தனர். வாணகோவரையன் குறுநில மன்னராக இருந்தபோதும் தைரியத்தில் குறைவில்லாதவன்.

தான் வணங்கும் சொர்ணபுரீஸ்வரரை மனமுருக வணங்கி போருக்குப் புறப்பட்டான். ஈசனின் முழு அருளையும் பெற்ற மகிழ்ச்சியில் போர் முரசு கொட்டிச் சென்ற மன்னனைப் பார்த்த மாத்திரத்தில் மூவேந்தர்களும் தம் அரசமுடிகளை கழற்றி வைத்துவிட்டு திரும்பினர். அதனாலேயே இந்த இடம் மும்முடி என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

 

பக்கம் 6 / 11