Editor's Choice

கொரோனா தொற்று பரவிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில்,  அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். இந்த கொரோனாவின் அச்சத்தைத் தவிர்க்க, சத்தான தரம் வாய்ந்த உணவுப் பொருட்களை வீட்டிலே விளைவிப்பதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது ஆகும். கிராமங்களில் வயல்வெளி, வீட்டுத் தோட்டம் போன்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நகரங்களிலோ இட நெருக்கடியால் மாடித் தோட்டமே சிறந்த முறையாகும்.

மாடித் தோட்டப் பயிர்களை குறைந்த அளவில் எந்த பருவத்திலும் வளர்க்கலாம். எனினும் காய்கறிகளுக்கு ஜூன் – ஜூலை மற்றும் டிசம்பர் – ஜனவரி பருவங்களே சிறந்தவை. கீரைகளை ஆண்டு முழுவதுவும் குளிர் பருவ காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை அக்டோபர் – ஜனவரி மாதங்களிலும் வளர்க்கலாம். பயிருக்கு ஏற்ற வளர்ப்புத் தொட்டிகளை அல்லது பைகளை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் காய்கறிகளை 10 – 20 லிட்டர் பைகளிலும் கொடி வகை காய்கறிகளை 30 – 40 லிட்டர் பைகளிலும் மற்றும் மர வகைகளை 100 – 200 லிட்டர் பைகளிலும் வளர்க்கவும். பைகளில் வளர் ஊடகமாக 1:1 விகித நிலையில் மண்புழு உரம் மற்றும் தென்னை நார்க் கழிவை பயன்படுத்துவதே சிறந்தது. இது எடை குறைவு மற்றும் நீண்ட நாட்கள் ஈரத்தை தாங்கும் தன்மை உடையது. அதனுடன் உயிரி இடுபொருட்களைச் சேர்த்துக் கொள்வதால் வளர் ஊடகம் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப் படுகிறது. பைகள் அல்லது வளர்ப்புத் தொட்டிகளிள் வடிகால் துளைகள் இட்டு அடியில் ஒரு அடுக்கு மணலும் அதன் மேல் வளர் ஊடகத்தை கொண்டு நிரப்பிக் கொள்ளவும்.

விதைப்பில் தக்காளி, மிளகாய், கத்தரி, காலிஃப்ளவர், முட்டைக் கோஸ், கேப்சிகம் போன்றவை நாற்று நடவுப் பயிர்கள், மற்ற காய்கறிகள் பெரும்பாலும் நேரடி விதைப்பு பயிர்கள். நாற்று நடவுப் பயிர்களுக்கு குழித்தட்டு நாற்றங்கால் கொண்டு நாற்று உற்பத்தி செய்து 25-30 நாள் நாற்றை வளர்ப்புப் பைக்கு மாற்றவும். நேரடி விதைப்பு பயிர் விதைகளை பைகளில் 1-2 அங்குல ஆழத்தில் போட்டு வளர் ஊடகம் கொண்டு மூடவும். பின்னர் பூவாளியைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் கொடுக்கவும்.  மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, இன்சுலின் செடி, சோற்றுக் காற்றாலை போன்ற மருத்துவச் செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.

இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முறையே 25 கிராம் எடுத்து அரைத்து அந்த சாற்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப் படுத்தலாம். தாவரங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் புழுக்களை எளிதில் சேகரித்து அளித்து விடலாம். வீட்டுப் பயன்பாட்டிற்கு என்பதால் பெரும்பாலும் இரசாயண உரம் மற்றும் மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையையே பின்பற்றவும். மாடித் தோட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதை போலவே பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பைகளைத் தனிமைப் படுத்தி மற்றப் பயிர்களுக்கு பரவாமல் பாதுகாக்காலம். இவ்வாறு தனிமைப் படுத்துவதன் மூலம் கொரோனாவில் மட்டுமின்றி மாடித் தோட்டத்திலும் நோய் பரவுவதைத் தடுத்து வெற்றி காணுவதோடு நம் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நாமே உற்பத்தி செய்து தன் நிறைவு அடைவதோடு வீட்டுச் செலவையும் வெகுவாக குறைக்கலாம். 

Editor's Choice

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.

மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.

சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.

பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.

முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்சத்துக்கள். தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதனீர் ஒரு சிறந்த குளிர்ச்சிபானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் செய்யப்படுகிறது. பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்

  • ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.
  • “இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற வாசகம் நடமாடும் கறுத்த யானைக்கு மட்டுமல்ல என்றும் நிலையாக கறுத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும்.
  • ஒரு பனை உயிர்நீத்து தலை வீழ்ந்த போதிலும் பனையின் பட்டுப்போன மரப்பகுதி பல பறவைகளுக்கு கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சுகள் வளர்க்கச் சிறந்த பாதுகாப்பான இடமாக இருப்பதால் பல பறவைகள் ஓர் மாடி வீட்டில் வசிப்பது போல கூட்டமாக வாழ்கின்றன. தற்போது அருகி வரும் உயிரினங்களான பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்பு, மரநாய் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைதான்.
Editor's Choice

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து  கொள்வது மிக அவசியமாகும். ரசாயனம் கலந்த மண்ணை மாற்ற அவசியமானதாகவும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.

பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது  நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அனைத்து விதமான பயிர் வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்வது வேளாண்மையின் முதல் படியாகும். எனவே நிலத்தினை நன்கு உழுது  மண்ணினை  உழுவதற்கு எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையினை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை கூட 6 மாதங்களில் இயற்கை வேளாண்மையின் மூலம் மீட்டெடுக்கலாம்.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை வகைகளை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி (Intercropping Cultivation) செய்வதன்  மூலம் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுபடுத்த பட்டு, பூச்சிகளின் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் எவை என்று பாராமல் அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டும் பண்புடையது. மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி சுவையான ஆரோக்கியமானவற்றை உண்ணலாம். 

மூடாக்கி போடுதல் என்பது முடி போடுதல் எனலாம்.  மூடாக்கு இடுவதன் முக்கிய நோக்கம் விளைச்சலை அதிக படுத்துவது ஆகும். இதற்காக பயிர்களுக்கு இடையே இலைதழை, வைக்கோல் (Straw), கரும்பு சோகை ஆகியவற்றைக் கொண்டு முடி விடுவார்கள். இதனால் வேர் (Root) பகுதிகளின்  ஈரப்பதம்  பாதுகாக்க பட்டு  மண்புழுக்கள் வளர எதுவாக இருக்கும். களை செடிகளின்  வளர்ச்சி கட்டுப்பாடு மண்ணின் தன்மை காக்கப்படுகிறது.

இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

பயிர்கள் நன்கு செழித்து வளர அதிக இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான  குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தாவரத்திற்கு உயிர் நாடி என்பது விதை யாகும். எனவே விதைகளை தேர்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.  தரமான நாட்டு விதைகளைப் (Natural Seed) பயன்படுத்தி இயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெற இயலும்.

Editor's Choice

தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

வயதில் முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. நான்கு பருவங்களை கடந்த பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளிவருகின்றன. இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன.

சுமார் 20 முதல் 30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி வட்டம் வட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்பட்டாலும் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சைகுட்டை ஆகிய குட்டை ரகங்களிலும், குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரகங்களிலும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 30 மில்லி (அ) அசாடிராக்டின் ஒரு சதவீதம் (2 மில்லி) மருந்தை ஒரு மில்லி ஒட்டுத் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறத்தில் தெளிக்க வேண்டும். கரும்பூஞ்சாணத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவு கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் பசை) ஓலைகளின் மீது நன்கு படுமாறு தெளிக்கவும். மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை (நீளம் 3 அடி, அகலம் ஒரு அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

கிரைஸோபா இரை விழுங்கிகளை எக்டேருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடவும். இந்த வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது காக்ஸிடினல்லிட் பொறி வண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். எனவே, தென்னந்தோப்புகளில் எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகளால் தாக்குதலுக்குள்ளான ஓலைகளை சிறிய அளவில் வெட்டி, பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Editor's Choice

விதைத்த 75-ஆவது நாளில் காய்த்து பலன் தரும் வாள் அவரையைப் பயிரிட்டு பயனடையலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

எஸ்.பி.எஸ். 1 என வேளாண் துறையினரால் குறியிடப்பட்டுள்ள வாள் அவரை அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே விவசாயிகளுக்கு லாபம் தந்து வருகிறது.

இப்பயிர் ஒளியுணர்வு இல்லாத காய்கறி பயிர்களில் ஒன்றாகும். இந்த வாள் அவரை 110-120 நாள்களுக்குள் முதிர்ச்சி அடைந்துவிடும்.

இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மேலும், பாசனத்துக்கு மிகவும் எற்றது.

விதைத்த 75-ஆவது நாளில் இதன் காய்கள் அறுவடைக்கு வந்துவிடும். தனிப்பயிராக ஒரு ஹெக்டருக்கு 1,356 கிலோ விதை மகசூலையும், 7,500 கிலோ காய் மகசூலையும் தரவல்லது. மேலும், இதை வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் நிழல் பயிராகவும் பயிரிடலாம்.

மானாவாரிகளில் ஜூன், ஜூலை மாதங்களிலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், கோடையில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் இதைப் பயிரிடலாம்.

குறிப்பாக வடதமிழக மாவட்டங்களில் மானாவாரிகள் அதிகம் இருப்பதால் இப்பயிர் இம்மாவட்டங்களுக்கு ஏற்ற பயிராகும்.

1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாள்அவரை பயிர் குட்டையான, நேரான, படரும் தாவரத் தோற்றம் கொண்டது. பச்சை நிறத்தில் இருக்கும்

இதன் கிளைகள் 6 முதல் 8 எண்ணிக்கை கொண்டவையாக இருக்கும். இலைக்கோணத்தில் பூங்கொத்தும் தடித்த வெளிர்ஊதா நிறத்தில் மலர்களும் இருக்கும்.

இதன் காய்கள் நீளமாகவும், தொங்குபவையாகவும், பச்சை, தட்டையான சடைப்பகுதி கொண்டவையாக காய்கள் இருக்கும்.

தானியப் பயிர்களிலேயே மிகவும் சத்தான, சுவையான காய்கறியான வாள் அவரை, 110 முதல் 120 நாள்கள் எனும் குறைந்த காலம் கொண்டவை ஆகும். இதில், பூச்சி மற்றும் நோய் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதில்லை என்பதால் இதை பயிரிட்டு லாபம் பார்த்த விவசாயிகள் வேறு பயிருக்கு மாறுவதில்லை.

Editor's Choice

கார்பைட் கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், உடல்நல பாதிப்பை உண்டாக்கும் என்பதால், பழங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், கடுமையான உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 இயற்கையாகவே மாம்பழம் பழுக்கும் போது, அதன் புளிப்புத்தன்மை குறைந்து, இனிப்பு சுவை அதிகரிக்கும். இதற்கு எத்திலீன் வாயு முக்கிய காரணமாகும்.

  • ஆனால், கால்சியம் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கும்போது, ஆபத்தான ‘அசிடிலீன்’ வாயு உற்பத்தியாகிறது.
  • மாம்பழங்கள் செயற்கையாக, அவை பழுத்ததுபோல் நிறமாற்றம் செய்கிறது.
  • இப்பழங்கள், மிகவும் மென்மையாகவும், சுவை குறைந்ததாகவும் இருக்கும்
  • வெளிப்புறத்தில் கவர்ச்சிகரமாக ஒரே மாதிரியான நிறம் கொண்டிருக்கும்
  • இப்பழங்களை தலைவலி, மயக்கம், துாக்கம், மனக்குழப்பம், தொந்தரவு, ஞாபகமறதி, மூளையில் வீக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  • மாம்பழங்களின் மேற்புறம் சீரான நிறம் இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது
  • மாம்பழங்களை வாங்கும்போது கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

பக்கம் 2 / 11