Editor's Choice

பாரத ஸ்டேட் வங்கியின், 'ஆன்லைன்' சேவையில் சிக்கல் ஏற்பட்டதால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

கடந்த, 2020 - 21ம் நிதியாண்டு முடிந்து, 2021 -- 22ம் புதிய நிதியாண்டு துவங்கியது. அனைத்து வர்த்தக நிறுவனங்களும், வங்கிகளும், தங்களின் புதிய நிதியாண்டுக்கான கணக்கை துவக்கின.இந்நிலையில், எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் சேவை, முழுதும் செயல்படவில்லை என, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

புதிய நிதியாண்டு துவக்கம் என்பதால், நேற்று வங்கி சேவை இல்லை; ஆன்லைன் வாயிலாகவும் எந்த சேவையையும் மேற் கொள்ள முடியவில்லை. எஸ்.பி.ஐ.,யின், 'யோனோ' செயலி மற்றும் ஆன்லைன் வங்கி சேவையும் செயல்பட வில்லை. 'பேடிஎம், கூகுள் பே' போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் வாயிலாகவும், சேவைகளை மேற்கொள்ள முடிவில்லை.ஆன்லைன் வங்கி சேவையின் தரத்தை உயர்த்தும் வகையில், பராமரிப்பு பணி நடப்பதாக, இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. இதனால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். 

Editor's Choice

சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மருத்துவம் குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

*சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும்.

*சப்போட்டா கூழுடன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.

*சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

*பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு, ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கு இது நல்ல மருந்து.

*சப்போட்டா கூழுடன் சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்து நன்றாகக் காய்ச்சிக் குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.

*ஆரம்ப நிலை காச நோய் உள்ளவர்கள் சப்போட்டாப்பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரம் பழமும் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

*மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.

*சப்போட்டாக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மை உடையது.

*தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் கிட்டும்.

*கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்ல பயனளிக்கும்.

*சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களைச் சீராக்கி, கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

Editor's Choice

அமெரிக்காவின் அலபாமா மாகாண அரசு பள்ளிகளில், யோகா பயிற்சி வழங்குவதற்கான மசோதா, எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1993ல், ஹிந்து மதத்தின் அடையாளம் என கூறி, அமெரிக்காவின் அலபாமா அரசு பள்ளிகளில் யோகா கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அலபாமா குடியரசு கட்சி எம்.பி.,யும், யோகா பயிற்சியாளருமான ஜெரிமி கிரே, அரசு பள்ளிகளில் யோகா பயற்சி வழங்க வகை செய்யும் மசோதாவை, பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தார்.

பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக செனட் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு, மசோதா அனுப்பப்பட்டது.  இக்குழு, பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதில், 'ஈகில்' கூட்டமைப்பின் இயக்குனர் பெக்கி கெரிட்சன், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

''வகுப்பறையில் யோகா பயிற்சியாளர்கள், மாணவர்களுக்கு ஆன்மிக முத்திரைகளை கற்றுக் கொடுப்பது, பெற்றோரின் சம்மதத்தை மீறிய செயல்,'' என, அவர் வாதிட்டார். இந்த எதிர்ப்பு காரணமாக, யோகா மசோதாவை செனட் சபைக்கு அனுப்புவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, நீதித் துறை குழு தெரிவித்துள்ளது.

Editor's Choice
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. 56,211 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 
 
இந்நிலையில் விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
''பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தபோது, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
 
முகக்கவசத்தை முறையாக மூக்கையும், வாய்ப் பகுதியையும் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடித்து நடப்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள், முகக்கவசத்தை முறையாக அணியாத பயணிகளிடம் போலீசார் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் உடனடி அபராதம் வசூலிக்கப்படும்".
Editor's Choice
வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.
 
உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், கொரோனா வைரசை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
 
எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர்.
 
இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. சில நாட்களில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
 
இந்தநிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அதன் அறிக்கை, ஜெனீவாவில் உள்ள ஒரு நாட்டின் தூதரக அதிகாரி மூலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 
 
உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
கொரோனா பரவியதற்கு 4 சூழ்நிலைகளை சொல்லலாம். முதலாவது, வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
 
இரண்டாவது, வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
மூன்றாவது, குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக பரவி இருக்க சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி நடந்திருக்காது.
 
நான்காவது, பரிசோதனை கூடத்தில் இருந்து கசியும் சூழ்நிலை. ஆனால், அதற்கு சிறிதுகூட சாத்தியம் இல்லை.
 
கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ், வவ்வாலிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதேபோன்ற வைரஸ்கள், எறும்புத்தின்னி, கீரி, பூனைகள் ஆகியவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
சீனாவின் உகான் நகர சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதா என்பது குறித்து இந்த அறிக்கையில் எதுவும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை.
 
அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார்.
 
உகானில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்பம் குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை அமெரிக்காவும் இங்கிலாந்தும் கடுமையாக விமர்சித்துள்ளன, சீனா  முழுமையான, அசல் தரவு மற்றும் மாதிரிகளுக்கான அணுகலைத் தடுத்து நிறுத்தியதாக மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளன.

ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 12 நாடுகளும் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில்  விசாரணை "போதுமானதாக இல்லை" மற்றும் நிபுணர்கள் நான்கு வார பயணத்தின் போது  சீனாவில் தகவல்களை திரட்ட போராட வேண்டி இருந்தது என கூறப்பட்டு உள்ளது.
Editor's Choice

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. 

அதுமட்டுமின்றி, குப்பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத்துறை பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவிவரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
 
காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவ\மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப்பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காற்று மாசுபாடு காரணமாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பக்கம் 54 / 90