Editor's Choice

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

*கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*இதில் மிகுந்துள்ள சுண்ணாம்புச்சத்து எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுவலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

*இதயத்திற்கு இதமானது. ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

*கொத்தவரையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இதில் சர்க்கரை, கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

*பெண்களுக்கு, குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுந்திருக்கிறது. இதில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு ஆகியவை சீராக வளர்ச்சி பெற உதவும். வைட்டமின் ‘கே’ குழந்தை நன்கு வளரவும் எலும்புகள் வலிமை பெறவும் உதவும்.

*கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்க்க ரத்த ஓட்டம் சீராவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் உதவுகிறது.

*செரிமானத்திற்கு உதவுவதுடன் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் உருவாக்கும் கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.

*மனைஉளைச்சல், படபடப்பை போக்கிட உதவுகிறது. ஆசனவாய்ப் புற்றுநோயை தவிர்க்கும் வல்லமை கொத்தவரைக்கு உண்டு.

*கொத்தவரங்காய் போலவே அதன் இலைக்கும் மகத்துவம் உண்டு. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயை தணிப்பவை.

*வலி நிவாரணியாக, கிருமி நாசினியாகவும் இதன் இலை செயல்படுகிறது. ஒரு கைப்பிடி அளவு இலையுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு குறையும். இரவு நேரப்பார்வை கோளாறை தடுக்கும்.

*கொத்தவரை இலை ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

*கொத்தவரை விதையை கொதிக்க வைத்துக் குடித்தால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள் குறையும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு கொத்தவரங்காய் மருந்தாகிறது.

Editor's Choice

''வெயில் கொளுத்தி வருவதால், சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க, குளிர்ந்த ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும்; பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.''

காலை முதல், மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்வோர், குடையை பயன்படுத்தலாம்.

பாலியஸ்டர், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிந்தால், வெயிலில் தாக்கம் உடலை அதிகமாக பாதிக்காது.

தண்ணீர் வசதி இருந்தால், காலை மற்றும் மாலை, இரவு வேளைகளில் குளிப்பது, உடல் ஆரோக்கியத்தை தரும். வெப்ப காலத்தில், வெப்ப பக்கவாதம் என்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளதால், வயதானவர்கள், குழந்தைகளை வெயிலில் அதிக நேரம் இருக்க வைக்க கூடாது. அவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.

வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் வரும்படி, ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; முந்தைய இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம், காலையில், நீராகாரமாக எடுத்து கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் நீர்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது, உடல் வெப்பத்தை தணிக்கும். வெயிலால், உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால், உப்பு குறைய வாய்ப்புள்ளது.

எலுமிச்சை, மோர் போன்றவற்றில் உப்பு சேர்த்து கொள்ளலாம். மண்பானையில் வைக்கப்படும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொண்டால், உடல் வெப்பம் வெகுவாக குறையும்.

வெயில் காலம் முடியும் வரை, டீ மற்றும் காபி போன்ற சூடான பானங்களை தவிர்த்து, குளிர் பானங்களை அருந்தலாம். எதையும் சூடாக சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. முடிந்தவரை காரம், மசாலா சார்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

Editor's Choice

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்ற கேள்விக்கான தேடல், 500 மடங்கும், 'வைட்டமின் - சி, ஜிங்க்' குறித்த தேடல், 380 சதவீதமும் அதிகரித்து உள்ளது என்று கூறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் மாத்திரைகள் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது, ஜிங்க்.
மருந்து விற்பனை வரலாற்றில், நம் நாட்டிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டு, 'மல்டி வைட்டமின்' மாத்திரைகள், சர்க்கரை கோளாறு மாத்திரைகளை பின்னுக்கு தள்ளி, சாதனை படைத்துள்ளது.
ஜிங்க் மாத்திரைகள் தயாரிக்கும் பல கம்பெனிகளின் ஜிங்க் மாத்திரையின் விற்பனை, கடந்த ஆறு மாதங்களில், 70 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பொதுவாக ஏற்படும் ஜலதோஷ பாதிப்பை குறைக்கும் தன்மை, ஜிங்கிற்கு இருப்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வைரசை அழிக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.
அளவுக்கு அதிகமாக ஜிங்க் மாத்திரை சாப்பிடுவதால், தாமிர தாது குறைபாடு, ரத்த சோகை, நரம்புகளில் சிதைவு ஏற்படும்; ஜிங்க் ஸ்பிரே அடிக்கடி பயன்படுத்துவதால், வாசனை தெரியாமல் போகலாம்.

கடந்த மார்ச் - அக்டோபர் மாதங்களில் மட்டும், 1,267 கோடி ரூபாய்க்கு வைட்டமின் - சி விற்கப்பட்டு உள்ளது.

வெறும் வைட்டமின் - சி மாத்திரைகளை சாப்பிடுவதால் மட்டும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது இல்லை என்று சொல்லும் உலக சுகாதார மைய மருத்துவ விஞ்ஞானிகள், உலகத்தில் விற்கப்படும் இணை உணவுகள், ஊட்டச்சத்து பானங்களில், 60 சதவீதம் போலியானவை என்று கூறுகிறது.

வீட்டில் தயாராகும் அவரவரின் பாரம்பரிய உணவுகளை, சமச்சீரான சத்துக்கள் நிறைந்ததாக சாப்பிடுவது ஒன்று தான் சிறந்தது என்றும் சொல்கிறது.

பீன்ஸ், நட்ஸ், முழு தானியங்கள், பால் பொருட்கள் இவற்றில் தேவையான அளவு ஜிங்க் உள்ளது.
திராட்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை, கொய்யா போன்றவற்றில், அதிக அளவில் வைட்டமின் - சி உள்ளது.

இயற்கையான வழியில் நுண்ணுாட்ட சத்துக்களை பெறுவதே நல்லது.

Editor's Choice

“மலர்களின் சாறுகளிலிருந்து எடுக்கப்படும் மலர் மருந்துகள் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியது. கவலை இல்லாத வாழ்க்கை எப்போது வாழ்கிறோமோ, அப்போது நம் உடல் உறுப்புகள் எல்லாம் சரியாகி ஆரோக்கியமாகிறது. அதற்கு மலர் மருத்துவம் உதவியாக இருக்கிறது”.

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை, கவலை… போன்றவை ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இது போன்ற மனது சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியது மலர் மருந்துகள். பூக்களை சுத்தமான நீரில் போட்டு வெயிலில் வைத்திருப்பதன் மூலம் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

அதன்பிறகு அந்த நீரை வடிகட்டி சில மருத்துவப் பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டால் அதுவே தாய்த்திரவமாகும். இந்த மருந்துதான் மனதில் நன்றாக வேலை செய்து உடல் நோய்களைப் போக்குகிறது. நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மனநோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனதின் ஆற்றலை சீராக்க முடியாதபோது மலர் மருத்துவம் மனதில் ஆற்றலை சீராக்கி மனதின் மேலோட்டத்தில் உள்ள செயலை ஆழ்மனதில் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது.

‘‘ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு மருந்துள்ளது. நம்முடைய பிரச்னை என்னவோ அதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். ராக் ரோஸ், இம்பேடென்ஸ், கிளிமாடிஸ், ஸ்டார் ஆப் பெத்லெஹம் மற்றும் செர்ரி பிளம் போன்ற மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும். அதே போல் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அக்ரிமனி என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலனை தரும். அதே போல் நல்ல உறக்கம், ரத்தத்தை சுத்திகரிக்க,  சகிப்புத்தன்மை... என அனைத்து மனது  சார்ந்த பிரச்னைகளுக்கு மலர் மருத்துவம் நல்ல பலனை அளிக்கும்’’ என கூறப்படுகிறது.

“இங்கிலாந்தை சேர்ந்த எட்வர்ட் பாச் என்பவர் அலோபதி மருத்துவர். ஹோமியோபதி மருத்துவமும் கற்றறிந்தவர். மனிதர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள்? அந்த கவலையைப் போக்க வழி இருக்கிறதா? என்ற கேள்விகள் சிறுவயதிலிருந்தே அவருக்குள் இருந்துள்ளது. 35 வயதில் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்று மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு நாமே மருத்துவராக இருந்துகொண்டு நம் உயிரைக் கூட காப்பாற முடியவில்லையே என்று விரக்தி ஏற்பட்டு சில காலம் தனிமையை நாடிச் செல்கிறார்.

அருகில் இருக்கும் காட்டில் டெண்ட் போட்டு ஓய்வு எடுக்கிறார். காட்டில் புல்தரையில் நடக்கும் போது மனது மிகவும் இலேசாகவும், சந்தோஷமாகவும் உணர்கிறார். இதில் ஏதோ இருக்கிறது என்று ஆராய்ச்சியில் இறங்கியவருக்கு, ‘எந்த ஒரு நோய்க்கும் மனமே காரணம்’ என்ற உண்மை புலப்பட்டது. மனதைச் சரி செய்தால் பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும் என்று உறுதியாக நம்பினார். மனதை சரி செய்யும் மருந்துகளைத் தேடி மலைகள், காடுகள் என அலைந்தார்.

மூலிகைகளையும் மலர்களையும் கொண்டு பரிசோதனைகள் செய்தார். ஒவ்வொரு மலர்களும் அவருள் சில மாற்றங்களை கொடுத்தது. 38 வகையான மலர் மருந்துகள் மனதை ஒழுங்குபடுத்த உதவியதாகக் கண்டுபிடித்து அவற்றை வரிசைப்படுத்தினார். மேலும், இந்த மலர் மருந்துகளை தனியாகவும் ஹோமியோபதி மருந்துகளுடன் சேர்த்தும் கொடுத்துப் பரிசோதித்து,  முறைப்படுத்தினார்.

Editor's Choice

கழுத்து வலி, முதுகு வலி, கால் மூட்டு வலி, தோள் பட்டை வலி என நம்மில் அனைவருக்கும் குறைந்தது ஒரு வலியாவது வந்திருக்கும். எப்படி தொடுதல் என்பது ஓர் உணர்வோ அதுபோல வலியும் ஓர் உணர்வுதான். முட்களினால் நம் கையில் கிழித்துக் கொண்டால் அங்கு காயம் ஏற்பட்டு வலி உண்டாகும். வலி என்பது ஓர் அறிகுறி. இதில் வலி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது முட்களும், கிழிந்த நம் தோலும் தான்.

எனவே கழுத்தில் வலி ஏற்படுவது ஓர் அறிகுறி தான். அது எதனால் ஏற்படுகிறது, நம் உடலில் உள்ள உறுப்புகள் காரணமாகவா அல்லது வெளியே உள்ள வேலை பளு போன்ற சூழல் காரணிகளா, அதற்கு எத்தகைய தீர்வு முறையைக் கொண்டு இந்த காரணங்களை சீர் செய்ய வேண்டும். மேலும் வராமல் தடுக்க என்னென்ன வழிகளைத் தொடர வேண்டும் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இது அனைத்து வலிகளுக்கும் பொருந்தும்.  

வலியில் பல வகைகள் உண்டு. இயற்கையாகவே தோன்றும் உதிரப்போக்கு வலி, பேறுகால வலி முதல் நோய் மற்றும் கோளாறுகளால் தோன்றும் உடல் வலி வரை வலிகளில் பல வேறுபாடுகள் உண்டு. அதைப்போலவே வலியின் தாக்கம், அளவு, தன்மை என ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கும். உதாரணமாக காது வலியின் தன்மை வேறு, அயற்சியினால் வரும் தசை வலியின் தன்மை வேறுவிதமாக இருக்கும்.

* இளம் வயதினரிடம் 60 சதவிகிதம் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாக இருப்பது தசைகள் தான்.

* நம் உடலில் உள்ள தசைகள் சமச்சீரான நிலையில் இல்லாமல் ஒரு பக்கம் தளர்ந்தும், மறுபக்கம் இருக்கமாகவும் இருப்பது.

* தசைகள் சமச்சீராய் இல்லையெனில் தசைகளில் வலி ஏற்படும்.

* மேலும் சமச்சீரின்மையால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்படும்போது மூட்டு வலியும் அதிகமாகும்.

* தசைகள் சமச்சீராக இல்லாததற்கு காரணம் தசைகள் வலிமையாக இல்லாமல் இருப்பது.

* தசைகள் வலிமையுடன் இருக்கும்போது அது இருபுறமும் தூண் போல் மூட்டுகளை காத்து உடல் இயக்கங்களை சீராய் மேற்கொள்ள உதவும்.

இன்றைய இயந்திர உலகில் பல சுகாதார சிக்கல்கள் வாழ்வியல் முறை மாற்றத்தின் காரணமாகவே வருகிறது. அதில் வலிகளுக்கு, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் அமர்ந்தோ, நின்றோ வேலை செய்வது போன்றவற்றை மிக முக்கியக் காரணமாக சொல்லலாம்.

* போதிய மருத்துவர் பரிந்துரையின்றி நாமாகவே மருந்து கடைகளில் வலி நிவாரணி மருந்துகள் வாங்கி உட்கொள்வது.

* எந்தவித வலி ஏற்பட்டாலும் மருத்துவர் ஏற்கனவே சொன்ன வலி நிவாரணி மருந்துகளையே அதற்கும் பயன்படுத்துவது.  

* தொடர்ந்து மருத்துவர் ஆலோசனையின்றி நாமாகவே மருந்துகள் நீண்ட நாட்களுக்கு உட்கொள்வது.  

* நாமாகவே இயன்முறை மருத்துவரின் போதிய ஆலோசனையின்றி பயிற்சிகளை மேற்கொள்வது. குறிப்பாக யுடியூப் போன்றவற்றைப் பார்த்து பயிற்சிகளை தவறான முறையில் செய்வது.

* வலி நிவாரணி மருந்துகளால் உடல் உள் உறுப்புகளில் பாதிப்பு மற்றும் பக்கவிளைவுகள் தோன்றும். மேலும் வலி ஏற்படுவதற்கான காரணத்தை சீர் செய்யாமல் வலியை மட்டும் குறைப்பதினால் எந்த பயனும் இல்லை. அதனால் பிரச்சனை தசைகளில் உள்ளதா, இல்லை வேறு ஏதேனும் உறுப்புகளில் உள்ளதா எனத் தகுந்த இயன்முறை மருத்துவர் மூலம் கண்டறிந்து அதற்கு ஏற்ப தீர்வு வழங்க வேண்டும்.

* இயன்முறை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் வேறு சில பிரத்யேக நுட்பங்கள் வலியை குறைப்பதற்கு உதவுக்கூடும். மேலும் அவை எந்த விதமான பக்கவிளைவுகளும் அற்றவை என்பதால் அனைவருக்கும் எளிதில் பரிந்துரைக்கலாம். அத்துடன், மகப்பேறு காலங்களில் ஏற்படும் முதுகுவலி முதல் கொண்டு கால் மூட்டுவலி, தோள்பட்டை வலி என யாவற்றுக்கும் மிக எளிதில் தீர்வு காணலாம்.

* மீண்டும் வலி வராமல் இருப்பதற்கு தசைகளை வலிமை செய்வதற்கான பயிற்சிகளும், சில தசை தளர்வுப் பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் தசைகள் சமநிலையில் இருக்கக்கூடும். இதனால் மீண்டும் வலி வருவதற்கு வழி இல்லை. எனவே ஒருவர் சாதாரண வலிதானே என வலியை அலட்சியமாக விட்டுவிடாமல் தகுந்த இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப் பெற்று தீர்வு பெற வேண்டியது மிக அவசியம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

Editor's Choice

ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.

குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.

ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.

பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.

ரோஜா இதழ்களை வேளைக்கு 1 கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தைச் சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் அகலும்.

50 ரோஜா இதழ்களை அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அத்தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி விடும்.

10 கிராம் ரோஜா இதழ்களை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும்.

ரோஜா இதழ்களுடன் 2 மடங்கு கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்து, இதை காலை, மாலையில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். 1 மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும்.

பக்கம் 28 / 49