Editor's Choice

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் 2வது அலை ஏப்., 2வது வாரத்திற்கு பின் உச்சம் பெறும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவின் 2வது அலை 100 நாட்கள் நீடிக்கும். 2வது அலையின் போது 25 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.

தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, 2வது அலை ஏப்ரல் 2வது பிற்பாதியில் தான் உச்சம்பெறும்.

ஊரடங்கோ அல்லது கட்டுப்பாடுகளோ பலன்தராது. தடுப்பூசியை போடும் பணியை அதிகரிப்பதே, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். தற்போது தினசரி போடப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 34 லட்சத்தில் இருந்து 40 - 45 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 4 மாதங்களில் தடுப்பூசி போடும் பணி நிறைவு பெறும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

பெரும்பாலான மக்களுக்கு தண்ணீருடன் தான் மருந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் சிலருக்கு டீ அல்லது பழசாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. உங்களுக்கு அந்த பழக்கம் அதனை இன்றுடன் விட்டுவிடுங்கள்.

சிட்ரஸ் பழங்களுடன் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என்பது இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஏன் தேநீர் அல்லது பழச்சாறுடன், அதாவது ஜூஸுடன் மருந்து சாப்பிடக்கூடாது, என்ன விதமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேநீரில் டானின் (Tannin) உள்ளது. இது மருந்துடன் சேர்ந்து ஒரு இரசாயன எதிர்வினை செய்கிறது. மருந்துகளை, தேநீர் மற்றும் காபியுடன் மருந்து உட்கொள்வதன் மூலம் அதன் செயல் திறனும் குறையும் . சில நேரங்களில், மருந்தின் செயல் திறன் முற்றிலுமாக அழிந்து விடலாம்.  

பழச்சாறுடன் மருந்தை உட்கொள்வதனாலும் மருந்தின செயல்திறன் குறைகிறது. சிட்ரஸ் பழச்சாறுகள் மருந்தின் செயல்திறனை  குறைக்கின்றன. இதனுடன், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Anti-biotic) செயல்திறனும் குறைகிறது. பழசாறு மருந்தை கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

அதோடு, ஜூஸ் அல்லது டீயுடன் மருந்தை எடுத்துக் கொள்ளும் போது சில அரிதான நேரங்களில்,  அதன் எதிர் வினை காரணமாக உயிருகே ஆபத்தும் ஏற்படலாம்.

Editor's Choice

ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் ஜன.,16 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கோவிஷீல்டுக்கான தடுப்பூசி மருந்து இரண்டாவது டோஸ்க்கான கால நீட்டிப்பை 4 வாரத்திலிருந்து 8 வாரமாக மத்திய அரசு நீடித்துள்ளது.

நாடு முழுவதும் 4.84 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியிருக்கிறார். தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்ட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உருவாகியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்பு சக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Editor's Choice

தர்பூசணி கோடைகாலத்தில் சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன. தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில் இதனை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். இது உடலில் ஏற்படும் நீரிழப்பிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நீர் சத்தை பராமரிக்கவும் உதவுகிறது. தர்பூசணி சாப்பிடும்போது, ​​மக்கள் அதன் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியை சாப்பிடுகிறார்கள், ஆனால் வெளிப்புற தோல் பகுதியை தூக்கி எறிவார்கள்.  தர்பூசணியுடன் அதன் தோலிலும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

நார்ச்சத்து நிறைந்தவை - தர்பூசணி தோல்களில் காணப்படும் நார்ச்சத்து அளவு மிகவும் அதிகமாக உள்ளது. நார் சத்தின் காரணமாக  ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தர்பூசணி தோல்களில் நார்ச்சத்து இருப்பதால், எடையை குறைப்பதற்கும் இது உங்களுக்கு உதவுகிறது. எடை இழக்க, நீங்கள் இதனை ஒரு சாலட் ஆக சாப்பிடலாம். இதில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இது உங்கள் மெடபாலிஸம் அதாவது, வளர்சிதை மாற்றத்தையும்  அதிகரிக்கிறது.

தூங்குவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தர்பூசணி தோல்களைப் பயன்படுத்தலாம். இதில் மெக்னீசியம் உள்ளது, இது தூக்கமின்மையை போக்க உதவுகிறது.

தர்பூசணியின் தோல்களில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது கரும்புள்ளிகள், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி, இளைமையான தோற்றத்தை கொடுக்கிறது. தர்பூசணி தோல்களைத் தேய்த்தால், உடல் சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும். அதோடு, நீர் சத்து குறைபட்டை போக்குவதால் வறட்சி இல்லாமல் இருக்கும்.

Editor's Choice

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலின் 3வது அலை வீசி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா வைரஸ்கள் உருமாறி பரவி வருகின்றன. இதனால், இந்நாடுகளிலும், அண்டை நாடுகளிலும் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரிட்டானி பகுதியில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிட்டானி பகுதியில் உள்ள லன்னியன் மருத்துவமனையில் இப்புதிய கொரோனா பரவி வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பரவி வரும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா தீவிரமானதா, வேகமாக பரவுமா என்பது குறித்து முதற்கட்ட ஆய்வுகளில் முடிவுக்கு வரமுடியவில்லை எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் வேக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய கொரோனா வைரஸ் மீது தடுப்பூசியின் தாக்கம் என்னவாக இருக்குமென்பதும் தெளிவாகவில்லை.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்துவது, மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பக்கம் 25 / 49