Editor's Choice

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.52 கோடியைக் கடந்துள்ளது.  வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  130,799,458 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 105,291,823 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2,850,062 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 22,656,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,606-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்:

அமெரிக்கா- 31,314,625
பிரேசில்- 12,912,379
இந்தியா- 12,391,129
பிரான்ஸ் - 4,741,759
ரஷ்யா- 4,563,056
பிரிட்டன்- 4,353,668

கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள்:

அமெரிக்கா-567,610
பிரேசில்- 328,366
மேக்சிகோ- 203,664
இந்தியா- 164,141
பிரிட்டன்- 126,816
இத்தாலி- 110,328

இதனிடையே, அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர், ரத்தம் உறைந்து பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பதாக இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.

இதே போல், அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசி பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைந்து பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் வேறு பல நாடுகளும் மருந்துக்கு தடை விதித்துள்ளன. ஆனாலும், உலக சுகாதார நிறுவனம் எந்த தடையும் விதிக்கவில்லை. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அஸ்ட்ரஜெனகா மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 30 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு அதிர்ச்சித் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

ஆனாலும், அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், இந்தியாவைப் பொறுத்த வரையில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட யாருக்கும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இல்லை என்றே மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

கொரோனா தொற்றுநோய் நமது வாழ்வை பல வழிகளில் மாற்றி விட்டது. நீண்ட நேரம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் பலர், உடல் எடை அதிகரித்து அதன் காரணமாக அவதியில் உள்ளனர். 

குறைந்த அளவிலான உடல் செயல்பாடு காரணமாக பலரது செரிமானம் பாதிக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் பசியுடன் இருக்கும்போது, ​​வேலை செய்யத் தேவையான கலோரிகள் அல்லது ஆற்றலை உங்களது உடல் நாடுகிறது. பசி, தசைகள் இழப்பை ஏற்படுத்துகிறது, இது முதுகெலும்புக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது. முதுகெலும்பில் அதிகப்படியான அழுத்தம் முதுகுவலியை மேலும் மோசமாக்குகிறது.

வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவானது. பெரும்பாலும் முதுகுவலிக்கு மிகவும் பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஆகையால், உங்கள் வைட்டமின் டி அளவை எப்போதும் சோதித்து சரிபார்க்கவும். இது இரத்த பரிசோதனை மூலம் செய்யப்படும்.

தினசரி உணவில் இரண்டு டீஸ்பூன் கருப்பு எள் விதைகளை சேர்க்கவும். வெள்ளை எள் விதைகள் கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கும். கருப்பு எள் விதைகள் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதோடு எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள். உங்கள் வேலையின் இயல்பு அமர்ந்தபடி செய்வதாக இருந்தால், முதுகு வலி வராமல் இருக்கும் ஒன்று நீங்கள் தரையில் அமர்ந்து வேலை செய்யலாம் அல்லது உங்கள் முதுகுத்தண்டு நேராக இருப்பது போல நாற்காலியில் அமர்ந்து மேஜையில் வேலை செய்யவும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருக்காமல், அவ்வப்போது வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து காலார நடந்து வந்தால், தசை பிடிப்புகள் இல்லாமல் இருக்கும். உடல் பாகங்களும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கும்.

முதுகுவலிப் பிரச்சனை இருப்பவர்கள் அல்லது அது வருவதற்கு முன்னதாகவே தவிர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக யோகா செய்திடலாம்.

முதுகும் இடுப்பும் இணைகிற இடத்தில் பிடிப்பு வலி போல பிடித்துக் கொள்ளும் அதனை தவிர்க்க இந்த பயிற்சி செய்திடலாம்.

தரையில் இரண்டு கால்முட்டியையும் ஊன்றி உட்கார வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். பாதம் இரண்டும் தரையில் படிந்திருக்க வேண்டும், ஒன்றோடொன்று சேர்ந்து வைப்பது, மேலும் கீழுமாய் வைத்திருப்பது கூடாது. இப்போது கைகளை கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே உங்களுக்கு முன்னால் தரையில் வைக்க வேண்டும். கைகள், கழுத்து, முதுகு ஆகியவை நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

தலையிலிருந்து கை சற்று மேலே இருக்க வேண்டும். பின் மேலே அப்படியேஎழுந்து நார்மல் பொசிசனுக்கு வந்து மீண்டும் இதே போல செய்ய வேண்டும். இதை செய்யும் போது வேக வேகமாக செய்யாமல் நிதானமாக ஆழமான மூச்சை இழுத்து விட்டபடி செய்திடுங்கள். இதனை ஒன்றிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை செய்யலாம்.

Editor's Choice

சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தபடாத காய்கறி சுரைக்காய் எனலாம். ஆனால்  வழக்கமான காய்கறிகளை விட அதிக  நன்மைகள் கொண்டது. உண்மையில், காய்கறி மட்டுமல்ல, அதன் சாறும் கூட அந்த கூடுதல் கொழுப்பை கரைக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

சுரைக்காய் சாற்றை ஒரு சக்திவாய்ந்த சத்துணவு ஜூஸ் என்று அழைப்பது தவறல்ல. இதில்  தண்ணீரில்  சத்து ஏராளமாக உள்ளது. எடை இழப்பு தவிர, அமிலத்தன்மை, அஜீரணம், புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க இது  மிகவும் பயனுள்ளது.

தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்க இது மிகவும் உதவுகிறது

தண்ணீர் சத்து (சுமார் 92%) மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, உங்கள் உடலில் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. 

சுரைக்காயில் உள்ள  கலோரியை பொறுத்தவரை, 100 கிராம் காய்கறியில் சுமார் 15 கலோரிகளும், வெறும் 1 கிராம் கொழுப்பும் உள்ளன. காய்கறி முழுவதும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே நீண்ட நேரம் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியுடன்  இருக்க உதவுகிறது.செப்டம்பர் 2012 இல் ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எலிகளின் எடை யை குறைக்க சுரைக்காய் மிகவும் உதவியது, 

தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை வேகமாக எரிக்க மிகவும் உதவுகிறது என்பதால், இதனை தொடர்ந்து குடிப்பதால், தொப்பை குறையும்.
சமையலறைகளில் அதனால், சுரைக்காயை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

Editor's Choice

ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு, 12 - 14 கிராம் இருக்க வேண்டும்; ஆனால், 80 சதவீதம் பெண்களுக்கு இந்த அளவு இருப்பதில்லை.என் அனுபவத்தில், 11 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும் பெண்களை பார்ப்பதே அபூர்வம் என்றால், எந்த அளவிற்கு ரத்த சோகையால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ரத்தசோகைக்கு மிக முக்கிய காரணம், தவறான உணவு பழக்கம்; அடுத்தது, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல்.

கிராமப்புறங்களில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. கழிவுகளில் கொக்கிப் புழுக்கள் உருவாகும். அம்மண்ணை கையால் அள்ளி, வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் போது, அதில் உள்ள கொக்கிப் புழுக்கள் வயிற்றுக்குள் சென்று தங்கி விடும். இவை சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்து உட்பட நுண்ணூட்ட சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும்; இதனால், போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காது. பல்வேறு காரணங்களால், பெண்களுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு இருக்கும் போது, இது சாதாரண விஷயம் என்று நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர்.

மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில், குறிப்பிட்ட அளவு இரும்புச் சத்தும் வீணாகும். ரத்தசோகையை தடுக்க, 12 வயது முதல், 12 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, '12 - 12 இனிசிஷியேடிவ்' என்ற திட்டம் உள்ளது.

இளம் வயதில் இருந்தே இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள், கேழ்வரகு, அசைவ உணவு பழக்கம் இருந்தால், கல்லீரல், மண்ணீரல் உணவில் இடம் பெற வேண்டும்.

உணவில் புரதம் பிரதான ஊட்டச்சத்து என்பதால் பருப்பு, பால் பொருட்கள், மீன், முட்டை, சிக்கன், சிறுதானியங்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். இரும்பும், புரதமும் சேர்ந்தது தான் ஹீமோகுளோபின்.

உணவு தயாரிப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். நீரில் கரையக் கூடிய வைட்டமின், போலிக் அமிலம். இது சமைத்த உணவில் போதுமான அளவு இருந்தால் மட்டுமே, இரும்புச் சத்தை உடல் கிரகிக்க இயலும். தேவைக்கு அதிகமாக நீண்ட நேரம் வேக வைப்பது, மூடாமல் சமைப்பது, போலிக் அமிலம் வீணாக வழி செய்யும்.

முடிந்த வரை மண்பாண்டங்களிலும், இரும்பு வாணலியிலும் சமைத்தால், உணவில் இரும்புச் சத்து வீணாகாமல் இருக்கும்; உடலும் அதை நன்கு கிரகிக்கும். உணவு பற்றிய விழிப்புணர்வே இல்லாத போது, நுண்ணூட்ட சத்து பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும்?

 
Editor's Choice

தலைமுடி, முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உடலின் வேறு எந்த பகுதிக்கும் கொடுப்பது இல்லை. அதிகம் பயன்படுத்தும் கைகளுக்கு கூட நாம் முக்கியத்துவம் தருவது இல்லை. உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பாதிப்புகள் ஒரு கட்டத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடும் இயல்பையே முடக்கி வீட்டுக்குள் நம்மை சிறை படுத்திவிடும்.

பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். எனவே, இந்த பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்புகள் ஏற்படும். இது கால், பாத சருமத்தை பாதிப்படையச் செய்யும். குளித்து முடித்ததும் சரியாக கால்களை துடைக்காமல் சாக்ஸ், ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

முகம் மற்றும் கைகளுக்கு எந்த அளவுக்கு மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தேவையோ, அதே போல் பாதத்துக்கும் அது தேவை. க்ரீம் தடவுவது பாத சருமம் வறண்டு விடாமல் இருக்க உதவும்.

இறந்த செல்களால் எந்த பயனும் இல்லை. எனவே, மாதத்துக்கு ஒரு முறையாவது கால்களை நன்கு அதிகமாக அழுத்தம் தராமல் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்து இறந்த செல்களை அகற்ற வேண்டும்.  மாலையில் இதைச் செய்துவிட்டு மாஸ்ச்சைரைசிங் க்ரீம் தடவி இரவு முழுக்க டீஹைட்ரேஷன் கிடைக்க செய்ய வேண்டும்.

முடிந்த வரை சாக்ஸ் அணிவது நல்லது. இது பாதங்களை பாதுகாப்பதுடன், அழுக்கு உள்ளிட்டவை பாதங்களில் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. உயரமான ஹீல்ஸ் தவிர்த்திடுங்கள். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!

Editor's Choice

எல்லா நேரமும், மொபைல் போன், லேப் டாப், கம்ப்யூட்டர் என்று பார்ப்பதால், கண்களை இமைப்பது மறந்தே போய்விட்டது அல்லது குறைந்து விட்டது. விளைவு, 'டிரை - ஐ' எனப்படும் உலர் கண்கள் பிரச்னை. 'ஸ்கிரீன் டைம்' அதிகரித்து இருப்பதால், உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இதை, 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்று சொல்வோம். கண்களில் சுரக்கும் இயல்பான நீர் வற்றி, கண்கள் வறட்சியாகி விடுகிறது.

கண்கள் உலர்ந்ததை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்பாராத நேரத்தில், கண்களில் இருந்து நீர் வழியும். கண்களின் உள்ளே, மணலை போட்டது போன்று உறுத்துவது, அரிப்பு, கண்கள் சிவந்து போவது... இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கும் அதிகமான அறிகுறிகளோ வரலாம். தொடர்ந்து பார்க்க முடியாமல், துாக்கம் வரும் உணர்வு, அயர்ச்சி இருக்கும்.

தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் போன் பார்ப்பதால், கருவிழிக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காது; இதனாலேயே எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் வறட்சியாகி விடுகிறது. கருவிழியில் ரத்தக் குழாய் கிடையாது; எனவே, ரத்த ஓட்டம் இருக்காது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாகவே செல்லும். கண் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் வழியாகவே, கண்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் கண்ணை இமைக்கும் போது, சுரப்பிகள் சுரக்கும் நீர், கருவிழியில் படரும். நிமிடத்திற்கு, 20 முறை இமைக்கும் போது, நீரில் இருந்து ஆக்சிஜனை கருவிழி எடுத்துக் கொள்ளும்.நிமிடத்திற்கு, 20 முறை கண் இமைக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து, 20 நிமிடங்கள் கம்ப்யூட்டர் பார்த்தால், 20 வினாடிகள் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை அழுத்தலாம். மேலும், 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 அடி துாரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்கலாம்; இதனால், கண் தசைகள், 'ரிலாக்ஸ்' ஆகும்.

 

பக்கம் 23 / 49