Editor's Choice

முதுகில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்னைகளில், கீழ் முதுகு வலி இரண்டாம் இடத்தில் உள்ளது.

காய்ச்சலுக்கு நிகராக தற்போது பெரும்பாலான மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க காரணம் முதுகுவலி தான் என்றும் சொல்லலாம். ஆபத்தான நோயல்ல ஆனால் வலி அவஸ்தையை உண்டாக்கும் நோய். சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை.. முதுகு வலி வருவதற்கான காரணம் என்ன?

* கூன் விழுந்த நிலையில் உட்காருவது

* வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல்

* தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது

* குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது

* அதிக எடையைத் தூக்குவது

* உடற்பயிற்சி இல்லாதது

* ஊட்டச் சத்துக்குறைவு

* தரையில் வழுக்கி விழுவது

* உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது

* உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90% முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.

‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’ (Osteomyelitis), ‘ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். சிறு வயதிலும் வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

உடலில் இடுப்பு பகுதி என்பது சந்திகம், அபான வாயு ஆகியவற்றின் இருப்பிடமாகும். வலி, தேய்மானம் போன்ற குறியீடுகள் வாதத்தினால் ஏற்படுகிறது. மரத்து போதல் கபத்தினால் ஏற்படுகின்றது. அழற்சி பித்தத்தினால் ஏற்படுகின்றது. இந்நோயில் ஏற்படும் தேய்மான குறியீடுகள் வாதத்தின் குளிர்ச்சி, வறட்சி ஆகிய குணங்களினால் ஏற்படுகின்றது. இடுப்பு பகுதி எந்தெந்த நோய்களின் இருப்பிடம் என்பதை நினைவில் வைத்து சிகிச்சையில்  முன்நோக்கி செல்ல வேண்டும்.

இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது அபான வாயுவையும், கபம் மற்றும் வாத கபத்தையும் குறைத்து சீர்படுத்த வேண்டும். ஒருவரின் குடல் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கால்சியம் உணவுகள் எலும்பையும் தசையையும் வலுப்படுத்தும். கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கையளவு வறுத்த கொண்டக்கடலையுடன், 50 கிராம் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலை அருந்துங்கள். இவ்வாறு தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இடுப்பு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து வகை பிரச்சனைகளும் குணமாகும். கொள்ளு குதிரைக்கு மட்டும் தீவனம் அல்ல மனிதனுக்கும் சிறந்த உடல் நல மருந்தாக விளங்குகிறது. குறிப்பாக இடுப்பு வலியை சரிசெய்ய சிறந்து மருந்து என்றுகூட சொல்லலாம். எனவே வாரத்தில் இரண்டு முறை கொள்ளு ரசம் செய்து சாப்பிட்டு வர இந்த இடுப்பு வலி பிரச்சனை சரியாகிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

* கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.

* ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.

* எந்த வேலையையும் தொடர்ந்து மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்தவாறு செய்யாதீர்கள்.

* வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம். அமர்ந்திருக்கும்போது கூடக் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.

* சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாக்கிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.

* சரியான மெத்தையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

* கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.

* அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்கவேண்டி இருந்தால், எடையைத் தூக்கும் போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை முன்புறம் மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.

* முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது. குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக, நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

* உயரமான காலணிகளை அணியக் கூடாது.

* மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முதுகில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, மசாஜ் செய்வது விபரீதங்களை விலைக்கு வாங்குவதற்குச் சமம்.

* இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள்.

Editor's Choice

மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இந்த சூழலில் சென்னை ஐ.ஐ.டி-யின் ”bio medical engineering” துறை "லிங்க முத்திரை" எனப்படும் யோக முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கலாம் என கண்டறிந்துள்ளது. இந்த முத்திரையை செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்யாமல் இதுபோன்ற நிகழ்வுகளை அரங்கேற்றி வருவதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.

Editor's Choice

கடந்த ஓராண்டிற்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சுகாதர நிபுணர்கள் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், சரியான ஆதாரம் இல்லாத அல்லது தர்க்கரீதியான பகுத்தறிவு இல்லாத வினோதமான சிகிச்சை முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் மக்களை குழப்பமடைய செய்கின்றன. அதில் ஒன்று தான் நீராவி பிடித்தால் அது உடலில் இருக்கும் கொரோனா வைரஸை கொல்லும் என்ற செய்தி. இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இவ்வேளையில், ஆவி பிடிப்பது உண்மையில் வைரஸைக் கொல்லுமா.? 

மூக்கடைப்பு, குளிர் அல்லது சைனஸ், நீர் கோர்ப்பதால் தலை பாரமாக இருப்பது போன்ற நேரத்தில் ஆவி பிடிப்பது என்பது நாசி பாதைகளை தணிக்க மற்றும் திறக்கவும் மற்றும் சில நோய்த்தொற்று அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறவும் பரவலாக வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூடு நீரில் போர்வை அல்லது துணியை போர்த்தி கொண்டு ஆவி பிடிப்பது புத்துணர்வை அளிக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், வியர்வையில் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், சருமம் பொலிவுறும் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது.

கொரோனா வைரஸை அழிக்க அல்லது தடுக்க நீராவியை உள்ளிழுக்கும் சிகிச்சையை உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பரிந்துரைக்கவில்லை என்பதை தற்போது வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது இங்கே அவசியமாகிறது. சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய CDC பிரதிநிதி, நீராவி உள்ளிழுக்கும் நடைமுறை ஆபத்தானது என்றும், இது கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில நிபுணர்கள் ஆவி பிடிப்பது பற்றி கூறுகையில், நுரையீரல் மிகவும் மென்மையானது. நீராவி மிகவும் வெப்பமானது. இரண்டும் ஒன்று சேர்வது சரியானது இல்லை. அதிக வெப்பமான நீராவி நுரையீரல் செல்களில் தீக்காயக் காயத்தை கூட ஏற்படுத்தலாம். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றால் பிரச்னை இல்லை. ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்று உடலில் இருந்து, ஆவி பிடிப்பதால் நுரையீரல் செல்கள் சேதமடைந்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிக அதிகம் என எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க நுரையீரல் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆல்பர்ட் ரிஸோ கூறுகையில் நீராவி உள்ளிழுக்கும் முறைகள் சுவாச அறிகுறிகளை போக்க உதவும் என்றாலும் அவை வைரஸை கொல்லாது என்றார். ஸ்பானிஷ் குழந்தை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், “நீராவி உள்ளிழுக்கும் சிகிச்சை" தீக்காயத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளது.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம் ஷாஃப்னரின் அறிக்கை படி, சூடான ஈரப்பதம் வைரஸை அழிக்காது. எனவே கொரோனவை கொல்ல சூடான நீராவி உள்ளிழுக்கும் முறையை பயன்படுத்துவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து சாதாரண சளி தொந்தரவு போன்றவைக்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமே தவிர, கோவிட் போன்ற ஒரு கொடிய தொற்று நோயை இது குணப்படுத்தாது என்பதே. கொரோனா தொற்றை எதிர்த்து போரிட சமூக விலகல், மாஸ்க், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தடுப்பு மருந்து ஆகியவை மட்டுமே உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

Editor's Choice
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
 
இந்த நிறுவனங்களின் தடுப்பூசி ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஐரோப்பாவில் தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் பைசர் நிறுவனமும், பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து விண்ணப்பித்துள்ளன. இதுபோல், அமெரிக்காவிலும் இதே வயதுடையவர்களுக்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் ‘பைசர்’ நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.
 
இந்தியாவை பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதல் முறையாக மே1ம் தேதிதான் தடுப்பூசி போடப்படுகிறது. ஐரோப்பாவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே போடப்பட்டு வருகிறது. ஒருவேளை ‘பைசர்’ நிறுவனத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், 12 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது உலக அளவில் இதுவே முதல் முறையாக இருக்கும்.
Editor's Choice

பொதுவாக நாம் அனைவரும் தேவைக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்கிறோம். அளவுக்கதிகமாக சர்க்கரையை எடுத்துகொள்ளும்போது தேவையற்ற உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளும்போது இன்சுலின் அளவு அதிகரித்து இதயப் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு போன்ற குறிப்பிடத்தகுந்த உடல் உபாதைகள் உருவாகும்.

இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க நினைப்பவர்கள் சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றுவது நல்லது. இதன்மூலம் தேவைக்கு அதிகமாக உடலில் சர்க்கரை சேருவதை தடுக்க முடியும். நாம் சாப்பிடும் அனைத்து சர்க்கரையும் தீங்கானது அல்ல. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் வழியே கிடைக்கும் சர்க்கரை உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இனிப்பு பலகாரங்கள், பிஸ்கட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் மூலம் கிடைக்கும் சர்க்கரை உடலுக்கு தீங்கானது. சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றும்போது உடலில் சேரும் தேவையற்ற சர்க்கரையை தடுக்க முடியும்.

சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றுவது என்பது ஒன்றும் அவ்வளவு கடிமான காரியம் அல்ல. டையட்டில் சர்க்கரை உணவுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை சோடா, கடைகளில் விற்பனை செய்யப்படும் தயிர், கெட்சப், சாஸ், நார்ச்சத்து மிக்க பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அளவுக்கதிமான சர்க்கரை உடலில் சேரும்போது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இதயப் பிரச்சனைகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். ஒருவர் ஒரே நாளில் சர்க்கரையை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது. தொடர்ச்சியான பழக்க வழக்கங்கள் மூலம் சர்க்கரை சேருவதை கட்டுப்படுத்தலாம்.

சுகர் டீடாக்ஸ் முறையை ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு பின்பற்றலாம். இதனை பின்பற்றுவதற்கான முக்கிய நோக்கம் சர்க்கரையுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பை குறைப்பது மட்டுமே. ஓரிரு வாரங்கள் பின்பற்றியபிறகு மீண்டும் ஒரு சில நாட்கள் கொஞ்சமாக இயற்கை வழியில் கிடைக்கும் சர்க்கரை உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை உணவுகளை சேர்த்துக்கொள்வதையும், தவிர்ப்பதையும் மாறிமாறி செய்யும்போது உடலுக்கு கூடுதலான சில நன்மைகளும் உள்ளன.

1. சுகர் டீடாக்ஸ் முறையை பின்பற்றினால் உடலில் அதிகப்படியாக சேரும் கலோரிகள் குறையும், உடல் எடையும் குறையும்

2. உடலில் சேரும் சர்க்கரை குறையும்

3. இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உருவாவதை குறைக்கிறது.

4. சுவாசப் பிரச்சனைகள் பல் பிரச்சனைகள் போன்றவற்றை குறைத்து வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சர்க்கரையை தவிர்ப்பது என்பது பலருக்கும் கஷ்டமான விஷயம். சர்க்கரை எடுத்துகொள்வதை குறைக்கும்போது அது சில அறிகுறிகள் மூலம் நமக்கு அதனை உணர்த்தும். இந்த அளவு குறையும்போது சர்க்கரையை எடுத்துக்கொள்ளுமாறு மூளை உங்களை தூண்டும். ஒரு சிலருக்கு தலைவலி, சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும்.

இந்தமாதியான சூழல்களை எதிர்கொள்பவர்கள் காலை உணவில் அதிகப்படியான புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகள், ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். உடனடியாக சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது முழு பயனையும் கொடுக்காது. படிப்படியாக உணவில் சர்க்கரையை குறைப்பது மட்டுமே சிறந்த வழியாகும். தானியங்கள், நட்ஸ் மற்றும் கொழுப்புள்ள மீன்களை உணவாக எடுத்துக்கொள்வதுடன், மதிய உணவுகளில் அவகோடா சேர்த்துக்கொள்ளலாம்.

புரோட்டின் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரையின் தேவை அதிகம் இருக்காது. தர்பூசணி, வாழைப்பழம் போன்ற பழங்கள் வழியாக கிடைக்கும் இயற்கையான சர்க்கரையை எடுத்துகொள்ளலாம். இனிப்பு தன்மை கிடைப்பதுடன், நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. பாக்கெட் உணவுகள், பாக்கெட் பழச்சாறுகள் செயற்கை சர்க்கரை கொண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

Editor's Choice

தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு, பல தன்னார்வ அமைப்புகளும் ரத்த தான முகாம்கள் நடத்தி ரத்த வங்கிகளில் சேமிக்கின்றன.

ஆனால் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் தன்னார்வலர்கள் பலர் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளதால், ரத்த தானம் செய்யவில்லை.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு போதிய இடைவெளி விட்ட பிறகே ரத்த தானம் செய்ய முடியும் என்பதால் அவர்களால் சுமார் 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.

ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் ரத்த வங்கி அதிகாரிகள்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 150 ரத்த தான முகாம்களை நடத்தும் சென்னை செஞ்சிலுவை சங்கம் கடந்த ஆண்டு வெறும் 65 முகாம்கள் மட்டுமே நடத்தியது. கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 சதவீதம் ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைந்தது. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் என்கிறது அச்சங்கம்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னர் ரத்த தானம் செய்துவிட்டு சென்றால், ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை ஓரளவு கட்டுப்படுத்த முடியும், கொடையாளிகள் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினால் அவர்கள் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு பிறகு 30 நாள் இடைவெளி விட்டு ரத்த தானம் செய்துகொள்ள தகுதியாகும் வரை ரத்த வங்கிகளில் வரத்து தட்டுப்பாடு ஏற்படலாம்,'' என்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

''சாலை விபத்துகள் கடந்த ஆண்டு குறைவாக இருந்தது. பல அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. ரத்தத்தின் தேவை சிறிதளவு குறைந்திருந்தாலும், நம்மிடம் அவசிய தேவைக்கு இருக்கவேண்டிய அளவு ரத்த வங்கிகளில் இல்லை,'' என்றும் அச்சங்கம் கூறுகிறது.

''ஏ நெகடிவ் மற்றும் ஏபி நெகடிவ் உள்ளிட்ட அரிதான ரத்த வகை கொண்ட நபர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைப்பது சிரமம். அரிதான ரத்த வகை கொண்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்னர், ரத்த தானம் செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்.

''ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை உடனடியாக அரசாங்கம் நிறுவுகிறது. ஆனால் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த தேவையை உடனடியாக தீர்க்க முடியாது. தடுப்பூசி முகாம்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரத்த தானத்திற்கு இப்போது தரவேண்டும்,'' என்று பலர் கூறுகின்றனர்.

பக்கம் 14 / 49