Editor's Choice

கொரோனா பாதிப்பின் அறிகுறி காய்ச்சலாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை; தலைவலியாகவும் இருக்கலாம். வைரஸ் பாதித்த பலருக்கு, முதல் அறிகுறி தலைவலியாக உள்ளது. தொற்றின் அறிகுறியாக தலைவலி வந்தால், மற்ற தலைவலிகளில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டியதில்லை.

தலைவலி என்று வருபவர்களில், சிலருக்கு, பிம்பங்கள் இரண்டிரண்டாக தெரிவதாக சொல்கின்றனர். கரு விழியின் அசைவிற்கு காரணமான, 'கிரேனியல்' நரம்புகளை வைரஸ் பாதிக்கும் போது, பிம்பங்கள் இரண்டிரண்டாக தெரியும். முகத்தில் உள்ள தசைகள் வலுவிழந்து, சோர்வடைந்து, முகங்களில் இருக்கும் நரம்புகள் பாதித்து, முக பக்கவாதத்தையும் ஏற்படுத்தலாம்.

இதனால் சுவை நரம்புகள் பாதிப்பும், நுகரும் தன்மை பாதிப்பும் வருகிறது. சுவாசிக்கும் போது, மூக்கின் உள் பகுதியான அண்ணத்தில் உள்ள நரம்புகளின் வழியே வைரஸ் சென்றால், மூளையை பாதிக்கும்; சுவாசப் பாதையில் சென்றால், நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதுகு தண்டில் உள்ள புற நரம்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கிறது. மூளைக்குள் வைரஸ் சென்றால், மூளை பகுதி முழுதும் ரணமாகி விடுகிறது. மூளையின் மேல் பகுதியில் உள்ள அடுக்கை பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்தும்.
மூளையின் மேல் அடுக்கின் மேல் படிமம் ஏற்பட்டு, பல சேதங்கள் இருப்பதை, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்தால் தெரியும்; மூளையே புண்ணாகி விடுவதும் உண்டு. காய்ச்சல், வலிப்பு வந்தால், மூளையின் மேல் புறத்தில் உள்ள அடுக்கு பாதித்து இருக்கிறதாக என்று பார்க்கப்படும். தற்போதைய சூழலில், கொரோனா பாதிப்பு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

வலிப்பு நோய் பிரச்னை இல்லாதவர்களுக்கும், வைரஸ் பாதிப்பு பல சமயங்களில், வலிப்பை உண்டு பண்ணுகிறது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவற்றையும் இவ்வைரஸ் உண்டாக்குகிறது. தொற்று நுரையீரலை பாதிக்கும் போது ஏற்படும் தீவிரமான விளைவுகளை போன்று, நரம்பு மண்டல பாதிப்பு இருப்பதில்லை. தொற்றை கட்டுப்படுத்த ஸ்டிராய்டு மருந்துகள் தரப்படுகிறது.

ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்துவதால், சுவாசப் பாதையில், பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


Editor's Choice

கொரோனா வைரஸ், நுரையீரலைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதால், இந்த நோயாளிகளின் உயிரைக் காக்க வெளியிலிருந்து ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நோயாளிகள். ஆக்சிஜன் தேவையுடன் மருத்துவமனைகளில் போராடி வருவதால், பல மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ஆக்சிஜன் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜனைவிட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவுதான் அதிகம்.

ஆக்சிஜன் பெரும்பாலும் காற்று மண்டலத்தில் இருந்துதான் சேகரிக்கப்படுகிறது. ஆனால், இதற்கான முறை மிகச் சிக்கலானது. "ஆக்சிஜனை உற்பத்தி செய்ய காற்று மண்டலத்தில் உள்ள காற்றை எடுத்து, சுத்தப்படுத்தி உயர் அழுத்த கலன்களுக்குள் கொண்டுசெல்ல வேண்டும்.

அப்படி கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் வெகுவாக குளிர்விக்கப்படும். இதனால், கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் ஒரு கட்டத்தில் திரவமாக மாறும். அப்போது அதன் வெப்பநிலை - 195 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும். ஆக்சிஜனுக்கும் நைட்ரஜனுக்கும் வெப்பநிலையில் 5 டிகிரி வித்தியாசம் இருக்கும்.

இந்த நிலையில், ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன் (fractional distillation) என்ற முறையில் ஆக்சிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்து எடுக்கப்படும். அந்த ஆக்சிஜன் பிறகு சிலிண்டர்களிலோ, டேங்கிலோ சேர்த்து வைக்கப்படும். டேங்கில் என்றால் திரவ வடிவில் இது சேகரிக்கப்படும். சிலிண்டர்களில் வாயு வடிவில் சேகரிக்கப்படும்" .

இப்படி உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மிகமிகக் குறைந்த வெப்பநிலையில்தான் தொடர்ந்து சேமிக்கமுடியும் என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட இரட்டை அடுக்குகளால் ஆன கொள்கலன்களில்தான் சேமிக்கவோ, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவோ முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறிதும் பெரிதுமாக 18 - 19 நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஏழு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.

இதில் மூன்று நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை சப்ளை செய்கின்றன. பல பெரிய உலோக தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், அவர்களே உற்பத்திசெய்து கொள்கின்றனர்.

தொழில்துறைக்கும் மருத்துவத்திற்கும் ஒரே மாதிரியான ஆக்சிஜன்தான் பயன்படுத்தப்படுகிறது. "ஆனால், மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் என்றால், சில பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அவற்றை மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும். மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனில் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கக்கூடாது. 99 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும்.".

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 300 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதில் 30 சதவீதம் மருத்துவத்திற்கும் மீதமுள்ள 70 சதவீதம் தொழில்துறைக்கும் செல்லும். இப்போது மருத்துவத்திற்கு பெருமளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால் தொழில்துக்கு ஆக்சிஜன் அளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவனைகளுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கும்.

"ஆக்சிஜனின் விலை என்பது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. வாயு வடிவில் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் விலை 25 ரூபாய் என்ற அளவில் இருக்கும். திரவ வடிவில் என்றால் ஒரு கியூபிக் மீட்டர் 78 ரூபாய் என்ற அளவில் இருக்கும். மருத்துவமனைகளில் படுக்கை உயரத்திற்கு உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை என்பது 60 - 70 ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஆனால், பொதுவாகவே ஆக்சிஜன் விலையைவிட, அதனை தொழிற்சாலைகளில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான செலவுதான் அதிகம்".

'ஆக்சிஜன் ஜெனரேட்டர்' என்ற எந்திரத்தை வைத்து வீட்டிலேயே ஆக்ஸிஜன் தயாரிக்கலாம்.

"ஆனால், அதன் தூய்மை 93 சதவீதம்தான் இருக்கும். தவிர, ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் என்ற அளவில்தான் அந்த எந்திரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியாகும். சாதாரணமான நோயாளிகளுக்கு அது போதுமானது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது போதாது. அவர்களுக்கு நிமிடத்திற்கு 15 லிட்டர் அளிக்க வேண்டும். தவிர, மின்சாரம் இல்லாவிட்டால் அந்த எந்திரத்தை இயக்க முடியாது".

மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் இல்லாமல் ஆக்சிஜனை வாங்க முடியாது. தவிர, சாதாரண சூழலில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவையும் இல்லை."

ஆக்சிஜனை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. திரவ வடிவிலான ஆக்சிஜனை சேமித்து வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகி விடும். வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை சிலிண்டரில் கூடுதலாக சில நாட்களுக்கு பாதுகாத்து வைக்கலாம். ஆனால், ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் 10,000 ரூபாய் வரும். ஆனால், அதில் 200 ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜனை மட்டுமே சேமிக்க முடியும். ஆகவே, சிலிண்டர்களில் முதலீடு செய்ய பெரிதாக யாரும் முன்வர மாட்டார்கள். ஆகவே அவ்வப்போது உற்பத்தி செய்து பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் முன் தீர்மானித்த விலையில் கொள்முதல் செய்து, விநியோகிக்கிறது.

Editor's Choice
சமையலுக்கு பெரிது உபயோகப்படுவது கறிவேப்பிலை. இதை தனியாக சமைக்காது மற்ற சைவ, அசைவ உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து உண்பர். இதுவும் கீரை வகையைச் சேர்ந்ததே. மரமாக வளர்ந்து பலன் தரக்கூடியது.
 
இதில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்ச்சத்து பெருமளவில் உள்ளது. அத்துடன் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் உள்ளன. இதை வதக்காமல் வேக வைக்காமல் இருப்பதே நல்லது. அதனால் இதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறலாம்.
 
இதைச் சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால் முழு சத்தையும் பெற வாய்ப்புண்டு. இது உடலுக்கு சிறிது வெப்பத்தையும் அளிக்கவல்லது.  இது உடலுக்கு பலத்தை அளிப்பதுடன், எலும்புகளுக்கும் வலுவை அளிக்கிறது. நரம்புத் தளர்ச்சி இருந்தாலும் நீங்கிவிடும்.
 
மேலும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை நீக்கவல்லது. பித்தக் காய்ச்சல், வாந்தி, கிறுகிறுப்பு, வயிற்றுவலி, வயிற்றில் இரைச்சல் போன்ற தொல்லைகளுக்கு பூரண நிவாரண அளிக்கும்.
 
குடல், கல்லீரல், மண்ணீரல் மர்றும் சீரண மண்டல உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது.உணவு எளிதில் சீரணமாக உதவும். மலச்சிக்கலையும் போக்கும்.

சீதபேதியை நிறுத்தும் ஆற்றலும் இதற்குண்டு. கண்பார்வையில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி பார்வையை தெளிவடையச் செய்யும். ஆண்மை குறைவைப் போக்கவல்லது. சாதாரண காய்ச்சலுக்கும் இதை சாப்பிட்டு குணம் பெறலாம்.

இந்த இலையை உடைத்து வடையாகத் தட்டி தேங்காய் எண்ணையுடன் சேர்த்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து தைலம் தயாரிக்கலாம். இதைத் தலையில் தேய்த்து வர பித்த மயக்கம் போகும். முடி நரைக்காது.
Editor's Choice
உடம்பு ரொம்ப சூடாகுது என்பது அநேகரால் சொல்லப்படும் ஒரு பாதிப்பு. இதற்கான பொதுவான காரணங்கள்…
 
இறுக்கமான ஆடை
ஜுரம்
தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலை செய்தல்
கடும் உழைப்பு
மருத்துவ காரணங்கள்
சில மருந்துகள்
நரம்புக் கோளாறுகள்
 
அதிக வெய்யில் உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்
 
இளநீர் குடிக்க வேண்டும்.
 
கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 
பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 
உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும்.
 
ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம்.
 
காய்கறி உணவு சிறந்தது.
 
ஒரு பேசினில் குழாய் நீர் பிடித்து பாதங்களை அதில் சிறிதுநேரம் அமிழ்த்தி வைக்கலாம்.
 
வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
 
சந்தனம், பன்னீர் கலந்து உடலில் தடவலாம்.
 
ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.
 
பழங்கள் உண்பது உடல் சூட்டினைத் தணியச் செய்யும்.
 
ஏலக்காய் டீ, பால் சிறந்தது.
 
மோர் சூட்டை நன்கு தணிக்கும்.
 
92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி’ சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
 
கிர்ணி பழம் வெய்யில் காலத்தில் உண்ண வேண்டிய ஒன்று.
 
வெள்ளரிக்காயினை அடிக்கடி தினமும் சாப்பிடுங்கள் அல்லது தோல் சீவி ஜுஸ் செய்து குடியுங்கள்.
 
புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
 
முள்ளங்கி சூட்டை தணிக்கும். எதிர்ப்பு சக்தியினைத் தரும். வைட்டமின் `சி’ சத்து நிறைந்தது. வீக்கங்கள் குறைக்கவல்லது.
 
எள் உண்பதும், நல்லெண்ணை உடலில் தேய்ப்பதும் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
 
சோம்பு ஊற வைத்த நீர் உடலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும்.
 
குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.
 
பாதாம் பிஸின் சிறிது, இரவில் நீரில் ஊற வைத்து காலை பாலுடன் கலந்து பருக சூடு தணியும்.
 
நனைத்த பருத்தி ஆடையினை உடலில் 15-20 நிமிடம் சுற்றி இருக்க உடலில் சூடு தணியும்.
 
சாதாரண நீர் குடிப்பது உடலை குளிரச் செய்யும்.
 
துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
 
தனியா, சீரகம், சோம்பு இவற்றினை பொடித்து நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க உஷ்ணம் குறையும்.
 
தேங்காய் எண்ணை உடலில் தேய்த்துக் குளிக்க சூடு தணியும்.
 
கொழுப்பற்ற தயிர் தினமும் உட்கொள்ளுங்கள்.
 
மனதினை அமைதியாய் வைத்திருப்பதும், யோகா செய்வதும் உடல் சூட்டினைத் தணிக்கும்.
 
தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.
 
தினமும் ஒரு எலுமிச்சை சாறு அருந்தலாம்.
 
ஆப்பிள் உடல் சூடு தணிய உதவும்.
Editor's Choice

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியாவிடம் இருந்து பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 
 
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டிருந்த மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Editor's Choice

சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை.

 

தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.

 
மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது.

பக்கம் 17 / 49